செய்திக்கொத்து

செய்திக்கொத்து

1 mins read
9d411ed7-bdf3-4273-ad0f-8bfa0b8e1b9f
-

நீடித்து நிலைக்கக்கூடிய எண்ணெய்: முன்னோட்டத்தில் எஸ்ஐஏ, ஸ்கூட்

சாங்கி விமான நிலையத்திலிருந்து கிளம்பும் அனைத்து சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (எஸ்ஐஏ) மற்றும் ஸ்கூட் விமானங்களில் புதிய ஓராண்டு முன்னோட்டத் திட்டத்தின்படி, நீடித்து நிலைக்கக்கூடிய எண்ணெய் பயன்படுத்தப்படும். மூன்றாம் காலாண்டில் இத்திட்டம் தொடங்கும் என்று எஸ்ஐஏ மற்றும் சிங்கப்பூர் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் நேற்று வெளியிட்ட கூட்டு அறிக்கையில் தெரிவித்தன. இதுபோன்ற மேலும் பசுமையான விமான எண்ணெய் வகைகளைப் பயன்படுத்தும் இந்த ஓராண்டில் கிட்டத்தட்ட 2,500 டன்கள் கரியமில வாயு வெளியேற்றத்தைக் குறைக்கலாம். முன்னோட்டத் திட்டத்திற்கான எண்ணெய்யை வழங்க 'எக்ஸோன்மோபில்' நிறுவனம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

வரி செலுத்தப்படாத மதுபானத்தை கடத்த முயன்றவர்கள் கைது

வரி செலுத்தப்படாத சாராய வகை மதுபானத்தை சிங்கப்பூருக்குள் கடத்த முயன்றவர்களை குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணைய (ஐசிஏ) அதிகாரிகள் கைது செய்துள்ளனர். பாசிர் பாஞ்சாங்கில் குறிப்பிட்ட ஒரு கொள்கலனை ஸ்கேன் செய்ததை அடுத்து, சந்தேகத்தின் அடிப்படையில் கொள்கலன் பொருள்களை வெளியேற்ற அதிகாரிகள் உத்தரவிட்டனர். அவ்வாறு வரி செலுத்தப்படாத மதுபானம் கொண்ட 79 ஜாடிகளும் 86 புட்டிகளும் கைப்பற்றப்பட்டன. சிங்கப்பூரர் ஆடவர் ஒருவரும் வியட்நாமிய பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். மற்றொரு வியட்நாமிய பெண் ஒருவரும் விசாரணையில் உதவி வருவதாகக் கூறப்பட்டது. (படம்: ஐசிஏ)