கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்ட பேருந்து ஓட்டுநர்களின் எண்ணிக்கை முன்னெப்போதும் இல்லாத அளவு உயர்ந்ததால், செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 15) எஸ்பிஎஸ் டிரான்சிட் நிறுவனத்தில் கிட்டத்தட்ட 80 பேருந்து ஓட்டுநர்களுக்குப் பற்றாக்குறை ஏற்பட்டது.
இதனால், சில பேருந்துச் சேவைகளுக்குக் காத்திருக்கும் நேரம் அதிகரித்ததாக அந்நிறுவனம் அதன் ஃபேஸ்புக் பக்கத்தில் செவ்வாய்க்கிழமை மாலை பதிவிட்டது.
"அசௌகரியம் ஏற்பட்டதற்காக பாதிக்கப்பட்ட பயணிகளிடம் நாங்கள் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்," என்று அது கூறியது.
நிலைமையை தான் அணுக்கமாகக் கண்காணித்து வருவதாகக் கூறிய எஸ்பிஎஸ் டிரான்சிட், பேருந்துச் சேவைகள் இயக்கப்படுவதன் தொடர்பில் சில மாற்றங்களைச் செய்ய நிலப் போக்குவரத்து ஆணையத்துடன் தான் பணியாற்றவிருப்பதாகக் கூறியது.
கூடுதல் பயணிகளை ஏற்றிச்செல்லக்கூடிய கூடுதலான ஈரடுக்கு பேருந்துகள் குறிப்பிட்ட சில சேவைகளுக்குப் பயன்படுத்தப்படும் என்றும் எஸ்பிஎஸ் டிரான்சிட் சொன்னது.
இந்நிலையில், நிலப் போக்குவரத்து ஆணையம் வெளியிட்டுள்ள வேறொரு ஃபேஸ்புக் பதிவில், பேருந்துச் சேவையில் இடையூறு ஏற்படுவதைக் குறைக்க நிலைமையை தான் அணுக்கமாகக் கண்காணித்து வருவதாகக் கூறியது.
"பேருந்து ஓட்டுநர்களிடையே கொவிட்-19 தொற்று மேலும் அதிகரித்தால், கூடுதலான பேருந்துச் சேவைகளுக்கான காத்திருக்கும் நேரம் அதிகரிக்கலாம். பேருந்துச் சேவைகள் இயக்கப்படுவதில் மேலும் பல மாற்றங்கள் தேவைப்படுமாயின், அதுகுறித்து நாங்கள் உங்களுக்குத் தெரியப்படுத்துவோம்," என்று ஆணையம் விவரித்தது.

