விமானத் துறையில் நச்சுவாயு வெளியேற்றத்தைக் குறைக்கவும் சுற்றுச்சூழலுக்கு உகந்த இதர தீர்வுகளை நடைமுறைப்படுத்தவும் புதிய திட்டம் அடுத்த ஆண்டு வெளியிடப்படவுள்ளது. இதனையொட்டி 2030, 2050ஆம் ஆண்டுகளுக்கான இலக்குகள் நிர்ணயிக்கப்படும் என்று சிங்கப்பூர் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் கூறியது. உலகளவில் விமானத் துறை நீடித்த நிலைத்தன்மை அம்சத்தில் அவசரமாகக் கவனம் செலுத்தவேண்டும் என்று போக்குவரத்து அமைச்சர் எஸ். ஈஸ்வரன் குறிப்பிட்டார். கொள்ளைநோய்ப் பரவல் காலத்திற்கு முன் உலகளவில் வெளியேற்றப்பட்ட நச்சுவாயுவில் இரண்டு விழுக்காடு விமானத் துறைக்குச் சொந்தமானது என்று அவர் தெரிவித்தார்.
"கொள்ளைநோய்ப் பரவலுக்கு முந்தைய காலத்தில் இருந்ததைப் போல் விமானத் துறை இயங்கத் தொடங்கும்போது சரியான நடவடிக்கைகளை எடுக்காவிட்டால் நச்சுவாயு வெளியேற்றம் தொடர்ந்து அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கலாம்," என்று சிங்கப்பூர் விமானக் காட்சியில் திரு ஈஸ்வரன் செய்தியாளர்களிடம் பேசினார்.
விமானத் துறையை நீடித்த நிலைத்தன்மை கொண்டதாக மாற்றத் தேவைப்படும் முதலீட்டைக் கணிப்பது சவாலானது என்று திரு ஈஸ்வரன் சுட்டினார். ஆனால், இந்த முயற்சிக்குச் செய்யவேண்டிய செலவை அடுத்த ஆண்டு வெளியாகவிருக்கும் திட்டம் ஆராயும் என்று அவர் குறிப்பிட்டார்.
நீடித்த நிலைத்தன்மையைக் கடைப்பிடிக்கும்போது சில அம்சங்களில் விட்டுக் கொடுக்கவேண்டியிருக்கும், பொருளியல் பாதிப்பை ஈடுகட்ட செலவுசெய்யவேண்டியிருக்கலாம் என்பதைத் திரு ஈஸ்வரன் கூறினார். பொருளியலுக்கு அதிக பாதிப்பின்றி நீடித்த நிலைத்தன்மையைக் கடைப்பிடிக்கும் எண்ணத்தை சிங்கப்பூர் கொண்டுள்ளதாக அவர் கூறினார்.
விமானத் துறையை நீடித்த நிலைத்தன்மை உடையதாக மாற்றும் திட்டம் அறிமுகம்

