எஸ்பிஎச் மீடியா டிரஸ்ட் நிறுவனம் அடுத்த ஐந்தாண்டுகளில்
ஆண்டுக்கு $180 மில்லியன் வரை
அரசாங்க நிதியுதவி பெறும்.
ஆறு மாதங்களுக்கு ஒருமுறை மேம்பாடு தொடர்பான அறிக்கையை அது சமர்ப்பிக்க வேண்டும் என்று தொடர்பு, தகவல் அமைச்சர் ஜோசஃபின் டியோ நாடாளுமன்றத்தில் நேற்று தெரிவித்தார். எஸ்பிஎச் மீடியா டிரஸ்ட்டின் எதிர்கால முதலீடுகளுக்காக இந்தத் தொகையை அமைச்சு ஒதுக்கியுள்ளது.
அதே சமயம் லாப நோக்கமற்ற அமைப்பாக அண்மையில் மாறியுள்ள எஸ்பிஎச் மீடியா டிரஸ்ட் வழக்கம்போல் இயங்க இந்த நிதி வகை செய்யும் என்று அமைச்சர் டியோ தெரிவித்தார்.
நிதியுதவியின் அளவு குறித்து முதல் ஐந்து ஆண்டுளுக்குப் பிறகு மறுஆய்வு செய்யப்படும். எஸ்பிஎச் மீடியா டிரஸ்ட்டின் மேம்பாட்டை அடிப்படையாகக் கொண்டு அது முடிவெடுக்கப்படும்.
சிங்கப்பூர் பிரஸ் ஹோல்டிங்ஸ் (எஸ்பிஎச்) நிறுவனத்திலிருந்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பிரிந்த எஸ்பிஎச் மீடியா டிரஸ்ட், லாப நோக்கமற்ற அமைப்பாக மாறிஉள்ளது.
எஸ்பிஎச் மீடியா டிரஸ்ட்டுக்கு வழங்கப்படும் நிதி உதவி,
மின்னிலக்கமயமாதலுக்குப் பயன்
படுத்தப்படுவதை எவ்வாறு உறுதி செய்வது என்பது குறித்து மெக்பர்சன் நாடாளுமன்ற உறுப்பினர் திருவாட்டி டின் பெய் லிங்கும்
மார்சிலிங்-இயூ டீ குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்
திருவாட்டி ஹேனி சோவும் கேள்வி எழுப்பினர்.
பத்திரிகைச் சுதந்திரம் குறித்து மார்சிலிங்-இயூ டீ குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் திரு அலெக்ஸ் யாமும் தாய்மொழி நாளிதழ்களின் மேம்பாடு குறித்து பாசிர்-ரிஸ் பொங்கோல் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஷாரில் தாஹாவும் கேள்வி கேட்டனர். இவற்றுக்கு அமைச்சர் டியோ பதிலளித்தார்.
உலகெங்கும் வெளியிடப்படும் பல்வகை கோணங்கள் கொண்ட செய்திகளை சிங்கப்பூரர்கள் வாசிப்பதாக அமைச்சர் டியோ கூறினார்.
இருப்பினும், உள்ளூர் செய்தித் துறையைப் பாதுகாப்பது தொடர்ந்து முக்கியமானதாக இருப்பதாக அவர் தெரிவித்தார்.
"நமது உள்ளூர் செய்தித் துறை சிங்கப்பூரர்களுக்குத் தகுந்த சூழலில் செய்திகளை வெளியிடுகின்றன.
"இதன்மூலம் உலக நிகழ்வு
களைப் பற்றி சிங்கப்பூரர்கள் தெளிவாகப் புரிந்துகொள்ள முடியும். நமது சமுதாயம் பல இன, பல சமய மக்களைக் கொண்டதால் இந்த அணுகுமுறை அவசியம்," என்றார் அவர்.
முதல் சில ஆண்டுகளுக்கு வழங்கப்படும் நிதியிலிருந்து 40 விழுக்காட்டுத் தொகையை தொழில்நுட்ப முதலீடுகளுக்கும் மின்னிலக்கத் திறனுக்கும் எஸ்பிஎச் மீடியா டிரஸ்ட் பயன்படுத்தும் என்று அமைச்சு எதிர்பார்ப்பதாக அமைச்சர் டியோ தெரிவித்தார்.
