செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
5359874f-98d4-415e-ab73-0dfe335770f7
-

கொரோனா தொற்று குறைவு

சிங்கப்பூரில் வெள்ளிக்கிழமை நிலவரப்படி மருத்துவமனைகளில் 1,205 கொவிட்-19 நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்தனர். தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்தவர்கள் 21 பேர் என்று சுகாதார அமைச்சு தெரிவித்தது. இந்த எண்ணிக்கைகள் வியாழக்கிழமை அளவைவிட கொஞ்சம் குறைவு. வெள்ளிக்கிழமை புதிதாக தொற்றுக்கு ஆளானவர்கள் 9,771 பேர் என்றும் இந்த எண்ணிக்கை வியாழக்கிழமை 10,542 ஆக இருந்ததாகவும் அமைச்சு குறிப்பிட்டது.

டோட்டோ: 8 பேருக்கு அடித்தது யோகம்; தலா $2.43 மி. பரிசு

சிங்கப்பூர் பூல்ஸ் நிறுவனம், இந்த ஆண்டு டோட்டோ ஹொங் பாவ் அதிர்ஷ்டக் குலுக்கில் முதல் பரிசாக $19.4 மில்லியன் தொகையை வழங்கியது. அதை எட்டுப் பேர் பகிர்ந்து கொள்கிறார்கள்.

இதைக் கணக்கிட்டுப் பார்க்கையில் அவர்கள் ஒவ்வொருவருக்கும் $2.43 மில்லியன் கிடைக்கும். சென்ற ஆண்டைவிட இந்த ஆண்டில் இரண்டு மடங்கு தொகை முதல் பரிசாக அறிவிக்கப்பட்டது.

அண்மைய காலத்தில் இந்த அளவுக்குத் தொகை முதல் பரிசாக கொடுக்கப்பட்டது இதுவே முதல் முறை என்று சிங்கப்பூர் பூல்ஸ் நிறுவனத்தின் இணையத்தளம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு டோட்டோ ஹொங் பாவ் அதிர்ஷ்டக் குலுக்கில் வென்ற எண்கள் 09, 13, 14, 16, 18 மற்றும் 28 ஆகும். கூடுதல் எண் 10. குலுக்கு வெள்ளிக்கிழமை இரவு 9.30 மணிக்கு நடந்தது.

விதிமீறல்: உரிமங்கள் ரத்து

கொவிட்-19 பாதுகாப்பு நிபந்தனைகளை மீறியதற்காக ஒன்பது உணவு, பானக் கடைகள் தங்கள் மதுபான விற்பனை உரிமங்களை இழந்ததாக காவல் துறை கூறியது.

அவற்றில் நான்கு நிறுவனங்களின் பொதுப் பொழுதுபோக்கு உரிமமும் ரத்து செய்யப்பட்டன. அந்த கடைகள் 10 நாள்கள் முதல் 30 நாள்கள் வரை மூடப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.

அவற்றுக்கு எதிராக வழக்குத் தொடுக்கப்படலாம் அல்லது அபராதம் விதிக்கப்படலாம் என்றும் காவல் துறை தெரிவித்தது.

ஆடவர் மீது புது குற்றச்சாட்டுகள்

அகம்மது ராபின்சன், 70, என்பவர் பேருந்து ஓட்டுநர் ஒருவரைத் தாக்கியதாகக் கூறப்பட்டது. அதையடுத்து அவரைக் கைது செய்ய உத்தரவிடப்பட்டது.

அந்த முதியவர் சென்ற வாரம் பிடிபட்டார். பிடிபடாமல் இருந்தபோது மேலும் பல குற்றங்களைச் செய்ததாக அகம்மது ராபின்சன் மீது இப்போது குற்றம் சுமத்தப்பட்டது.

சிங்கப்பூர் சிறைச்சாலை துறை கொடுத்திருந்த ஜிபிஎஸ் மின்னணுச் சாதனத்தை வெட்டி அகற்றியது, கத்தியைக் கொண்டு இருவரை மிரட்டியது, வாயில் புகைந்துகொண்டு இருந்த சிகரெட் நெருப்பைக் கொண்டு பெண் காவல்துறை அதிகாரி ஒருவரின் முன்கையைச் சுட்டு அதன் மூலம் அவருக்கு வேண்டு மென்றே காயம் ஏற்படுத்தியது ஆகிய செயல்களை அவர் செய்திருக்கிறார் என்று கூறப்படுகிறது.

அகம்மது ராபின்சனுக்குப் பிணை மறுக்கப்பட்டது. வழக்கு மார்ச் 10ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.