சிங்கப்பூரின் முக்கிய எதிர்க்கட்சியான பாட்டாளிக் கட்சியைச் சேர்ந்த உயர்மட்டத் தலைவர்கள், நாடாளுமன்ற சிறப்புரிமைகள் குழு (சிஓபி வெளியிட்ட அறிக்கை நாடாளுமன்றத்தில் அடுத்த வாரம் விவாதத்திற்கு வரும்போது அது பற்றி தங்களுடைய கருத்துகளை எடுத்துரைக்க முடிவு செய்துள்ளனர்.
பாட்டாளிக் கட்சி நேற்று வெளியிட்ட அறிக்கையில் தமது கட்சியைச் சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரயீசா கானுக்கு நாடாளுமன்றத்தில் பொய் சொன்னதற்காக $35,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளதை சுட்டிக் காட்டியது.
எதிர்க்கட்சித் தலைவராகவும் அல்ஜுனிட் குழுத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருக்கும் பிரித்தம் சிங்கை அரசாங்க வழக்கறிஞர் மூலம் மேலும் விசாரிக்க வேண்டும் என்று குழு பரிந்துரைத்துள்ளது.
அதே தொகுதியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரும் பாட்டாளிக் கட்சியின் துணைத் தலைவருமான ஃபைசல் மனாப்பும் அதே போன்று விசாரிக்கப்பட வேண்டும் என்று குழு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் பாட்டாளிக் கட்சி அறிக்கை ஒன்றை நேற்று வெளியிட்டது.
அதில், தற்போது ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் பாட்டாளிக் கட்சிக்கு மிகுந்த கவலையளிப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
"கடந்த முறை 1980களில் அரசியல் செயல்பாடுகள் தொடர்பில் அப்போதைய எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினருக்கு எதிராக குற்றவியல் குற்றச்சாட்டுகள் கொண்டு வரப்பட்டன," என்று பாட்டாளிக் கட்சி நினைவூட்டியது.
திரு பிரித்தம் சிங், சில்வியா லிம், திரு ஃபைசல் ஆகியோர் சிறப்புரிமைக் குழு அறிக்கை மீதான தங்களுடைய கருத்துகளை நாடாளுமன்றத்தில் தெரிவிப்பார்கள்.
மூவரும் அரசாங்க வழக்கறிஞருக்கு ஒத்துழைப்பு வழங்கி நீதிமன்றத்தில் தங்களுக்கு எதிராக குற்றச்சாட்டுகள் கொண்டு வரப்பட்டால் அதனை அவர்கள் தற்காத்து செயல்படுவார்கள். சிங்கப்பூருக்காகவும் சிங்கப்பூரர்களுக்காகவும் கட்சி தொடர்ந்து பாடுபடும் என்று அறிக்கை ேமலும் தெரிவித்தது.
"எங்களுடைய தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து எம்பிக்களும் தொகுதிகளுக்கு தொடர்ந்து சேவையாற்றுவார்கள். இதர தொகுதிகளில் கட்சியின் பணியும் தொடரும்," என்றது பாட்டாளிக் கட்சி.
கடந்த ஆண்டு ஆகஸ்ட், அக்டோபரில் நாடாளுமன்றத்தில் திருவாட்டி ரயீசா கான் பொய்யானத் தகவல் தெரிவித்தது குறித்து நாடாளுமன்ற சிறப்புரிமைகள் குழு விசாரணை நடத்தி கடந்த வியாழக்கிமை பரிந்துரைகளை வெளியிட்டது.
பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான பெண்ணுடன் காவல் நிலையத்திற்குச் சென்றதாகவும் அங்கு அதிகாரிகள் அந்த விவகாரத்தை முறையற்ற வகையில் கையாண்டதால் அந்தப் ெபண் அழுதுகொண்டே வெளியே வந்ததாகவும் ஆகஸ்ட் 3ஆம் தேதி திருமதி ரயீசா கான் பொய் கூறியிருந்தார். அக்டோபர் 4ஆம் தேதி அதே பொய்யை அவர் மீண்டும் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
இந்த விவகாரத்தில் சாட்சியம் அளித்த திரு சிங், பிரமாண வாக்குமூலத்தின் கீழ் எடுத்துக்கொண்ட உறுதிமொழிக்கு ஏற்ப உண்மையாக நடந்து கொள்ளவில்லை என்று சிறப்புரிமைக் குழு கூறியது. இதுவொரு கடுமையான குற்றம் ஆகக்கூடும் என்பதால் அவரிடம் அரசாங்க வழக்கறிஞர்கள் மேல் விசாரணை நடத்த வேண்டும் என்றும் குழு பரிந்துரை செய்தது.
குழுவின் அறிக்கை அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் விவாதத் திற்கு வருகிறது. அப்போது குழு வின் பரிந்துரைகளை ஏற்றுக் கொள்வது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிப்பார்கள்.