தாய்மொழி நாளிதழ்களின் வாசகர் எண்ணிக்கை குறைவாக உள்ளபோதிலும் சிங்கப்பூரின் பல இன சமுதாயத்துக்கு ஏற்ற வகையில் அவை நம்பகமான செய்திகளை வெளியிடுவது மிகவும் முக்கியம் என்று அமைச்சர் டியோ வலியுறுத்தினார்.
"தாய்மொழி நாளிதழ்களால் நீடித்து நிலைத்திருக்க முடியாத நிலை ஏற்பட்டிருந்தால் அது சிங்கப்பூருக்குப் பேரிழப்பாக இருந்
திருக்கும். அதனால் நமது தனித்தன்மையை இழந்திருப்போம்.
"தாய்மொழி நாளிதழ்களுக்கு இழப்பு ஏற்படவில்லை. அப்படியே அவை இழப்புகளைச் சந்திக்கும் நாளிதழ்களாக இருந்தாலும் அவற்றுக்கு ஆதரவு வழங்குவதால் பொதுமக்களுக்கு அது நன்மை பயக்கும் என உறுதியாக நம்பு
கிறோம்," என்று அமைச்சர் டியோ தெரிவித்தார்.
எஸ்பிஎச் மீடியா டிரஸ்ட், மீடியாகார்ப் ஆகிய இரண்டிலும் உள்ள தாய்மொழி ஊடகங்களைப் பாதுகாக்கவும் மேம்படுத்தவும் தாய்மொழி செய்திப் பிரிவுகள் நிலைத்திருக்கவும் இளைய தலைமுறையினரைச் சென்றடைய உதவும் புதிய அணுகுமுறைகளை மேம்
படுத்தவும் அரசாங்க நிதி பயன்
படுத்தப்படும் என்றார் அவர்.
மாணவர்களிடம் தாய்மொழி நாளிதழ்கள் எளிதில் சென்றடைய குலமரபுச் சங்கங்கள், சமூகக் குழுக்கள், பள்ளிகள் ஆகியவற்றுடன் எஸ்பிஎச் மீடியா டிரஸ்ட் இணைந்து செயல்படும் என்று அமைச்சர் டியோ கூறினார்.
பத்திரிகைச் சுதந்திரம்
புதிய எஸ்பிஎச் மீடியா டிரஸ்ட்டைச் சேர்ந்த பல்வேறு
நாளிதழ்கள் 1984ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட சிங்கப்பூர் பிரஸ் ஹோல்டிங்ஸின் ஒரு பகுதியாக இருந்ததிலிருந்து பத்தரிகைச்
சுதந்திரத்துடன் செயல்பட்டு வருவதாக அமைச்சர் டியோ தெரிவித்தார்.
எஸ்பிஎச் மீடியா டிரஸ்ட் அரசாங்கத்திடமிருந்தோ அல்லது தனியார் நிறுவனங்களிடமிருந்தோ நிதி உதவி பெற்றாலும் இந்த நிலை மாறாது என்றார் அவர்.
"எஸ்பிஎச் மீடியா டிரஸ்ட்டின் நாளிதழ்கள் பொதுமக்களிடம் சென்றடைவதை உறுதி செய்வதே அரசாங்கத்தின் முக்கிய இலக்குகளில் ஒன்றாகும்.
"நம்பகத்தன்மையற்ற நாளிதழ்
களாக இவை திகழ்ந்து அனைவராலும் புறக்கணிக்கப்பட்டால் யாருக்கும் எவ்வித பலனுமில்லை.
"மாறாக, எஸ்பிச் மீடியா டிரஸ்ட்டின் நாளிதழ்கள் மீது நம்பிக்கை வைத்திருக்கும் வாசகர்கள் இருப்பதால் அவற்றுக்குத் தேவையான நிதி உதவியை அரசாங்கம் வழங்கு கிறது," என்று அமைச்சர் டியோ கூறினார்.
பன்முகத்தன்மையை
அரவணைக்கும் அணுகுமுறை
தலைமைத்துவம் தொடர்பாக எஸ்பிஎச் மீடியா டிரஸ்ட் எடுத்துள்ள முடிவுகள், பன்முகத்தன்மையை அரவணைக்கும் அதன் அணுகுமுறையைக் காட்டுவதாக அமைச்சர் டியோ கூறினார்.
அனைத்து வகை திறன்களை அது ஏற்பதாகவும் பாலின வேற்றுமையை அது பார்ப்பதில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

