சிங்கப்பூர் பந்தயப் பிடிப்புக் கழகத்தின் 'மேம்படுத்தப்பட்ட நிதித் திரட்டு செயல்திட்டத்திற்கு' மேலும் மூன்றாண்டு காலத்திற்கு $100 மில்லியன் ஒதுக்கப்படும் என்று அரசாங்கம் நேற்று அறிவித்தது.
இதன் மூலம் அறப்பணி அமைப்புகளுக்கு ஆதரவும் ஊக்கமும் கிடைக்கவிருக்கிறது.
அறப்பணி அமைப்புகள் ஆண்டுதோறும் தாங்கள் திரட்டும் ஒவ்வொரு வெள்ளிக்கும் ஈடாக அரசாங்கத்திடம் இருந்து ஒரு வெள்ளியைப் பெறமுடியும். அதிகபட்சமாக $250,000 வரை அவை பெறலாம்.
நிதித் திரட்டு நிகழ்ச்சிகள் மூலம் அல்லது அங்கீகரிக்கப்பட்ட மின்னிலக்கத் தளங்கள் மூலம் திரட்டப்படும் நன்கொடைகளுக்கு இது பொருந்தும் என்று நிதி அமைச்சர் லாரன்ஸ் வோங் நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
அறப்பணித் துறைக்கு மேலும் ஆதரவு அளிப்பதற்காகவும் சமூகத் திற்குத் திருப்பி தெண்டாற்றும்படி குடிமக்களுக்கு ஊக்கமூட்டும் வகையிலும் இந்தத் தொகை அந்தச் செயல்திட்டத்தில் போடப்படுவதாக அமைச்சர் கூறினார்.
சிங்கப்பூரில் 2021ல் Giving.sg, என்ற இணையத்தளம் வழி மூன்று மடங்கு அதிகமாக கிட்டத்திட்ட $100 மில்லியன் நன்கொடை திரட்டப்பட்டதை அவர் சுட்டிக்காட்டினார்.
கருணை மிகுந்த எல்லாரையும் உள்ளடக்கிய ஒரு நாட்டை உருவாக்குவதில் சமூகம் மிக முக்கிய பணியாற்றுகிறது என்று திரு வோங் குறிப்பிட்டார்.
கிருமித்தொற்று காலத்தின்போது சிங்கப்பூரர்கள் பெருந்தன்மையுடன் கொடை அளித்து உள்ளனர் என்பதை அவர் நினைவு கூர்ந்தார்.
இந்த வேகத்தை மேம்படுத்தி சமூகத்தில் நன்கொடை கலாசாரத்தை பலப்படுத்துவோம் என்றும் அவர் அறைகூவல் விடுத்தார்.
இதனிடையே, கலை, விளையாட்டுத் துறைக்கு மேலும் ஆதரவு அறிவிக்கப்பட்டு உள்ளது. 'கலாசார உறுதுணை நிதி' மேலும் மூன்று ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டு அதில் $150 மில்லியன் சேரும்.
அறநிறுவனங்கள் 'அறப்பணி ஆற்றல் நிதி' மூலம் மேலும் ஆதவைப் பெறும்.
இந்த நிதி மேலும் ஐந்தாண்டு களுக்கு நீட்டிக்கப்பட்டு அதில் $26 மில்லியன் சேர்க்கப்படும்.
www.charities.gov.sg என்ற அறப்பணி இணையத்தளத்தில் மேலும் பல தகவல்களை ஏப்ரல் 1 முதல் தெரிந்துகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

