கடந்த பத்தாண்டுகள் இல்லாத அளவில் கடந்த ஆண்டு கூடுதல் அரசாங்க ஊழியர்கள் பதவி விலகியதாக பொதுச் சேவைத் துறைக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சரானன சான் சுன் சிங் நாடாளுமன்றத்தில் நேற்று தெரிவித்தார்.
கடந்த ஆறு மாதங்களாகப் பதவி விலகும் அரசாங்க ஊழியர்களின் எண்ணிக்கை அதி
கரித்து வருவதாக அவர் கூறினார். தகவல் தொடர்புத் தொழில்நுட்பம் போன்ற துறைகளில் ஊழியர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும் அவற்றுக்கு நெருக்குதல் ஏற்பட்டுள்ளதாகவும் திரு சான் தெரிவித்தார்.
கடந்த ஆண்டில் தகவல் தொடர்புத் தொழில்நுட்பத் துறையின் ஊழியர் பதவி விலகல் விகிதம் 9.9 விழுக்காட்டுக்கும் அதிகம். அதன் துல்லியமான விகிதத்தை திரு சான் குறிப்பிடவில்லை. வேலையில் ஊழியர்கள் எதிர்கொள்ளும் கூடுதல் அழுத்தங்கள், சம்பளம், நிபுணத்துவ மேம்பாட்டுக்கான வாய்ப்புகள் போன்ற காரணங்களால் பொதுச் சேவைப் பணியிலிருந்து ஊழியர்கள் பலர் விலகியிருப்பதாகக் கூறப்படுகிறது.
"குறிப்பாக, கடந்த இரண்டு ஆண்டுகளாக கொவிட்-19 நெருக்கடிநிலை காரணமாக அரசாங்க ஊழியர்களுக்குக் கடும் அழுத்தம் ஏற்பட்டது. அயராது உழைக்கும் நிலை அவர்களுக்கு ஏற்பட்டது.
"கொவிட்-19 நெருக்கடிநிலை காரணமாக சில சமயங்களில் அதிகப் பதற்றத்துடன் இருந்தவர்கள், அதிக எதிர்பார்ப்புடன் இருந்தவர்கள் போன்றோரைச் சமாளிக்கும் நிலை அரசாங்க ஊழியர்களுக்கு ஏற்பட்டது. அத்துடன் வீட்டிலிருந்து வேலை செய்யும் முறைக்குப் பலர் மாறியிருப்பதால் வேலைக்கும் சொந்த வாழ்க்கைக்கும் இடையிலான இடைவெளி குறைந்துள்ளது," என்று அமைச்சர் சான் தெரிவித்தார்.

