செய்திக்கொத்து

செய்திக்கொத்து

3 mins read
b7ff96df-5f14-44b6-9503-911e2fcf3a48
-

கையூட்டு தர முயன்றதாகச் சந்தேகிக்கப்படும் மலேசியர்

போக்குவரத்துக் காவல்துறை அதிகாரிக்குக் கையூட்டு தர முயன்றதாக ஒரு 34 வயது ஆடவர் மீது நேற்று நீதிமன்றத்தில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. மலேசியரான கிருஷ்ணா ராவ் நரசிம்ம நாயுடு, சென்ற ஆண்டு நவம்பர் மாதம் 21ஆம் தேதி பயனியர் சாலைக்கு அருகே சார்ஜன்ட் ஃபிர்ஹான் ரஷீதிற்கு 55 வெள்ளி கையூட்டு தர முயன்றதாகச் சந்தேகிக்கப்படுகிறது. இதன் தொடர்பில் அவர் மீது இரண்டு ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

போக்குவரத்துச் சம்பவம் குறித்து தன்னிடம் விசாரணை நடத்தாமல் இருப்பதற்காக கிருஷ்ணா, அதிகாரிக்குப் பணம் தர முயன்றதாகக் கூறப்படுகிறது. சார்ஜன்ட் ஃபிர்ஹான் அதனை நிராகரித்து, சம்பவம் குறித்து லஞ்ச ஊழல் புலனாய்வுப் பிரிவிடம் தெரிவித்தார்.

கிருஷ்ணா 7,000 வெள்ளி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கு அடுத்த மாதம் 2ஆம் தேதி விசாரணைக்கு வரும். குற்றம் நிரூபிக்கப்பட்டால், கிருஷ்ணாவுக்கு 100,000 வெள்ளி வரையிலான அபராதத்துடன் ஒவ்வொரு குற்றத்திற்கும் ஐந்தாண்டு வரையிலான சிறைத் தண்டனையும் விதிக்கப்படலாம்.

'எஸ்பிஎஸ் டிரான்சிட்'டின் திறன்

வளர்ச்சிப் பயிற்சிகள்

மின்சாரத்தில் இயங்கும் பேருந்துகள், மின்சாரம், டீசல் இரண்டிலும் இயங்கும் பேருந்துகள் ஆகியவற்றின் செயல்முறைகளைக் கையாள 'எஸ்பிஎஸ் டிரான்சிட்' நிறுவனம் தனது தொழில்நுட்பர்களுக்கு அடிப்படைத் திறன்களை வளர்க்கும் முயற்சிகளை எடுத்து வருகிறது. 'ஐடிஇ காலேஜ் வெஸ்ட்' தொழில்நுட்பக் கல்விக் கழகம், 'எஸ்பிஎஸ் டிரான்சிட்' ஆகிய இரண்டும் இணைந்து நடத்தும் பயிற்சியை இதுவரை 25 பேருந்துத் தொழில் நுட்பர்கள் மேற்கொண்டு சான்றிதழைப் பெற்றுள்ளனர்.

இந்த முயற்சியின் மூலம் தன்னிடம் வேலை செய்யும் அனைத்து 450 தொழில்நுட்பர்களுக்கும் பயிற்சியளிக்க 'எஸ்பிஎஸ் டிரான்சிட்' இலக்கு கொண்டுள்ளது.

இந்நிறுவனத்திடம் மின்சாரத்தில் முழுமையாக இயங்கும் 30 பேருந்துகளும், மின்சாரம், டீசல் இரண்டிலும் இயங்கும் 25 பேருந்துகளும் உள்ளன. இவற்றை உற்பத்தி செய்யும் நிறுவனங்களும் 'எஸ்பிஎஸ் டிரான்சிட்'டின் தொழில்நுட்பர்களுக்குப் பயிற்சியளித்து சான்றிதழ் வழங்கி வருகின்றன.

மலேசிய ராணுவத் தளபதிக்கு சிங்கப்பூரின் ஆக உயரிய விருது

மலேசிய ஆயுதப் படையின் தலைமைத் தளபதியான ஜெனரல் டான் ஸ்ரீ அஃபெண்டி புவாங்கிற்கு (படத்தில் இடது புறம் இருப்பவர்) சிங்கப்பூரின் ஆக உயரிய ராணுவ விருது வழங்கப்பட்டுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான தற்காப்பு ஒத்துழைப்பை மேம்படுத்த ஜெனரல் டான் ஸ்ரீ அஃபெண்டி ஆற்றிய பங்கிற்கு அவருக்கு இந்த விருதை சிங்கப்பூர் அதிபர் ஹலிமா யாக்கோப் (படத்தில் நடுவில் இருப்பவர்) அளித்தார்.

கிம்லி காப்பிக் கடையின் முன்னாள்

இயக்குநர்களுக்கு அபராதம்

காப்பிக் கடைகளை நடத்தும் கிம்லி நிறுவனம், பான விற்பனையில் ஈடுபட்ட 'ஏஎஸ்சி' எனும் ஏஷியன் ஸ்டோரி கார்ப்பரேஷன் நிறுவனத்தை கையகப்படுத்தியதன் தொடர்பில் கிம்லியின் முன்னாள் இயக்குநர்கள் இருவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 'ஏஎஸ்சி' நிறுவனத்தை வாங்கியபோது, இயக்குநர் ஒருவருக்கு அதில் பங்குகள் இருந்ததை அவர்கள் சிங்கப்பூர்ப் பங்குச் சந்தையிடம் தெரிவிக்கத் தவறிவிட்டனர்.

முன்னாள் நிர்வாகத் தலைவர் லிம் ஹீ லியாட்டிற்கு 150,000 வெள்ளி அபராதமும், ஐந்தாண்டுகளுக்கு நிறுவன இயக்குநர் பொறுப்பை வகிக்கத் தடையும் விதிக்கப்பட்டன.

முன்னாள் நிர்வாக இயக்குநர் சியா செர் கியாங்கிற்கு 100,000 வெள்ளி அபராதமும் அதேபோன்ற தடையும் விதிக்கப்பட்டன.

ஏர்ஏஷியாவின் விநியோகச் சேவை

ஏர்ஏஷியா நிறுவனம் சிங்கப்பூரில் விநியோகச் சேவைகளை வழங்கத் தொடங்கியுள்ளது. சிங்கப்பூர் வாசிகளுக்குத் தேவையான பொருள்களைக் குறைந்த விலைக்கு விநியோகம் செய்யும் சேவையை ஏர்ஏஷியா வழங்குகிறது.

ஏர்ஏஷியாவின் செயலி வாயிலாக விமானச் சேவைகளுக்கும் ஹோட்டல்களுக்கும் விண்ணப்பிக்கும் சேவை ஏற்கெனவே பயனீட்டாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்தது. அத்துடன் இப்போது பொருள் விநியோகக் சேவையும் சேர்க்கப்பட்டுள்ளது.

ஏர்ஏஷியா எக்ஸ்பிரஸ் என்று இந்நிறுவனத்தின் விநியோகச் சேவைக்குப் பெயரிடப்பட்டுள்ளது.