குறைந்த வருமான ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்தும் முதலாளிகள் புதிய திட்டத்தின்கீழ் அடுத்த ஐந்தாண்டுகளுக்கு இணை நிதியைப் பெற உள்ளனர்.
இந்த ஆண்டும் அடுத்த ஆண்டும் உயர்த்தப்படும் சம்பளத்தில் 50 விழுக்காட்டை அரசாங்கம் வழங்கும். இந்த விகிதம் 2024 மற்றும் 2025ஆம் ஆண்டுகளுக்கு 30 விழுக்காடாக இருக்கும்.
தொடர்ந்து, 2026ஆம் ஆண்டு அரசாங்கம் 15 விழுக்காட்டை வழங்கும் என்று நிதி அமைச்சர் லாரன்ஸ் வோங் தமது வரவுசெலவுத் திட்ட உரையில் குறிப்பிட்டார்.
புதிய படிப்படியாக உயரும் சம்பள உதவித் திட்டத்தின்கீழ், மொத்த மாத ஊதியம் $2,500 வரை ஈட்டும் சிங்கப்பூரர் அல்லது நிரந்தரவாசி ஊழியர்களை வேலைக்கு அமர்த்தியிருக்கும் நிறுவனங்களுக்குப் பொருந்தும்.
மாத ஊதியம் $2,500க்கு மேல் $3,000 வரை இருந்தால் அவர்
களுக்கான அரசாங்க இணை நிதி இந்த ஆண்டும் அடுத்த ஆண்டும் 30 விழுக்காடாக இருக்கும்.
அதேநேரம் 2024ஆம் ஆண்டில் உயர்த்தப்படும் சம்பளத்தில் 15 விழுக்காட்டை அரசாங்கம் வழங்கும்.
இந்த ஆதரவுத் திட்டத்திற்குத் தகுதிபெற, முதலாளிகள் தங்களது ஊழியருக்கு குறைந்தபட்சம் $100 சம்பள உயர்வு அளிக்கவேண்டும்.
அரசாங்கத்தின் இணை நிதி, சிங்கப்பூர் உள்நாட்டு வருவாய் ஆணையத்தால் தகுதிபெறும் முதலாளிகளின் கணக்கில் தாமாக வரவுவைக்கப்படும்.
சம்பள உயர்வு வழங்கப்பட்ட பின்னர் ஆண்டின் முதல் காலாண்டில் இந்நிதி அளிக்கப்படும்.
இந்த நிதித் திட்டத்திற்கு தொடக்கமாக இந்த ஆண்டு $2 பில்லியன் ஒதுக்கப்படும் என்று திரு வோங் கூறினார்.
"வர்த்தகர்கள், பயனீட்டாளர்கள் மற்றும் வரிசெலுத்துவோர் என நாம் அனைவரும் நமது குறைந்த வருமான ஊழியர்களின் நிலையை உயர்த்த நமது பங்கையும் பங்களிப்பையும் செய்ய வேண்டும்," என்று திரு வோங் கேட்டுக்கொண்டார்.
குறைந்தபட்ச ஊழியர்கள் தொடர்பாக முத்தரப்புப் பணிக்குழு அளித்த பரிந்துரைகளை அரசாங்கம் ஏற்றுக்கொள்வதாக கடந்த ஆண்டு தமது தேசிய தினப் பேரணி உரையில் பிரதமர் லீ சியன் லூங் குறிப்பிட்டிருந்தார்.
படிப்படியாக உயரும் சம்பள
முறையை சில்லறை வர்த்தகம், உணவு சேவைகள் மற்றும் கழிவு நிர்வாகத் துறைகளுக்கும் நீட்டிப்பது அந்தப் பரிந்துரைகளில் அடங்கும்.
வெவ்வேறு திறன் படைத்த ஊழியர்களுக்கான குறைந்தபட்ச சம்பளத்தையும் பயிற்சியையும் வழங்க படிப்படியாக உயரும் சம்பள முறை வழிசெய்கிறது.
இந்த ஆண்டு செப்டம்பர் முதல் வெளிநாட்டு ஊழியர்களை வேலையில் அமர்த்தியுள்ள நிறுவனங்களும் தங்களது எல்லா உள்ளூர் ஊழியர் களுக்கும் குறைந்தபட்ச உள்ளூர் தகுதிச் சம்பளத்தை வழங்கவேண்டும்.
தற்போது அந்தத் தொகை மாதத்திற்கு $1,400 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
குறைந்த வருமான ஊழியர்களின் நிலையை மேம்படுத்த கைகொடுக்கிறது அரசாங்கம்

