மேலும் 9,420 பேருக்கு
கொவிட்-19 கிருமித்தொற்று
சிங்கப்பூரில் நேற்று முன்தின நிலவரப்படி மேலும் 9,420 பேருக்கு கொவிட்-19 கிருமித்தொற்று ஏற்பட்டது. இவர்களில் 9,195 பேருக்குச் சமூக அளவில் பாதிப்பு ஏற்பட்டது.
கிருமித்தொற்று காரணமாக நேற்று முன்தினம் மேலும் நான்கு பேர் மாண்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது.
கிருமித்தொற்றால் நோய்வாய்ப்பட்ட 1,272 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். கொவிட்-19 காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தொடர்ந்து ஒன்பது நாட்களாக 1,000ஐ தாண்டியுள்ளது. தீவிர சிகிச்சைப் பிரிவில் 24 பேர் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டது. மொத்தம் 162 பேருக்கு கூடுதல் உயிர்வாயு தேவைப்பட்டது.
வெளிநாடுகளிலிருந்து சிங்கப்பூருக்கு வந்த 225 பேருக்கு கொவிட்-19 கிருமித்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
மரணம் விளைவிக்கும்
விபத்துகள் அதிகரிப்பு
சிங்கப்பூர் சாலைகளில் மரணம், காயம் விளைவிக்கும்
விபத்துகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டு அதிகரித்ததாக போக்குவரத்துக் காவல்துறையினர் நேற்று தெரிவித்தனர். கடந்த ஆண்டு நிகழ்ந்த சாலை விபத்துகளில் 107 பேர் மாண்டதாக தெரிவிக்கப்பட்டது.
ஒப்புநோக்க, 2020ஆம் ஆண்டு சாலை விபத்துகளில் 83 பேர் உயிரிழந்தனர். இருப்பினும் கொவிட்-19 நெருக்கடி
நிலைக்கு முன்பு 2019ஆம் ஆண்டு நிகழ்ந்த சாலை விபத்துகளில் மாண்டோர் எண்ணிக்கை 118ஆகப் பதிவானது என்றும் அதனுடன் ஒப்பிடும்போது கடந்த ஆண்டின் மரண எண்ணிக்கை குறைவு என்றும் போக்குவரத்து காவல்துறையினர் வலியுறுத்தினர்.
2020ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், சிங்கப்பூரில் மரணம் விளைவிக்கும் சாலை விபத்துகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டு 25 விழுக்காடு அதிகரித்தது. கடந்த ஆண்டு சிங்கப்பூரில் நிகழ்ந்த சாலை விபதத்துகளில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கையும் ஏற்றம் கண்டது. 2020ஆம் ஆண்டில் நிகழ்ந்த சாலை விபத்துகளில் 6,669 பேர் காயமுற்றனர். கடந்த ஆண்டு இந்த எண்ணிக்கை 7,184ஆக அதிகரித்தது.
சாலை விபத்துகளில் காயமடைந்த முதியவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டு குறைந்ததாக போக்குவரத்து காவல்துறை தெரிவித்தது.

