வெளிநாட்டினர் வருகையால் உயர்ந்து வரும் வீட்டு வாடகைகள்

2 mins read
c519b671-b3e4-4ea5-9856-bf51523fd34f
வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) வீடுகளுக்கும் தனியார் வீடுகளுக்குமான வாடகை உயர்ந்து வருகிறது. சிங்கப்பூரின் ஊழியர் சந்தை மேம்பட்டுள்ளதும் எல்லைக் கட்டுப்பாடுகளைச் சிங்கப்பூர் தளர்த்தி வருவதும் இந்த உயர்வுக்கு முக்கிய காரணம் என்று கூறப்பட்டது. படம்:ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) வீடுகளுக்கும் தனியார் வீடுகளுக்குமான வாடகை உயர்ந்து வருகிறது.

சொத்துச் சந்தை நிறுவனங்களான '99.கோ', 'எஸ்ஆர்எக்ஸ்' ஆகியவை புதன்கிழமை (பிப்ரவரி 16) அன்று வெளியிட்ட முன்னோட்டத் தகவல்கள் இதைத் தெரிவித்தன.

சிங்கப்பூரின் ஊழியர் சந்தை மேம்பட்டுள்ளதும் எல்லைக் கட்டுப்பாடுகளைச் சிங்கப்பூர் தளர்த்தி வருவதும் இந்த உயர்வுக்கு முக்கிய காரணம் என்று கூறப்பட்டது.

வெளிநாட்டிலிருந்து சிங்கப்பூருக்கு வருவோரின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்திருப்பதால் வாடகை வீடுகளுக்கான தேவை அதிகரித்துள்ளதாக சொத்துச் சந்தை நிபுணர்கள் கூறினர்.

கூட்டுரிமை வீடுகளின் வாடகை கடந்த மாதம் 1.6 விழுக்காடு அதிகரித்தது என்று சொத்துச் சந்தை நிறுவனங்களின் புள்ளிவிவரங்கள் கூறின.

சென்ற ஆண்டு டிசம்பரைக் காட்டிலும் வீவக வீடுகளின் வாடகை ஜனவரியில் 1.2 விழுக்காடு அதிகரித்தது.

இதன்வழி தொடர்ந்து 19 மாதங்களாக வீவக வீடுகளின் வாடகை உயர்ந்துள்ளது.

அது மட்டுமல்ல, கடந்தாண்டு ஜனவரியைக் காட்டிலும் வீவக வீடுகளின் வாடகை இந்த ஜனவரியில் 11.2 விழுக்காடு கூடியது.

முதிர்ச்சி அடைந்த குடியிருப்புப் பேட்டைகளில் வீவக வீட்டு வாடகை கடந்த மாதம் 2.9 விழுக்காடு அதிகரித்தது.

அங் மோ கியோ, பிடோக், பீஷான், புக்கிட் மேரா, புக்கிட் தீமா, கிளமெண்டி, கேலாங், காலாங், மரீன் பெரேட், பாசிர் ரிஸ், குவீன்ஸ்டவுன், சிராங்கூன், தெம்பனீஸ், தோ பாயோ போன்றவை முதிர்ச்சி அடைந்த குடியிருப்புப் பேட்டைகள் ஆகும்.

முதிர்ச்சி அடையாத குடியிருப்புப் பேட்டைகளில் வாடகை 0.5 விழுக்காடு குறைந்தது.

புக்கிட் பாத்தோக், புக்கிட் பாஞ்சாங், சுவா சூ காங், ஹவ்காங், ஜூரோங் வெஸ்ட், பொங்கோல், செம்பவாங், செங்காங், தெங்கா, போன்றவை முதிர்ச்சி அடையாத குடியிருப்புப் பேட்டைகள் ஆகும்.

வாடகைக்கு விடப்படும் வீவக வீடுகளும் அதிகரித்தன.

கடந்த ஆண்டு டிசம்பரில் அந்த எண்ணிக்கை 1,764.

ஜனவரியில் அது 1,804 ஆக கூடியது.