தனது மனைவியைக் கொன்றதாகச் சந்தேகிக்கப்படும் ஓர் ஆடவர் அடுத்த வாரம் சம்பவ இடத்திற்குக் கொண்டு செல்லப்படவுள்ளார் என்று காவல்துறையின் தரப்பில் வாதிடும் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். சாங்கி சிறையின் மருத்துவ நிலையத்தில் அவருக்கு மனநல பரிசோதனை மெற்கொள்ளப்பட்ட பிறகு சந்தேகநபரான டேவிட் பிரையன் சோவ் குவொக்-ஹுன் மத்திய காவல்துறைப் பிரிவில் தடுப்புக் காவலில் வைக்கப்படுவார்.
33 வயது சோவ் தனது 30 வயது மனைவி திருவாட்டி எலிசபெத் ஃபிரான்சிஸைக் கொலை செய்ததாகச் சந்தேகிக்கப்படுகிறது. அச்சம்பவம் அங் மோ கியோ ஸ்திரீட் 23ல் உள்ள ஒரு வீட்டில் சென்ற மாதம் 11ஆம் தேதி நிகழ்ந்தது. மாண்டவர் ஒரு கர்ப்பிணி என்று அவரின் நண்பர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸிடம் தெரிவித்தார்.
சம்பவ இடத்தில் சோவ் ஆதாரங்களை அடையாளம் காண காவல்துறைக்கு உதவுவார் என்று காவல்துறையின் தரப்பில் வாதிடும் அதிகாரி கூறினார். காணொளி வாயிலாக சோவ் நேற்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார். அவருக்காகப் புதிதாக நியமிக்கப்பட்ட மூன்று வழக்கறிஞர்களான திரு சசி நாதன், திரு ஜெரிமி பரேரா, திருவாட்டி லாரா இயோ ஆகியோர் வாதிடுகின்றனர். இதற்கு முன் அவருக்காக வாதிட்ட வழக்கறிஞர்கள் இந்த வழக்கிலிருந்து நீக்கப்பட்டனர்.
சென்ற மாதம் 11ஆம் தேதியன்று காலை சுமார் 7.35 மணிக்கு அடுக்குமாடி வீட்டில் ஒருவர் குத்தப்பட்டதாக தங்களுக்குத் தகவல் வந்ததென்று காவல்துறை இதற்கு முன் அறிக்கை ஒன்றில் தெரிவித்திருந்தது. சம்பவ இடத்திற்கு அதிகாரிகள் சென்றபோது திருவாட்டி ஃபிரான்சிஸ் பேச்சு மூச்சின்றி கிடந்தார். சம்பவ இடத்திலேயே அவரின் மரணம் உறுதிப்படுத்தப்பட்டது.