சிங்கப்பூர்-மலேசியா பயணம்: 2 நாட்களில் 40,000 டிக்கெட்டுகள் விற்பனை

சிங்கப்பூர்-மலேசியா பயணம்: 2 நாட்களில் 40,000 டிக்கெட்டுகள் விற்பனை

1 mins read
d502a1c4-25ba-42da-abc4-6c3d87ea398d
தரைவழி விடிஎல் திட்டம் சென்றாண்டு நவம்பர் 29 தேதி தொடங்கப்பட்டபோது, ஒரு நாளைக்கு 2,880 பேர் மலேசியாவுக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டனர் (படம்: ஸ்ரெய்ட்ஸ் டைம்ஸ்) -

சிங்கப்பூர் மலேசியா இடையிலான தரைவழி விடிஎல் பயணத்துக்கான 40,000 பேருந்து டிக்கெட்டுகள் கடந்த இரண்டே நாட்களில் விற்கப்பட்டுள்ளன.

இருநாடுகளுக்கிடையே, தடுப்பூசி போட்டுக்கொண்டோருக்கான தரைவழிப் பயணப் பாதையை (விடிஎல்) பயன்படுத்த அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பவுள்ளதாக நேற்று அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து டிக்கெட்டுகளின் விற்பனை சூடுப்பிடித்தது.

பிப்ரவரி 22ஆம் தேதியிலிருந்து பழைய வரம்பு நடப்புக்கு வரும்.

கூடுதல் டிக்கெட்டுகளை நேற்று (பிப்ரவரி 16) மாலை ஆறு மணிக்கு விற்பனை விட்டதாக டிரான்ஸ்டார் டிராவல் நிறுவனம் கூறியது.

இரவு எட்டு மணிக்குள் சுமார் 40 விழுக்காடு டிக்கெட்டுகள் விற்கப்பட்டதாக அது தெரிவித்தது.

அவை அனைத்தும் பிப்ரவரி 22 முதல் மார்ச் 21 தேதி வரைக்குமான டிக்கெட்டுகள் ஆகும்.

டிரான்ஸ்டார் டிராவல் நிறுவனம் ஒரு நாளைக்கு இரு நாடுகளுக்கிடையே 24 பேருந்துச் சேவைகளை நடத்திவருகிறது.

இந்த எண்ணிக்கை பிப்ரவரி 22ஆம் தேதியிலிருந்து 48ஆக உயர்த்தப்படும்.

இதற்கிடையே, மலேசியாவின் காஸ்வே லிங்க் பேருந்து நிறுவனம் நேற்று காலை 10 மணிக்குக் கூடுதல் டிக்கெட்டுகளை விற்கத் தொடங்கியது.

ஒன்றரை மணி நேரத்துக்குள் பிப்ரவரி 22 முதல் 28 வரையிலான அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்துவிட்டன.

விடிஎல் தரைவழி திட்டத்தில் தனியார் வாகனங்கள், பேருந்துகள் ஆகியவற்றை சேர்த்துகொள்வது பற்றி சிங்கப்பூர் மலேசியாவுடன் பேச்சுவார்த்தை நடத்திவருவதாக வர்த்தகத், தொழில் அமைச்சர் கான் கிம் யோங் கூறினார்.