அம்மாவிடமிருந்து அடிக்கடி திட்டு வாங்கு வதுதான் தன் வேலை என்கிறார் 20 வயதான ரித்திக் பாண்டியன். இருவரும் எப்போதும் ஏதோ ஒரு காரணத்திற்காக முட்டிக்கொள்வார்களாம்.
இவ்வாறு அம்மா சாந்தியுடன் அன்றாடம் நடக்கும் வேடிக்கையான சம்பவங்களின் ஒன்றை, ரித்திக் காணொளியாக ஒருமுறை பதிவு செய்திருந்தார். அதைச் சமூக ஊடகத்தில் பதிவேற்றம் செய்ததை அடுத்து அது இரண்டு மில்லியன் பார்வைகளைப் பெற்றதாம்!
இதை இருவருமே எதிர்பார்க்கவில்லை. அம்மாவிடம் திட்டு வாங்கும் ரித்திக் பாண்டியனின் நகைச்சுவைக் காணொளிகள் சமூக ஊடகங்களில் தொடர்ந்து பிரபலமாகி வந்தன.
"பல்கலைக்கழகப் பாடங்களுக்கு இடையே குடும்பத்தாருடன் சேர்ந்து சிரிக்கவும் நேரம் செலவிடவும் இதுபோன்ற காணொளிகள் தயாரிப்பது மனதுக்கு உற்சாகம் அளிக்கிறது.
"எனது காணொளிகளுக்கு மக்கள் பதிவிடும் கருத்துகள் அனைத்தையும் அம்மா படித்துப் பூரிப்படைவார்," என்றார் சிம் நிர்வாகப் பல்கலைக்கழகம் மூலமாக லண்டன் பல்கலைக்கழகத்தில் (SIM-UOL) தரவு அறிவியல் மற்றும் வணிகப் பகுப்பாய்வுத் துறையில் பயிலும் ரித்திக்.
"பதின்ம வயதில் அம்மா தொடர்பாக இருந்த சிறுபிள்ளைத்தனமான மனக்குறைகளை எங்களது இந்த சமூக ஊடகப் பயணம் தீர்த்து வைத்துவிட்டது," என்றார் ரித்திக்.
அம்மாவுடன் அன்பாகப் பழகும் காணொளிகளையும் தான் பதிவேற்றம் செய்வேன் என்று கூறி ரித்திக் சிரித்துக்கொண்டார்.
"எவ்வளவு சோர்வும் தயக்கமும் எனக்கு ஏற்பட்டாலும் அம்மா அவற்றைப் போக்கி விடுவார். அன்பர் தினம் என்று தனியே ஒரு நாளை நான் கொண்டாடுவதில்லை.
"என் அம்மாவின் அன்புக்கு ஒவ்வொரு நாளும் நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்," என்றார் அன்பு மகன் ரித்திக்.

