ஓசிபிசி வங்கி தனது வாடிக்கையாளர்களின் கணக்குகளைப் பாதுகாக்க நேற்று புதியதோர் அம்சத்தை அறிமுகப்படுத்தியது.
மோசடி நடைபெறுவதாகச் சந்தேகப்படும் வாடிக்கையாளர் தாமாகவே தமது வங்கிக் கணக்கை உடனடியாக முடக்கிவிடும் வசதியைத் தரும் 'கில் ஸ்விட்ச்' என்னும் அம்சம் அது.
இங்குள்ள வங்கி வாடிக்கையாளர்கள் இத்தகைய வசதியை முதல்முறையாகப் பெறுகிறார்கள்.
இதற்கு முன்னர், தமது வங்கிக் கணக்கை அவசரமாக முடக்கி வைக்க வங்கியை நாட வேண்டும். வங்கி மட்டும் அந்தக் கணக்கை முடக்கும் வசதியைப் பெற்றிருக்கும். புதிய 'கில் ஸ்விட்ச்' அம்சத்தை தமது வங்கிக் கணக்குடன் இணைந்து செயல்பட, 1800-363-3333 என்னும் வங்கியின் அதிகாரத்துவ தொலைபேசி எண்ணை அழைத்து '8' என்னும் தெரிவைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
மேலும், சுமார் 500 ஓசிபிசி ஏடிஎம் இயந்திரங்களிலும் இந்த வசதியைப் பெறலாம். மார்ச் இறுதிவாக்கில் அனைத்து 534 ஓசிபிசி ஏடிஎம் இயந்திரங்களிலும் இந்த வசதி இணைக்கப்படும்.
வங்கிக் கணக்கு பாதுகாப்பு தொடர்பாக நேற்று முன்தினம் நாடாளுமன்றத்தில் பேசிய சிங்கப்பூர் நாணய ஆணையத்தின் துணைத் தலைவர் லாரன்ஸ் வோங், இதேபோன்ற அம்சத்தை அரசாங்கம் பரிசீலித்து வருவது பற்றிக் குறிப்பிட்டிருந்தார்.
மோசடிகளை முறியடிக்கும் அரசாங்கத்தின் பன்முனை அணுகுமுறை பற்றியும் அவர் அப்போது அறிவித்தார்.
2021 டிசம்பர் முதல் கடந்த மாதம் வரை 790 ஓசிபிசி வங்கி வாடிக்கையாளர்கள் $13.7 மில்லியனை மோசடிச் சம்பவங்களில் இழந்ததைத் தொடர்ந்து, பாதுகாப்பு தொடர்பான அக்கறை எழுந்தது.
பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் சிலர், நேரடித் தொலைபேசி எண் மூலம் ஓபிசி வங்கியைத் தொடர்புகொள்ள நீண்டநேரம் காத்திருக்க நேர்ந்ததாக அப்போது கூறினர். அதில் சுணக்கம் இருந்ததை அந்த வங்கி ஒப்புக்கொண்டது.