கேடிவி கூடம் என்று சந்தேகிக்கப்படும் இடத்தில் பத்து பெண்கள் கைது, ஒருவருக்கு கொவிட்-19 உறுதி
இரவு கேளிக்கைக் கூடம் என்று சந்தேகிக்கப்படும் இடத்தில், உபசரிப்புப் பெண்களாக பணியாற்றியதாக நம்பப்படும் பத்து பேரைக் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
வெளிநாட்டு ஊழியர் வேலை நியமனச் சட்டத்தின்கீழ் அவர்கள் குற்றம் புரிந்ததற்காக கைது செய்யப்பட்டனர் என்று காவல் துறையினர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டனர்.
கைது செய்யப்பட்ட பெண்களில் ஒருவருக்கு கொவிட்-19 தொற்று இருப்பது உறுதியானதாகவும் அது ஏஆர்டி பரிசோதனையில் தெரிய வந்ததாகவும் கூறப்படுகிறது.
சிம் லிம் ஸ்குவேரில் அமைந்துள்ள ஓர் உணவுவிடுதியில் இம்மாதம் 9ஆம் தேதியன்று அதிகாரிகள் மேற்கொண்ட அமலாக்கச் சோதனையில் 24 வயதுக்கும் 48 வயதுக்கும் இடைப்பட்ட அந்த 10 பெண்களும் சிக்கியதாகக் கூறப்பட்டது. அந்தப் பெண்கள், விடுதி வாடிக்கையாளர்களுடன் கலந்துறவாடிக் கொண்டிருந்தாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், உணவுவிடுதி கேடிவி கூடமாகச் செயல்பட்டது என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
பிடிபட்ட பெண்கள் மலேசியா, வியட்னாம், சீனா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்று நம்பப்படுகிறது.
இதற்கிடையே, கொவிட்-19 பாதுகாப்பு நிர்வாக நடவடிக்கைகளை மீறியதற்காக மேலும் 18 பேர் மீது காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கேடிவி கூடத்தை நடத்தியதாக அடையாளம் காணப்பட்டுள்ள 34 மற்றும் 61 வயதுகளுடைய இரு ஆடவர்கள் மீது, மதுபானக் கட்டுப்பாட்டு (விநியோகம் மற்றும் பயன்பாடு) சட்டத்தின் கீழ் விசாரணை நடந்து வருகிறது. கொவிட்-19 பாதுகாப்பு நடைமுறைகளை மீறியதன் தொடர்பிலும் அவர்கள் விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.
சிம் லிம் ஸ்குவேர் கடைத்தொகுதியைக் கடந்த இரு வாரங்களாக கண்காணித்து வந்ததாகவும் கேடிவி கூடமாகச் செயல்பட்ட இடத்தைப் பற்றி காவல்துறைக்குத் தகவல் அளித்ததாகவும் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரிவித்தது.
மின்னியல், கணினித் தொடர்பான சாதனங்களுக்குப் பேர்போன சிம் லிம் ஸ்குவேர் கடைத்தொகுதி தினமும் இரவு 9.30 மணிக்கு மூடிய பின்னர் வாடிக்கையாளர்கள் மற்றும் உபசரிப்புப் பெண்கள் என்று நம்பப்படும் பலர், கடைத்தொகுதிக்குள் நுழைந்ததாகக் கூறப்படுகிறது.
சந்தேகத்திற்குரிய கேடிவி கூடம், கட்டடத்தின் ஆறாவது மாடியில் இயங்கியதாகக் கூறப்படுகிறது. அங்குள்ள வெவ்வேறு அறைகளுக்குச் செல்வதே உபசரிப்புப் பெண்களின் வேலை என்றும் கூறப்படுகிறது.

