முன்னாள் இல்லப் பணிப்பெண் பார்டி லியானியின் (படம்) வழக்கு விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் தங்கள் கடமையைச் சரிவரச் செய்யவில்லை என்றும் தங்கள் மீதான எதிர்பார்ப்புகளைப் பூர்த்திசெய்யவில்லை என்றும் கண்டறியப்பட்டுள்ளது.
விசாரணை அதிகாரி மீதும் அவரது மேல் அதிகாரி மீதும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அவர்களது சில மாதச் சம்பள உயர்வுத் தொகையை அடிப்படையாகக் கொண்டு அபராதத் தொகை கணக்கிடப்பட்டது.
உள்துறை அமைச்சர் கா. சண்முகம் நாடாளுமன்றத்தில் நேற்று இத்தகவல்களைத் தெரிவித்தார்.
இந்த விவகாரத்தில் காவல்துறை மேற்கொண்ட துறை ரீயான விசாரணை பற்றி மேல்விவரம் கேட்ட சுவா சூ காங் குழுத்தொகுதி உறுப்பினர் ஸுல்கர்னைன் அப்துல் ரஹிமுக்கு அமைச்சர் பதில் அளித்தார்.
இந்தோனீசியரான 47 வயது திருவாட்டி பார்டி லியானி, தமது முதலாளியிடமிருந்து திருடியதாகக் கூறப்பட்ட வழக்கில் அவர் குற்றமற்றவர் என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. அந்த வழக்கு பொதுமக்களின் கவனத்தைப் பெரிதும் ஈர்த்தது.
திருவாட்டி பார்டி லியானி, சாங்கி விமான நிலையக் குழுமத்தின் முன்னைய தலைவர் லியூ மன் லியோங்கின் வீட்டில் இல்லப் பணிப்பெண்ணாக வேலை செய்தார்.
கடந்த 2016ம் ஆண்டு அவரை வேலையிலிருந்து அக்குடும்பம் நீக்கியது. திருவாட்டி லியானி தங்களிடமிருந்து $43,000 மதிப்புள்ள பொருள்களைத் திருடியதாகவும் அது கூறியது.
அந்த வழக்கில் திருவாட்டி பார்டி லியானி குற்றவாளி என்று மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
ஆனால் அவரது தரப்பு செய்த மேல்முறையீட்டை விசாரித்த உயர்நீதிமன்றம் அவர் குற்றமற்றவர் என்று தீர்ப்பளித்தது.
அந்தச் சம்பவத்தை விசாரித்த அதிகாரியும் அவரது மேல் அதிகாரியும் செய்த மூன்று பிழைகளை திரு சண்முகம் பட்டியலிட்டார்.
முதலில் விசாரணை அதிகாரி விசாரணை நடத்தவும் தடயங்களைச் சேகரிக்கவும் குற்றம் நடந்த இடத்துக்கு உடனடியாகச் செல்லவில்லை. அதனால் தடயங்கள் முறையாக பதிவு செய்யப்படவில்லை.
இரண்டாவதாக, விசாரணையின்போது சில தரப்புகள் கூறிய தகவல்கள் சரியானவையா என்று அதிகாரி உறுதிப்படுத்தவில்லை.
மூன்றாவதாக, மேல் அதிகாரி அவருக்கு போதிய அளவில் வழிகாட்டவில்லை. கடினமான சூழலில் அந்த அதிகாரிகள் தங்கள் பணிகளைச் செய்தார்கள் என்று அமைச்சர் கூறினார்.
காவல்துறையில் உள்ள ஊழியர் பற்றாக்குறையால் அவர்களுக்கு வேலைப் பளு மிக அதிகமாக இருந்தது என்று திரு சண்முகம் கூறினார்.
இருப்பினும், அவர்களிடம் கொடுக்கப்பட்ட பணிகளை செய்யாத குறைபாட்டிலிருந்து தப்பிக்க இதை ஒரு காரணமாகவும் சொல்ல முடியாது. தங்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ள பணியைச் சிறப்பாக செய்வதே அவர்களின் கடமை. அதிலிருந்து தவறுவோர் தண்டிக்கப்படுவார்கள் என்றும் அமைச்சர் விளக்கினார்.

