சிறப்புரிமைக் குழு விசாரணைக்கு வந்தவர்களிடம் 'அடக்குமுறை' விதிகள் பின்பற்றப்பட்டதாக பாட்டாளிக் கட்சித் தலைவர் சில்வியா லிம் தெரிவித்த கருத்துக்கு நாடாளுமன்ற அலுவலர் பதிலளித்து உள்ளார்.
பாட்டாளிக் கட்சியின் ரயீசா கான் நாடாளுமன்றத்தில் பொய்யுரைத்த விவகாரம் தொடர்பான சிறப்புரிமைக் குழு சமர்ப்பித்த அறிக்கை மீதான விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய திருவாட்டி லிம், தம்மிடமும் தமது கட்சியின் இதர இரு தலைவர்களிடமும் கடுமையான விசாரணை நடத்தப்பட்டதாகக் கூறினார்.
திரு பிரித்தம் சிங்கிடம் 9 மணி நேரமும் திரு ஃபைசால் மனாப்பிடம் 6 மணி நேரமும் தம்மிடம் 3 மணி நேரமும் விசாரணை நடத்தப்பட்டதாக அவர் குறிப்பிட்டார். மேலும், விசாரணைக்காக பாதுகாக்கப்பட்ட அறையில் தாம் இரு நாள்கள் காத்திருந்ததாகவும் எந்தவொரு தொடர்பு சாதனத்தையும் பயன்படுத்த தமக்கு அனுமதி தரப் படவில்லை என்றும் அவர் கூறி னார். அவருக்குப் பதிலளித்துள்ள நாடாளுமன்ற அலுவலர், சாட்சியம் அளிக்க வருவோர் தொடர்பு சாதனங்களையும் இதர மின்னிலக்க சாதனங்களையும் பயன்படுத்த வேண்டாம் என அறிவுறுத்தப்படுவது வழக்கம் என்று குறிப்பிட்டுள்ளார்.

