குறைந்த வருமான ஊழியர்களின் ஊதிய உயர்வுக்கு அரசாங்க உதவி

குறைந்த வருமான ஊழியர்களின் ஊதிய உயர்வுக்கு அரசாங்க உதவி

2 mins read
bf8874e4-b2de-4451-b91a-f9903f50c8a9
படம்:ஸ்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

இந்த ஆண்டு முதல் 2026ஆம் ஆண்டு வரை குறைந்த வருமான ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்தும் நிறுவனங்களுக்கு அரசாங்கம் உதவிக்கரம் நீட்டவுள்ளது.

புதிய திட்டம் ஒன்றின்கீழ் குறைந்த வருமான ஊழியர்களுக்கு வழங்கப்படும் கூடுதல் சம்பளத் தொகையில் ஒரு பங்கை அரசாங்கம் வழங்கும்.

இந்த ஆண்டும் அடுத்த ஆண்டும் கூடுதலாக வழங்கப்படும் சம்பளத் தொகையில் 50 விழுக்காட்டை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளும்.

2024, 2025ஆம் ஆண்டுகளில் இந்த விகிதம் 30 விழுக்காடாகக் குறையும். 2026ஆம் ஆண்டில் கூடுதல் சம்பளத் தொகையில் 15 விழுக்காட்டை அரசாங்கம் ஏற்றுககொள்ளும்.

புதிய படிப்படியான சம்பள உதவித் திட்டத்தின்கீழ் அறிவிக்கப்பட்டுள்ள இந்த சலுகைகள், மாதம் 2,500 வெள்ளிக்குக் குறைவாக சம்பளம் ஈட்டும் சிங்கப்பூரர்களுக்கும் நிரந்தரவாசிகளுக்கும் பொருந்தும்.

மாதம் 2,500லிருந்து 3,000 வெள்ளி வரை ஊதியம் பெருவோருக்கு, இந்த ஆண்டும் அடுத்த ஆண்டும் வழங்கப்படும் கூடுதல் சம்பளத் தொகையில் 30 விழுக்காட்டை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளும். 2024ஆம் ஆண்டு இந்த விகிதம் 15 விழுக்காட்டுக்குக் குறையும்.

இந்தத் திட்டத்திற்குத் தகுதிபெறும் ஊழியர்களுக்கு நிறுவனங்கள் ஒரு ஆண்டுக்கு மாதந்தோறும் குறைந்தது 100 வெள்ளியைக் கூடுதலாக வழங்கவேண்டும்.

ஊழியர்களின் சம்பளம் உயர்த்தப்பட்ட பிறகு ஆண்டின் முதல் காலாண்டில் சிங்கப்பூர் உள்நாட்டு வருவாய் ஆணையம் உதவித்தொகையை வழங்கும்.

புதிய படிப்படியான சம்பள உதவித் திட்டத்திற்கு இவ்வாண்டு இரண்டு பில்லியன் வெள்ளி ஒதுக்கப்படும் என்று திரு வோங் தெரிவித்தார்.

படிப்படியான சம்பள உயர்வு முறை பல்வேறு துறைகளுக்கும் வேலைகளுக்கும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.