வரும் மே மாதம் வியட்னாம் தலைநகர் ஹனோயில் நடைபெறவுள்ள தென்கிழக்காசிய விளையாட்டுகளில் பங்கேற்க சிங்கப்பூர் நெடுந்தொலைவோட்ட வீரர் சோ ருய் யோங் தேர்ந்தெடுக்கப்படவில்லை. அதற்கு எதிராக மேல்முறையீடு செய்யப்போவதில்லை என்று சோ கூறியுள்ளார்.
2015, 2017ஆம் ஆண்டுகளில் அடுத்தடுத்த தென்கிழக்காசிய விளையாட்டுகளின் நெடுந்தொலைவோட்டப் போட்டிகளில் சோ தங்கம் வென்றார். இப்போது தொடர்ந்து இரண்டாவது முறையாக இவர் தென்கிழக்காசிய விளையாட்டுகளில் பங்கேற்கவுள்ள சிங்கப்பூர் அணியில் இடம்பெறவில்லை.
விளையாட்டாளர்களிடம் எதிர்பார்க்கப்படும் சரியான நடத்தை சோவிடம் இல்லை என்று சிங்கப்பூர் தேசிய ஒலிம்பிக் மன்றம் தெரிவித்தது. 2019ஆம் ஆண்டு பிலிப்பீன்ஸ் தலைநகர் மணிலாவில் நடைபெற்ற தென்கிழக்காசிய விளையாட்டுகளில் பங்கேற்க சோவைத் தேர்ந்தெடுக்காததற்கும் இதே காரணம்தான் கொடுக்கப்பட்டது.
இதற்கு எதிராக மேல்முறையீடு செய்யப்போவதில்லை என்றும் பிற்காலத்தில் இந்நிலை உருவெடுக்காமல் இருக்கத் தான் என்ன செய்யவேண்டும் என்பதை ஆலோசிக்கப்போவதாகவும் சில சர்ச்சைகளில் சிக்கிய சோ குறிப்பிட்டார்.

