மகனின் வெற்றியைக் கொண்டாடச் சென்ற மாது லாரி மோதி உயிரிழந்தார்: ஓட்டுநருக்குச் சிறை, தடை

மகனின் வெற்றியைக் கொண்டாடச் சென்ற மாது லாரி மோதி உயிரிழந்தார்: ஓட்டுநருக்குச் சிறை, தடை

2 mins read
2c5160b5-c694-4d73-85c5-6a0df635c0da
-

சாலை சந்­திப்பு ஒன்றை நெருங்­கிய லாரி ஓட்­டு­நர் கான் லியன் மின், 70, மெது­வாக வாக­னத்தை ஓட்­டி­னார். ஆனால் வலது புற­மா­கத் திரும்­பும் முன் லாரியை நிறுத்­த­வில்லை. இத­னால், பாத­சா­ரி­கள் கடக்­கும் இடத்­தில் கால்­வைத்த திரு­வாட்டி ஓர் செங் கிம், 52, என்­ப­வரை அந்த ஓட்­டு­நர் கவ­னிக்­க­வில்லை.

லாரி மோதி அந்த மாது மூன்று நாள்­கள் கழித்து மருத்­து­வ­ம­னை­யில் தலைக் காயங்­கள் கார­ண­மாக உயி­ரி­ழந்­தார். கவ­னக்­கு­றை­வாக வாக­னம் ஓட்­டி­ய­தற்­கா­க­வும் திரு­வாட்டி ஓருக்கு மர­ணம் விளை­வித்­த­தற்­கா­க­வும் கானுக்கு நேற்று நான்கு மாதச் சிறைத் தண்­டனை விதிக்­கப்­பட்­டது.

சிறை­யி­லி­ருந்து விடு­த­லை­யான பின், எட்டு ஆண்­டு­க­ளுக்கு அனைத்து வாக­னப் பிரிவு ஓட்­டு­நர் உரி­மங்­களை வைத்­தி­ருக்­க­வும் அவற்­றைப் பெற்­றுக்­கொள்­ள­வும் தடை­யும் விதிக்­கப்­பட்­டுள்­ளது.

பாலர் பள்ளி ஒன்­றில் உதவி ஆசி­ரி­ய­ரா­கப் பணி­யாற்­றிய திரு­வாட்டி ஓர், தம் மக­னின் சாதா­ரண நிலைத் தேர்வு முடி­வு­களை முன்­னிட்டு கொண்­டா­டு­வ­தற்­காக உணவு வாங்­கிக்­கொண்டு வீடு திரும்­பிக் கொண்­டி­ருந்­த­போது விபத்து நடந்­த­தா­கக் கூறப்­பட்­டது.

சம்­ப­வத்­தைக் காட்­டும் கண்­கா­ணிப்பு கேமரா காணொளி நேற்று நீதி­மன்­றத்­தில் ஒளி­ப­ரப்­பப்­பட்­ட­போது கான் தலை­கு­னிந்து காணப்­பட்­டார்.

காணொ­ளி­யில் குடை ஒன்­றைப் பிடித்­தி­ருந்த மாது ஒரு­வரை கான் ஓட்­டிச் சென்ற லாரி இடிப்­ப­தைக் காண முடிந்­தது. சம்­ப­வம் கடந்த ஆண்டு ஜன­வரி 12ஆம் தேதி­யன்று இரவு 8.30 மணி­ய­ள­வில் நடந்­த­தாக அறி­யப்­ப­டு­கிறது.

அச்­ச­ம­யத்­தில் மழை பெய்­து­கொண்­டி­ருந்­த­போ­தும் தெளி­வா­கப் பார்க்­கும் அள­வுக்­குச் சாலை­கள் இருந்­த­தா­கக் கூறப்­பட்­டது.

விபத்து நடந்­ததை அடுத்து காவ­லர்­க­ளுக்கு கான் தக­வல் தெரி­வித்­தார்.

"விபத்து நடந்­த­தி­லி­ருந்து கான் வருத்­தப்­ப­டாத நாளே இல்லை," என்று கானின் வழக்­க­றி­ஞர் திரு லுன் கூறி­னார். திரு­வாட்டி ஓருக்கு கான் இறுதி மரி­யாதை செலுத்­தச் சென்­ற­து­டன் அவ­ரு­டைய குடும்­பத்­தா­ரி­டம் மன்­னிப்­பும் கேட்­ட­தாகத் தெரி­விக்­கப்­பட்­டது.