விமான இயந்திரங்களை உற்பத்தி செய்யும் நிறுவனமான 'பிராட் அண்ட் விட்னி', இவ்வாண்டு மேலும் 250 முழுநேர ஊழியர்களைப் பணியமர்த்த இருக்கிறது.
கடந்த ஆண்டு புதிதாக 250 ஊழியர்களை அந்நிறுவனம் வேலைக்கு எடுத்தது.
அமெரிக்காவைச் சேர்ந்த இந்நிறுவனம், 2020க்கு முன்னர் ஏறத்தாழ 2,000 ஊழியர்களைப் பணியமர்த்தி இருந்தது.
ஆனால், விமானப் போக்குவரத்து துறைக்கு கொவிட்-19 ஏற்படுத்திய கடுமையான பாதிப்பு காரணமாக, 2020ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 400 ஊழியர்களை இந்நிறுவனம் ஆட்குறைப்பு செய்திருந்தது.
இப்போது பொறியாளர்கள், தொழில்நுட்பர்கள், தயாரிப்பு உதவியாளர்கள் உள்ளிட்டோரை இந்நிறுவனம் வேலைக்கு எடுக்கிறது. முன்னதாக இந்நிறுவனத்தில் இருந்து ஆட்குறைப்பு செய்யப்பட்டிருந்த ஊழியர்களும் விருப்பம் இருக்கையில் இந்த வேலைகளுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமான இயந்திரங்களை உற்பத்தி செய்யும் மற்றொரு நிறுவனமான 'ரோல்ஸ்-ராய்ஸ்', அடுத்த ஈராண்டுகளில் சிங்கப்பூரில் 280 ஊழியர்களை வேலைக்கு எடுக்க தான் திட்டமிடுவதாக முன்னதாக கூறியிருந்தது.

