மோசடிகளில் ஈடுபட்டதாக 157 பேர் மீது காவல் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
சந்தேக நபர்களில் 97 பேர் ஆண்கள், எஞ்சியோர் பெண்கள் என்று கூறப்படுகிறது. அவர்களில் ஆக இளையவரின் வயது 16 என்றும் மூத்தவரின் வயது 71 என்றும் நம்பப்படுகிறது.
கிட்டத்தட்ட 495க்கும் மேற்பட்ட மோசடிச் சம்பவங்களில் இந்தச் சந்தேக நபர்கள் ஈடுப்பட்டதாகக் கூறப்படுகிறது.
மோசடிகளுக்கு ஆளானோர் இழந்த தொகை, $2 மில்லியனுக்கும் மேல் என நம்பப்படுகிறது.
சம்பவங்களில் இணையம் வழியாக காதல் வலையில் சிக்க வைத்தல், இணைய வர்த்தகம், தொழில்நுட்ப ஆதரவு, சீனா அல்லது அரசாங்க அதிகாரி போன்று பாசாங்கு செய்தல், முதலீடு, வேலை, கடன், வங்கி தொடர்பான மோசடிகள் அடங்கும்.
கடந்த மாதம் 28ஆம் தேதி தொடங்கி இம்மாதம் 10ஆம் தேதி நிறைவடைந்த காவல் அதிகாரிகளின் அமலாக்கச் சோதனைகளில் இந்தச் சந்தேக நபர்கள் சிக்கியதாக நேற்று வெளியிட்ட அறிக்கையில் காவல் துறையினர் குறிப்பிட்டனர்.
ஏமாற்றுதல், பணமோசடி, உரிமமின்றி கட்டணச் சேவைகள் வழங்குதல் போன்றவற்றின் தொடர்பில் சந்தேக நபர்கள் மீது விசாரணை நடந்து வருகிறது.
தங்களின் வங்கிக் கணக்கை அல்லது கைபேசி தொடர்பு எண்ணைப் பயன்படுத்திக்கொள்ள யாரேனும் கேட்டுக்கொண்டால் அதை மறுத்துவிடுமாறு காவல் துறை பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. சிங்கப்பூரில் 2016ஆம் ஆண்டு முதல் மோசடிக்கு ஆளானோர் இழந்த மொத்த தொகை $1 பில்லியன் இருக்கும் என்று கூறப்படுகிறது.
காவல்துறை அதிகாரிகள் கடந்த ஆண்டில் மட்டும் 7,000க்கும் மேற்பட்ட மோசடிக்காரர்கள் மீது விசாரணை மேற்கொண்டனர்.
மோசடிக்காரர்கள் பயன்படுத்திக்கொள்வதற்காக தங்களின் வங்கிக் கணக்குகளைச் சிலர் வாடகைக்கும் விட்டிருப்பதாக நம்பப்படுகிறது.

