சிங்கப்பூருக்கும் இந்தோனீசியாவுக்கும் இடையே கையெழுத்தான பல உடன்பாடுகள்
சிங்கப்பூரும் இந்தோனீசியாவும் நீண்டகாலமாக இருந்து வந்த இருதரப்பு விவகாரங்கள் தொடர்பில் உடன்பாடுகள் கவனமான பேச்சுவார்த்தைக்குப் பிறகு பிறகு கடந்த மாதம் செய்துகொள்ளப்பட்டன.
அந்த உடன்பாடுகள் மூலம் இருதரப்புக்கும் நல்ல சமநிலையான பலன்கள் கிடைக்கும். அவை நீண்ட காலத்துக்கு நிலைத்திருக்கும் என மூத்த அமைச்சரும் தேசிய பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அமைச்சருமான டியோ சீ ஹியன் நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
ஆகாயவெளி நிர்வாகம், தற்காப்பு ஒத்துழைப்பு, கைதிகள் பரிமாற்றம் தொடர்பானவையே அந்த உடன்பாடுகள்.
மூத்த அமைச்சர் டியோவும் இந்தோனீசியாவில் கடல்துறை விவகாரங்கள், முதலீடுகள் ஆகியவற்றின் ஒருங்கிணைப்பு அமைச்சர் லுஹுட் பஞ்சாய்த்தானும் மூன்று உடன்பாடுகளும் ஒரேநேரத்தில் நடப்புக்கு வருகின்றன என்று கூறும் கடிதத்தில் கையெழுத்திட்டு அதைப் பரிமாறிக்கொண்டனர்.
இரு நாடுகளும் விமானத் தகவல் வட்டாரம் மற்றும் ராணுவப் பயிற்சி தொடர்பான உடன்பாடுகளை 1995ல் கையெழுத்திட்டன. ஆனால் அந்த முதலாவது விமானத் தகவல் வட்டார உடன்பாடு வெளிப்புற காரணங்களுக்காக அனைத்துலக சிவில் விமானப் போக்குவரத்து அமைப்பின் ஒப்புதலுக்கு அனுப்பப்படவில்லை.
ராணுவப் பயிற்சி தொடர்பான உடன்பாடு சில ஆண்டுகளுக்குப் பிறகு காலாவதியாகி விட்டது.
இருதரப்பும் மீண்டும் 2007ல் தற்காப்பு ஒத்துழைப்பு உடன்பாடு மற்றும் கைதிகள் பரிமாற்ற உடன்பாடு ஆகியவற்றுக்கு இணக்கம் கண்டு அவற்றை நடைமுறைப்படுத்த முயன்றன. ஆனால், இறுதி யில் இந்தோனீசியா அவற்றுக்கு ஒப்புதல் அளிக்கவில்லை.
பின்னர் 2019ல், பிரதமர் லீயும் அதிபர் ஜோக்கோவியும் தங்கள் தரப்பில் திரு டியோவையும் திரு லுஹுட்டையும் நியமித்து, விமானத் தகவல் வட்டாரம், தென்சீனக் கடலில் சிங்கப்பூரின் ராணுவப் பயிற்சி ஆகியவற்றுக்கான உடன்பாடுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி, ஆக்ககரமான முடிவைக் காண உத்தரவிட்டனர்.
"இந்த விரிவாக்கம் செய்யப்பட்ட கட்டமைப்பில் இடம்பெற்றுள்ள உடன்பாடுகள் இரு நாடுகள் உள்ளூர் அளவில் ஒப்புதல் பெற்றுவிட்டன. இப்போது விமானத் தகவல் வட்டார உடன்பாட்டுக்கு அனைத்துலக சிவில் விமானப் போக்குவரத்து அமைப்பின் ஒப்புதலைப் பெற சமர்ப்பிக்க வேண்டும்.
"சாங்கி விமான நிலையத்தின் தற்போதைய மற்றும் எதிர்கால தேவைகளைப் பூர்த்தி செய்வதே சிங்கப்பூரின் விருப்பமாக உள்ளது," என்றும் திரு டியோ கூறினார்.
நாட்டின் தேவைகளைத் தெளிவாகப் புரிந்துகொண்டு, அவற்றைத் துடிப்புடனும் அரசதந்திர ரீதியிலும் முன்வைத்து பேச்சுவார்த்தை நடத்தக்கூடிய வலுவான குழு சிங்கப்பூரிடம் உள்ளது. அதைப் போலவே, இந்தோனீசியக் குழுவும் தனது நாட்டின் தேவைகளுக்காகக் கடுமையாகப் பாடுபட்டது," என்றார்.

