ஆடவருக்குச் சிறைத் தண்டனை, அபராதம்
தன்னிடம் இல்லப் பணிப்பெண்ணாக வேலை பார்த்த பிலிப்பீன்ஸ் நாட்டவரின் வேலை அனுமதி அட்டை விண்ணப்பத்தில் பொய்த் தகவல் அளித்ததுடன் தன் வீட்டில் அல்லாமல் வேறு இடத்தில் வேலை தேடிக்கொள்ள அனுமதித்ததற்காக 34 வயது ஹஃபிஸுடின் ஜாஃபருக்கு நேற்று ஆறு வாரச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
வேலை அனுமதி அட்டைக்காக விண்ணப்பிக்க, அந்தப் பணிப்பெண்ணிடமிருந்து $9,000க்கும் மேற்பட்ட தொகையை சிங்கப்பூரரான ஹஃபிஸுடின் பெற்றுக்கொண்டதாகவும் கூறப்பட்டது. இதற்காக ஹஃபிஸுடினுக்கு $50,750 அபராதம் விதிக்கப்பட்டபோதும் அவரால் அத்தொகையைச் செலுத்த முடியாத நிலையில் அதற்குப் பதில் மேலும் 14 வாரச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
தனது வேலை அனுமதி அட்டை விண்ணப்பத்தில் போலித் தகவல் அளித்ததற்காக கடும் எச்சரிக்கையுடன் மீண்டும் பிலிப்பீன்சுக்கு அந்தப் பணிப்பெண் அனுப்பப்பட்டுவிட்டார். அத்துடன் சிங்கப்பூரில் வேலை செய்யவும் பணிப்பெண்ணுக்குத் தடை விதிக்கப்பட்டது.
மனிதவள அமைச்சு நேற்று வெளியிட்ட அறிக்கையின்படி, 2018ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் தேதியன்று சமர்ப்பிக்கப்பட்ட வேலை அனுமதி அட்டை விண்ணப்பத்தில் ஹஃபிஸுடின் பொய்த் தகவல் அளித்திருந்ததாக விசாரணைகள் கண்டறிந்திருந்தன.
தன் வீட்டில் இல்லப் பணிப்பெண்ணாக அந்த 36 வயது பிலிப்பீன்ஸ் நாட்டவரை நியமிப்பதாக விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. இருப்பினும், பணிப்பெண் சிங்கப்பூரிலேயே இருந்தவாறு வேறு இடத்தில் வேலை தேடிக்கொள்ள ஹஃபிஸுடின் அவ்வாறு பொய்த் தகவல் அளித்திருந்ததாகக் கூறப்பட்டது.
பணிப்பெண்ணின் வேலை அனுமதி அட்டையைப் புதுப்பிக்க ஹஃபிஸுடின் 2019ஆம் ஆண்டு ஜனவரி 23ஆம் தேதியன்று விண்ணப்பித்திருந்தார். தொடர்ந்து பணிப்பெண் ஹஃபிஸுடினுக்காக வேலை செய்வார் என்ற நோக்கில் விண்ணப்பமும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
விண்ணப்பத்திற்காகவும் புதுப்பிக்கப்பட்ட வேலை அனுமதி அட்டைக்காகவும் ஜனவரி 2018க்கும் பிப்ரவரி 2020க்கும் இடைப்பட்ட காலத்தில் பணிப்பெண்ணிடமிருந்து ஹஃபிஸுடின் $9,380ஐப் பெற்றுக்கொண்டதாகக் கூறப்பட்டது.

