சிங்கப்பூரில் செவ்வாய்க்கிழமையன்று சாதனை அளவாக 19,420 பேருக்குப் புதிதாக கொவிட்-19 கிருமித்தொற்று உறுதியானது.
சிங்கப்பூரில் கடந்த 2020ல் கொவிட்-19 முதன்முதலில் தலைகாட்டிய பிறகு ஆக அதிகமான அன்றாடத் தொற்று எண்ணிக்கை இதுவே என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தொற்று காரணமாக செவ்வாய்க்கிழமையன்று ஏழு பேர் உயிர் இழந்தனர்.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட 1,355 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தனர். புதிதாக கிருமி தொற்றியோரில் 16,102 பேருக்கு ஏஆர்டி பரிசோதனைகள் வழி தொற்று கண்டறியப்பட்டது. பிசிஆர் பரிசோதனைமூலம் 3,077 பேருக்குத் தொற்று கண்டுபிடிக்கப்பட்டது.
வெளிநாட்டிலிருந்து வந்த 241 பேருக்குத் தொற்று இருந்ததும் தெரிந்தது. அவர்களில் 182 பேருக்கு பிசிஆர் பரிசோதனை மூலமாகவும் 59 பேருக்கு ஏஆர்டி பரிசோதனை வழியாகவும் தொற்று கண்டுபிடிக்கப்பட்டது.
தீவிர சிகிச்சைப் பிரிவில் 23 பேர் உள்ளனர். 140 பேருக்கு செயற்கை சுவாச சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வாராந்திர தொற்றுப் பரவல் விகிதம் 1.34 ஆக உள்ளது.

