சிங்கப்பூரின் மக்கள்தொகை விரைவாக மூப்படைவதால் 2030ஆம் ஆண்டுக்குள் அரசாங்கச் செலவினங்களில் பெரும்பகுதி சுகாதாரப் பராமரிப்புக்கே செல்லும். அதேநேரம் ஏற்கெனவே சரிவைச் சந்தித்துவரும், வேலைசெய்யும் பெரியோரின் எண்ணிக்கையை மேலும் சுருங்கச் செய்வதற்கான அச்சுறுத்தலாக பொருளியல், வேலைவாய்ப்பு இடர்பாடுகளும் உள்ளன.
கொள்ளைநோயைக் கடந்து படிப்படியாக அரசாங்கம் அடி எடுத்து வைக்கும் வேளையில் கவனம் செலுத்தப்படவேண்டிய அம்சங்கள் இவை என்று நிதி அமைச்சர் லாரன்ஸ் வோங் தமது வரவுசெலவுத் திட்ட உரையில் குறிப்பிட்டார்.
உலகளவில் அதிக மூப்படைவோரைக் கொண்ட நாடுகளில் சிங்கப்பூரும் ஒன்று. கடந்த ஆண்டின் நிலவரப்படி, 65 வயதும் அதற்கும் அதிக வயதான மூத்த குடிமக்கள் சிங்கப்பூரின் மொத்த மக்கள்தொகையில் 16 விழுக்காட்டை வகித்தனர். இந்த விகிதம் 2010ஆம் ஆண்டில் 9 விழுக்காடாக இருந்தது.
2030ஆம் ஆண்டுவாக்கில் இது 25 விழுக்காடாக உயரும் சாத்தியம் உள்ளது. அதாவது நான்கில் ஒரு சிங்கப்பூரர் மூத்தவராக இருப்பார். இது ஜப்பான் மற்றும் சில ஐரோப்பிய நாடுகளின் நிலவரத்தைப் போன்றது என்று திரு வோங் விளக்கினார். இது வேலை செய்யும் வயதானோரின் எண்ணிக்கையைக் குறைக்கும். பொருளியல் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அபாயங்கள் இதனை மேலும் குறைக்கும் நிலை உள்ளது.
சுகாதாரப் பராமரிப்பு செலவினத்தை விளக்கிய நிதி அமைச்சர், 2019ஆம் ஆண்டில் இந்த செலவு மும்மடங்காகி $11.3 பில்லியனைத் தொட்டது. 2010ஆம் ஆண்டு இது $3.7 பில்லியனாக இருந்தது என்றார்.
"கொவிட்-19 கொள்ளைநோய் தொடர்பான செலவினங்களை ஒதுக்கிவிட்டு தற்போதைய விகிதப்படி சுகாதாரப் பராமரிப்புச் செலவுகள் உயர்ந்துகொண்டு போனால், 2030ஆம் ஆண்டுவாக்கில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஏறக்
குறைய 3.5 விழுக்காட்டை நாம் இதற்குச் செலவிடவேண்டி வரும். அதாவது சுகாதாரப் பராமரிப்புக்கு மட்டும் அப்போது நாம் $27 பில்லியனைச் செலவிடுவோம். அதிகரித்து வரும் சுகாதாரப் பராமரிப்புச் செலவுகள் தவிர்க்க முடியாதவை. மூப்படையும் மக்கள்தொகைக்கான சமூகத் தேவைகளும் நாம் தவிர்க்க இயலாத அளவுக்கு அதிகரிக்கும்," என்றார் திரு வோங். அதேநேரம் இப்போது கண்டு வரும் இந்த அதிகரிப்பு இப்படியே நீடிக்குமா அல்லது மாறுமா என்பதுதான் பிரச்சினை என்றும் அவர் கூறினார்.

