சிங்கப்பூர் ஆயுதப் படையில் புதிதாகச் சேர்ந்துள்ள 60 முழுநேர தேசிய சேவையாளர்களுக்கு முதன்முறையாக துப்பாக்கிகள் வழங்கப்பட்டுள்ளன. சிங்கப்பூர் ஆயுதப் படையின் அடிப்படை ராணுவப் பயிற்சி நிலையத்தைச் சேர்ந்த 60 வீரர்களுக்குத் துப்பாக்கிகள் வழங்கப்பட்டன.
முழுமைத் தற்காப்பு தினமான நேற்று மரீனா பே மிதக்கும் மேடையில் இந்தச் சடங்கு நேற்று நடைபெற்றது. பொதுமக்களாக இருந்தவர்கள் ராணுவ வீரர்களாக உருவெடுப்பதை இச்சடங்கு சித்திரிக்கிறது. துப்பாக்கி வழங்கும் சடங்கில் கலாசார, சமூக, இளையர் துறை அமைச்சர் எட்வின் டோங் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
சிங்கப்பூரின் மையப் பகுதியிலிருந்து போரின்போது கைது செய்யப்பட்டவர்கள் சாங்கிக்கு வலுக்கட்டாயமாகக் கால்நடையாக அழைத்துச் செல்லப்பட்டதைத் திரு டோங் நினைவுகூர்ந்தார். போர்க்காலம் தொடர்பில் சிங்கப்பூரின் வரலாற்றை நினைவுப்படுத்துவதில் இச்சடங்கு முக்கியமாக அமைவதாக அவர் குறிப்பிட்டார்.
"ராணுவத் தற்காப்பில் நாம் அக்கறை செலுத்துவதன் முக்கியத்துவத்தை நாம் இங்கே ஞாபகப்படுத்திக்கொள்கிறோம், இதுவே தேசிய சேவையைத் தொடங்கியதற்கான காரணம்," என்று அவர் கூறினார். இவ்வாண்டு தேசிய சேவையின் 55ஆம் ஆண்டு நிறைவும்கூட.
போர்க்காலத்தில் செந்தோசாவில் அமைந்துள்ள சிலோசா கோட்டை சிங்கப்பூரைப் பாதுகாக்கவில்லை. அனைத்து வழிகளிலும் சிங்கப்பூரைப் பாதுகாக்கக் கூடுதல் முயற்சிகளை எடுக்கவேண்டும் என்பதை இது நினைவுபடுத்துவாகவும் அமைச்சர் டோங் சுட்டினார்.

