நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் (என்டியு) உள்ள கட்டடம் ஒன்றின் நான்காவது மாடியில் உட்கூரையின் ஒரு பகுதி திங்கட்கிழமை (பிப்ரவரி 14) இரவு பெயர்ந்து விழுந்தது.
மாணவர்கள் செல்லும் நடைபாதையில் சிதைவுகள் விழுந்து கிடந்தன.
இந்தச் சம்பவத்தில் எவருக்கும் காயம் ஏற்பட்டதாகத் தகவல் இல்லை என்றும் அந்தக் கட்டடத்தின் அமைப்பு பாதுகாப்பாக உள்ளது என்றும் என்டியு பேச்சாளர் ஒருவர் கூறினார்.
உட்கூரை சிதைவுகள் விழுந்து கிடப்பதைக் காட்டும் புகைப்படங்களை மாணவர் ஒருவர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சுக்கு அனுப்பி வைத்தார். அன்றைய தினம் இரவு 7.40 மணியளவில் உட்கூரை பெயர்ந்து விழுந்ததாக அந்த மாணவர் கூறினார்.
இந்தச் சம்பவம் நிகழ்வதற்கு ஒரு சில தினங்களுக்கு முன்பு நடத்தப்பட்ட வழக்கமான பரிசோதனையின்போது, அந்த உட்கூரையில் குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டதாக என்டியு பேச்சாளர் சொன்னார்.
"அந்த உட்கூரைக்குக்கீழ் உள்ள பகுதியைச் சுற்றி உடனடியாக தடுப்புவேலி போடப்பட்டது. அந்த உட்கூரையைப் பரிசோதித்து, தேவை ஏற்பட்டால் அதை அகற்றுவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டன.
"இருப்பினும், விசாரணை நடைபெறுவதற்குள் அந்த உட்கூரை பெயர்ந்து விழுந்துவிட்டது," என்று அப்பேச்சாளர் விவரித்தார்.


