கவலையும் அச்சமும் நிலவிய கொவிட்-19 கொள்ளைநோய்ச் சூழலில், அதிக மனஉளைச்சலுக்கும் உடல் சோர்வுக்கும் ஆளாகியவர்கள் மருத்துவத் துறையினர்.
அலெக்சாண்ட்ரா மருந்தகத்தில் உதவியாளராகப் பணியாற்றும் 28 வயது மலையரசி சிவம், அன்றாடம் பன்னிரண்டு மணி நேரம்வரை வேலை செய்ய வேண்டியிருந்தது.
இருப்பினும் தன் வேலையை உறுதியுடனும் உற்சாகத்துடனும் செய்வதற்கு முக்கியக் காரணமாக இருந்தவர் தன் காதலர், பவித்திரன் என்கிறார் அவர்.
"பவித்திரன் அடிக்கடி ரோஜாப் பூக்களுடனும் இனிப்புகளுடனும் எனது வேலையிடத்துக்கு வந்து காத்திருப்பார். அந்த இன்ப அதிர்ச்சிகள் எனக்கு உற்சாகமூட்டின. மன உளைச்சலைப் போக்கின," என்றார் மலையரசி.
அதிக சிரத்தையெடுத்து வாழ்க்கையில் திட்டமிடும் பவித்திரனும் திட்டமிடுதலில் அவ்வளவு ஈடுபாடு இல்லாத மலையரசியும் குணத்தில் வெவ்வேறுதான்.
ஆனால் அவர்களின் அன்பு ஒன்றே.
"நாங்கள் இருவரும் எங்களது குறைநிறைகளைப் பற்றிய புரிந்துணர்வை வளர்த்துக்கொண்டுள்ளோம். அது எங்களை மேலும் பிணைத்துள்ளது," என்றார்கள்.
"தன்னம்பிக்கை இல்லாமல் இருந்த எனக்கு தைரியம் ஊட்டியவர் மலையரசி. இன்றைக்குத் தைரியமாக நான் பேசுவதற்கும் மலையரசிதான் காரணம்," என்றார் வசந்தம் ஒளிவழியில் தொழில்நுட்பத்துறையில் பணிபுரியும் பவித்திரன் நாதன், 30.
ஏழு ஆண்டுகளாக ஒன்றாக உள்ள இந்த இளம் தம்பதியர், கடந்த ஆண்டு தங்களின் திருமணத்தை நிச்சயம் செய்து கொண்டனர்.
பிரம்மாண்டமான செயல்களைவிட அன்பான சொற்களும் எண்ணங்களுமே தங்களுக்கு அதிக அர்த்தமுள்ளதாக விளங்குவதாய் இவ்விருவரும் கூறினர்.

