'ஏஎக்ஸ்ஏ' சிங்கப்பூர் நிறுவனத்தை எச்எஸ்பிசி கையகப்படுத்துவதற்கு சிங்கப்பூர் நாணய ஆணையம் அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இதையடுத்து இவ்வட்டார காப்புறுதி சந்தையில் மேம்பட்ட நிலையை எட்டுவதற்கு எச்எஸ்பிசிக்கு வழி ஏற்பட்டுள்ளது.
தனக்குச் சொந்தமான துணை நிறுவனமான எச்எஸ்பிசி காப்புறுதி (ஆசியா-பசிபிக்), சிங்கப்பூரில் உள்ள ஏஎக்ஸ்ஏ காப்புறுதி நிறுவனத்தை 529 மில்லியன் யுஎஸ் டாலருக்கு (S$712) கையகப்படுத்துவதாக நேற்றைய அறிக்கையில் எச்எஸ்பிசி வங்கி தெரிவித்தது.
கடந்த ஆண்டு ஆகஸ்டில் இந்த உடன்பாடு குறித்து முதல் முறையாக அறிவிக்கப்பட்டது.
ஏஎக்ஸ்ஏ சிங்கப்பூர் நிறுவனமும் எச்எஸ்பிசியின் தற்போதைய எச்எஸ்பிசி லைஃப் இன்ஷூரன்ஸ் நிறுவனமும் ஒருங்கிணைக்கப்பட்டு இவ்வாண்டு பிற்பாதியில் செயல் படத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது, உள்ளூர் ஒழுங்குமுறை, நீதிமன்ற ஒப்புதல் களைப் பொறுத்து அமையும்.
ஆனால் ஏஎக்ஸ்ஏ சிங்கப்பூர் நிறுவனத்தின் அமல்படுத்தியுள்ள கொள்கைகளில் எந்த விளைவுகளும் ஏற்படாது என்று எச்எஸ்பிசி சொன்னது.
ஒருங்கிணைக்குப் பிறகு சிங்கப்பூரின் ஏழாவது ஆகப்பெரிய நிறுவனமாக அது இருக்கும். மொத்த சந்தாவின் அடிப்படையில் நான்காவது பெரிய பொதுச் சுகாதார நிறுவனமாக அது விளங்கும்.
எச்எஸ்பிசியின் ஆசிய பசிபிக் வட்டாரத்துக்கான இணை தலைமை நிர்வாகி சுரேந்திர ரோஷா, ஏஎக்ஸ்ஏ சிங்கப்பூர் நிறுவனத்தை கையகப் படுத்துவதால் ஆசியாவில் மக்களின் பாதுகாப்பு மற்றும் நிதி வளத்தை பாதுகாக்கும் எச்எஸ்பிசியின் ஆற்றல் மேம்படும் என்றார்.
எச்எஸ்பிசி சிங்கப்பூர் தலைமை நிர்வாக அதிகாரியான கீ ஜூ வோங், இந்தக் கையகப்படுத்துதல் மூலம் சிங்கப்பூரில் எங்களுடைய காப்பீட்டுத் திறனை விரிவுபடுத்து வது மட்டுமல்ல, வாடிக்கையாளர் களுக்கு மிகவும் முழுமையான வங்கியாக விளங்கும் என்று தெரிவித்தார். இரண்டு நிறுவனங்களும் ஒருங்கிணைக்கப்படுவதால் வாடிக்கையாளர்களுக்கு ஆயுள் காப்புறுதி, சுகாதாரப் பராமரிப்பு, செல்வம், வங்கிச் சேவைகள் உள்ளிட்டவற்றை முழுமையாக வழங்க முடியும் என்று கூறினார்.

