கொவிட்-19 தொற்றில் இருந்து பொருளியல் மீட்சி அடைவதைச் சாத்தியமாக்க ஆசியப் பசிஃபிக் வட்டாரத்தில் பாதுகாப்புடன் எல்லைகள் மீண்டும் திறந்துவிடப்பட வேண்டும்.
நிறுவனங்கள் நன்கு செயல்படும் விதத்தில் உலகுடன் இந்த வட்டாரம் மீண்டும் இணைய வேண்டும் என்று வர்த்தக, தொழில் அமைச்சர் கான் கிம் யோங் தெரிவித்து இருக்கிறார்.
மெய்நிகர் ரீதியில் தொழில் பரிவர்த்தனைகள் இடம்பெற முடியும் என்றாலும் நேரடி சந்திப்புகள் மூலம் நல்லுறவும் நம்பிக்கையும் உருவாவதற்கான மாற்று ஏற்பாடு எதுவும் இருக்க முடியாது என்று அவர் தெரிவித்தார்.
திரு கான் ஆசியப் பசிஃபிக் பொருளியல் ஒத்துழைப்பு (ஏபெக்) தொழில்துறை ஆலோசனை மன்றக் கூட்டத்தில் நேற்று உரையாற்றினார். அந்த மன்றத்தின் நான்கு நாள் கூட்டத்தை சிங்கப்பூர் நடத்துகிறது. மெய்நிகர் ரீதியிலும் நேரடி சந்திப்பாகவும் அது நடக்கிறது.
மொத்தம் 100 பிரமுகர்கள் நேரடியாக நேற்றைய கூட்டத்தில் கலந்துகொண்டனர். அதே அளவுக்கான பேராளர்கள் இணையம் வழி மாநாட்டில் பங்கெடுத்தனர்.
ஏபெக் நாடுகளின் பொருளியல் ஒருங்கிணைப்புக்கு இந்த மன்றம் செய்து வரும் தொண்டுகளை திரு கான் பாராட்டினார். பாதுகாப்பான, இடையூறற்ற பயணங்களுக்கு எல்லைகளை மீண்டும் திறந்துவிடுவதற்கான சிறப்புப் பணிக்குழு தொடர்பில் இந்த மன்றம் சென்ற ஆண்டில் ஆற்றிய பணிகளை அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
அந்தச் சிறப்புப் பணிக்குழுவின் பரிந்துரைகள் காரணமாக 'ஏபெக் பாதுகாப்பு பயண வழி சிறப்புப் பணிக்குழு' அமைந்தது. இந்தப் பணிக்குழுவின் முதல் கூட்டம் பிப்ரவரி 21ஆம் தேதி நடக்கிறது.
ஏபெக் உறுப்பு நாடுகளுக்கு இடையே பாதுகாப்பான முறையில் எல்லைகளைத் திறந்துவிடுவதற்கான வழிகளைப் பற்றி அந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்படும்.
இந்த முயற்சிகளுக்கு சிங்கப்பூர் ஆதரவு அளிப்பதாக திரு கான் தெரிவித்தார். கொரோனா இன்னமும் கணிக்க முடியாத ஒரு கிருமியாக இருக்கிறது என்பதால் தடுப்பூசியின் உதவியுடன் அந்தக் கிருமியுடன் சேர்ந்து நாமும் வாழ்வதற்கான வழிமுறைகளைக் காணவேண்டும் என்றாரவர்.
பொருளியல் மீட்சியை மேலும் சாதிக்க ஏபெக் உறுப்பு நாடுகள் மின்னிலக்கப் பொருளியலில் ஒத்துழைப்புக்கான வழிகளை ஆராய வேண்டும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
நேற்றுத் தொடங்கிய நான்கு நாள் கூட்டம், வட்டார பொருளியல் ஒருங்கிணைப்பு, மின்னிலக்கம், சுற்றுச்சூழல், நிதி மற்றும் பொருளியல், சிறிய, நடுத்தர நிறுவனங்கள் மற்றும் எல்லாரையும் உள்ளடக்குதல் ஆகிய ஐந்து அம்சங்களில் கவனம் செலுத்துகிறது.