கத்தார், சவூதி அரேபியா, ஐக்கிய அரபு சிற்றரசுகளில் இருந்து பிப்ரவரி 25 முதல் சிங்கப்பூருக்கு வரும் தடுப்பூசி போட்டுக்கொண்ட பயணிகள் தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டிய தேவை இல்லை.
தடுப்பூசி போட்டுக்கொண்டோருக்கான பயணப் பாதை திட்டம் விரிவாக்கப்படுவதே இதற்கான காரணம்.
தாய்லாந்தின் அனைத்து நகர்களில் இருந்தும் முற்றிலும் தடுப்பூசி போட்டுக்கொண்ட பயணிகள் இனிமேல் சிங்கப்பூர் வரலாம்.
அவர்கள் தனிமைப்படுத்திக்கொள்ளவேண்டிய தேவை இல்லை.
சிங்கப்பூர், மார்ச் 4ஆம் தேதி முதல் இஸ்ரேல், பிலிப்பீன்ஸ் நாடுகளுக்கும் இந்தப் பயணப் பாதை ஏற்பாட்டை நடைமுறைப்படுத்துகிறது. சிங்கப்பூருக்கு வரும் பயணிகள் கொவிட்-19 கிருமித்தொற்றில் இருந்து நன்கு பாதுகாக்கப்பட்டு இருக்கிறார்கள்.
அவர்களுக்குத் தொற்று ஏற்படும் பட்சத்தில் அவர்களால் சுகாதாரப் பராமரிப்பு முறைக்குச் சுமை இருக்காது என்பதை உறுதிப்படுத்தும் வகையில் சிங்கப்பூர் தன்னுடைய எல்லைக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளைத் திருத்தி அமைக்கிறது.
இதன்தொடர்பில் அந்த மாற்றங்கள் இடம்பெறுவதாக சுகாதார அமைச்சர் ஓங் யி காங் நேற்று நடந்த மெய்நிகர் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
தனிமை உத்தரவில்லாத பயணத் திட்டத்தின்கீழ் அதிக மக்கள் சிங்கப்பூருக்கு வர அனுமதிக்கப்படுவார்கள்.
ஹாங்காங்கை பொறுத்தவரை பிப்ரவரி 21 இரவு 11.59 மணி முதல் புதிய தடுப்பூசி போட்டுக்கொண்டோருக்கான பயணப்பாதைத் திட்டம் தொடங்கும்.
தடுப்பூசி போட்டுக்கொண்ட ஹாங்காங்கை சேர்ந்த பயணிகள் மட்டுமே தனிமை உத்தரவில்லாமல் சிங்கப்பூர் வரமுடியும்.

