வர்த்தக எரிசக்தி பயனாளர்கள் நிலையான விலையில் மின்சாரம் வாங்குவதற்கு உதவும் திட்டம் மே மாதம் வரை மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கப்படும் என்று வர்த்தக தொழில் இரண்டாம் அமைச்சர் டான் சீ லெங் நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
உலக எரிசக்தி நெருக்கடி, சிங்கப்பூரின் சிறிய, நடுத்தர நிறுவனங்களை எந்த அளவுக்குப் பாதிக்கும் என்று ஐந்து உறுப்பினர்கள் கேட்ட கேள்விக்குப் பதிலளித்த டாக்டர் டான், "நாங்கள் இந்தச் சலுகையை மே வரை மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கிறோம். சில்லறை வர்த்தகத் திட்டம் இல்லாத பயனீட்டாளர்கள் இந்தக் குத்தகைகளைப் பரிசீலிக்குமாறு ஊக்குவிக்கிறோம்," என்றார்.
டிரக்ஸ் எனும் தற்காலிக மின்சார ஒப்பந்த ஆதரவு திட்டம், மொத்த மின்சார விலைகளில் அண்மைய ஏற்ற இறக்கத்தில் இருந்து சிறிய, நடுத்தர நிறுவனங்களை கட்டுப்படுத்த ஜனவரி மாதம் எரிசக்திச் சந்தை ஆணையத்தால் தொடங்கப்பட்டது.
இந்தத் திட்டத்தின்கீழ், வர்த்தகப் பயனாளர்கள் ஒரு கிலோவாட் மணிநேரத்திற்கு (kWh) 39.7 காசு என்ற விகிதத்தில் மின்சாரக் கட்டணத்தைச் செலுத்தலாம்.
அவர்கள் செலுத்தும் உண்மையான கட்டணம், திட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆறு சில்லறை விற்பனையாளர்களுடனான அவர்களின் பேச்சுவார்த்தையைப் பொறுத்தது. ஜெனிகோ, கெப்பல் இலக்ட்ரிக், பசிபிக் லைட் எனர்ஜி, செம்ப்கார்ப் பவர், செனோக்கோ எனர்ஜி சப்ளை, துவாஸ் பவர் சப்ளை ஆகியவையே அவை.
மார்ச் மாதத்திற்கான ஒப்பந்த காலம் இன்று தொடங்கும் என்று எரிசக்திச் சந்தை ஆணையம் ஓர் அறிக்கையில் தெரிவித்தது. நீண்ட கால சில்லறை விற்பனை ஒப்பந்தங்களைப் பெற முடியாத பெரிய பயனீட்டாளர்களுக்கு மாதாந்திர ஒப்பந்தங்களை வழங்க எரிசக்தி நிறுவனங்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்களுடன் ஆணையம் தொடர்ந்து பணியாற்றும் என்று கூறப்பட்டது.
இந்தத் திட்டத்திற்குத் தகுதியுடைய பயனாளர்கள் வர்த்தக பயனீட்டாளர்கள். அவை மாதத்துக்கு சராசரியாக மணிக்கு 4,000 கிலோவாட் அல்லது மணிக்கு 4 மெகாவாட் எரிசக்தியைப் பயன்படுத்தும். இது நான்கு அறைகள் கொண்ட வீவக வீட்டின் சராசரி மாதாந்திர பயன்பாட்டை விட சுமார் 10 மடங்கு அதிகம்.
அத்தகைய வர்த்தக பயனீட்டாளர் மொத்த சந்தை அல்லது சில்லறை விற்பனையாளர்களிடமிருந்து மட்டுமே மின்சாரத்தை வாங்க முடியும். மேலும் சிங்கப்பூர் பவர் குழுமம் வழங்கும் ஒழுங்குபடுத்தப்பட்ட கட்டணத்தில் மின்சாரக் கட்டணத்தைச் செலுத்த முடியாது, இது தற்போது பொருள், சேவை வரிக்கு முன் ஒரு கிலோவாட் மணிநேரத்திற்கு 25.44 காசு.
டிரக்ஸ் திட்டங்கள் ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் முழுமையாக பயன்படுத்தப்பட்டன என்று குறிப்பிட்ட டாக்டர் டான், "எரிசக்திச் சந்தை ஆணையம் கணிசமான நிலையான விலைக் கூறுகளுடன் டிரக்ஸ் திட்டம் மூலமும் பிற திட்டங்கள் மூலமும் சுமார் 645 மெகாவாட் வழங்க மின்சார உற்பத்தி நிறுவனங்கள், மின்சார சில்லறை விற்பனையாளர்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளது," என்றார்.
குறைந்தது 200 மெகாவாட் எரிசக்தி வழங்கக்கூடிய ஒப்பந்தங்களை வர்த்தக பயனீட்டாளர்கள் பெற்றுக்கொள்ளலாம். அவற்றை இம்மாதத்தில் அவை வாங்கிக்கொள்ளலாம் என்றும் அமைச்சர் டான் சீ லெங் மேலும் தெரிவித் தார்.

