மின்னிலக்கத் துறையில் சந்தைப்படுத்தும் பணிக்குப் புதிதாக மாறிய மனோகரன் முத்துவீரப்பன், 60, அத்துறையில் இளையர்களுக்கே முன்னுரிமை தரப்படும் என்பதில்லை எனக் கூறியுள்ளார்.
வேலையிடத்தின் மீது வயதில் மூத்தவர்கள் கொண்டுள்ள கடப்பாட்டையும் முதிர்ச்சியான மனப்போக்கையும் முதலாளிகள் மதிக்கிறார்கள் என்பது இவரது அனுபவமாக உள்ளது.
பத்தாண்டுகளுக்கு முன்னதாக சந்தைப்படுத்துதல் அதிகாரியாக இருந்த திரு மனோகரன், மின்னிலக்கச் சந்தைப்படுத்துதலுக்கான ஆறு மாதத் திறன் மேம்பாட்டு வகுப்பை மேற்கொண்ட திரு மனோகரன், உருமாற்றத்த்திட்டத்தின் வழியாகத்தான் தம்மால் வேலை செய்துகொண்டே இதனை வெற்றிகரமாக முடிக்க முடிந்ததாக கூறினார்.
வாரத்திற்கு மூன்று நாள் வகுப்பு இருநாள் வேலை என்ற ஏற்பாட்டில் திரு மனோகரன், புதிதாகச் சேர்ந்த 'யூனிசாஃப்ட் இன்ஃபோடெக்' நிறுவனத்தின் ஆதரவுடன் மின்னிலக்க உத்திகளைக் கற்றுக்கொண்டார்.
"யூனிபோர்ஸ் என்ற கிளை நிறுவத்தின் தொழில்நுட்பக் கருவிகளை சொந்த தளத்தின் மூலமாகமாகவும் லஸாடா, ஷாப்பி போன்ற தளங்களின் மூலமாகவும் விற்பனை நடத்தும் பணியைக் கற்றுக்கொண்டேன்," பொருள் விற்பனை மட்டுமின்ற இணையத்தளத்தை முறையாக பராமரிப்பது கட்டண முறைகளைக் கையாள்வதும் தற்போது இவரது முக்கிய பொறுப்புகளாகும்.
இந்த வேலைக்கு முன்னதாக 'லிஷா' என்ற லிட்டில் இந்திய கடைக்காரர்கள் மரபுடமைச் சங்கம், 'சிக்கி' என்ற சிங்கப்பூர் இந்திய வர்த்தக, தொழில் சபை ஆகிய வற்றில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளராகப் பணியாற்றினார்.
2020ஆம் ஆண்டு கொவிட்-19 கிருமிப்பரவல் தொடங்கியபோது நிகழ்ச்சி ஏற்பாட்டுத் துறையே முடங்கிப்போனது. அந்நேரத்தில் துவண்டுபோன திரு மனோகரன், எக்காலத்திலும் வலுவான தேவையைக் கொண்ட ஒரு துறைக்கு மாற முடிவு செய்ய உறுதி கொண்டார்
நண்பரின் பரிந்துரையால் தற்போது வேலை பார்க்கும் நிறுவனத்தில் சேர்ந்த திரு மனோகரன், இந்தத் திறன் மேம்பாட்டு வகுப்பில் சேர அந்த நிறுவனமே ஊக்கம் தந்ததாகக் கூறினர். வகுப்பிலுள்ள சக மாணவர்கள் ஏறத்தாழ 30 வயதைச் சேர்ந்தவர்களாக இருந்தனர். ஆனாலும் அனைவரும் ஒருவருக்கு ஒருவர் உதவி செய்து கற்றதாக அவர் கூறினார்.
வர்த்தகங்களுக்கும் ஊழியர்களுக்கும் மின்னிலக்கத் திறன்களை வளர்க்கும் திட்டங்களை மேம்படுத்த அடுத்த சில ஆண்டுகளுக்குக் கூடுதலாக 200 மில்லியன் வெள்ளி ஒதுக்கப்படும் என்று நிதியமைச்சர் லாரன்ஸ் வோங் நேற்று தமது வரவுசெலவுத் திட்ட உரையில் அறிவித்தார்.
மின்னிலக்கத் திறன்களுக்கு வர்த்தகங்கள் கொடுக்கும் மதிப்பை அரசாங்க முடிவு பிரதிபலிப்பதாகக் கூறும் திரு மனோகரன், இதனைப் பயன்படுத்தும்படி மக்களைக் கேட்டுக்கொள்ள விரும்புகிறார்.

