புதிதாக ஏழு ஏர்பஸ் ஏ350 சரக்கு விமானங்களை வாங்க இருப்பதாக வெளியான தகவலை சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நேற்று உறுதி செய்தது. ஆனால் அவற்றின் விலை பற்றி அது குறிப்பிடவில்லை. தற்போதைய போயிங் ரக சரக்கு விமானங்களைக் காட்டிலும் புதிய விமானங்கள் குறைவான கரிமத்தை வெளியேற்றக்கூடியவை என்பதால் அவற்றை வாங்க முடிவு எடுத்ததாக அந்நிறுவனம் கூறியது.
இந்த விமானங்கள் 2025ஆம் ஆண்டின் நான்காம் காலாண்டு முதல் கட்டம் கட்டமாக இங்கு வந்து சேரும். அகலமான இந்த புதிய தலைமுறை சரக்கு விமானத்தை இயக்கவிருக்கும் முதல் விமான நிறுவனம் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் என்பது குறிப்பிடத்
தக்கது.
அதிகரித்து வரும் இணைய வர்த்தகம், தடுப்பூசி மற்றும் மருத்துவ சாதனங்களை அனுப்புதல் போன்ற காரணங்களால் விமான சரக்குக் கட்டணங்கள் உச்சத்தைத் தொட்டுள்ள வேளையில் புதிய சரக்கு விமானங்கள் வாங்கப்படுகின்றன.
புதிய விமானங்களை வாங்குவதற்கான ஒப்பந்தம் நேற்று கையெழுத் தானது. மேலும் ஐந்து விமானங்களை வாங்குவதற்கான தெரிவை அது உள்ளடக்கி உள்ளது.
சந்தையின் தேவையைப் பொருத்து கூடுதல் விமானங்களை வாங்குவது பற்றி பின்னர் முடிவு செய்வதற்கு ஏதுவாக ஒப்பந்தத்தில் இந்த அம்சம் இடம்பெற்று உள்ளதாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி கோ சூன் ஃபோங் கூறினார்.