கொவிட்-19 சுகாதாரச் செலவுக்கு
கையிருப்பு நிதியிலிருந்து $6 பி.
கொவிட்-19 சூழலில் இருந்து வேகமாகவும் நம்பிக்கையுடனும் சிங்கப்பூர் மீண்டெழுவதை உறுதி செய்ய நாட்டின் கடந்தகால சேமிப்பை அரசாங்கம் பயன்படுத்தும். கொள்ளைநோய் தொடர்பான பொதுச் சுகாதார செலவினங்களுக்காக இந்த ஆண்டு $6 பில்லியன் அளவுக்கு நிதிக் கையிருப்பைப் பயன்படுத்த வேண்டி இருக்கும் என்று நிதி அமைச்சர் லாரன்ஸ் வோங் தெரிவித்துள்ளார். இந்தத் தொகையை எடுக்க அதிபர் ஹலிமா யாக்கோப் கொள்கை அளவில் ஒப்புதலை வழங்கி இருப்பதாகவும் அவர் சொன்னார். இந்தத் தொகையையும் சேர்த்தால் 2020ஆம் தொடங்கி இந்த ஆண்டு வரையிலான மூன்று நிதி ஆண்டுகளில் சேமிப்பிலிருந்து எடுக்கப்பட்ட தொகை $42.9 பில்லியனைத் தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது. கொள்ளைநோய் பரவத் தொடங்கிய வேளையில் நிலைமையைச் சமாளிக்க $52 பில்லியன் தேவைப்படலாம் என அரசாங்கம் கணித்த தொகையைக் காட்டிலும் இது குறைவு. தற்போது எடுக்கப்படும் $6 பில்லியனில் இருந்து $3.7 பில்லியன் கொவிட்-19 பரிசோதனை, மருந்தக நிர்வாகம் மற்றும் தொடர்புத்தடமறிதல் போன்ற ஏற்பாடுகளுக்கும் $1.2 பில்லியன் தொகை தடுப்பூசி மற்றும் சிகிச்சைகளுக்கும் செலவிடப்படும் என்றார் அமைச்சர்.
எஞ்சிய $1.1 பில்லியன் தனிமைப்படுத்தும் வசதிகளுக்கும் எல்லை நிர்வாகம் மற்றும் பாதுகாப்பு இடைவெளி போன்றவற்றைக் கவனிக்கவும் செலவாகும் என்றார் அவர்.
பணியிடை மாற்றத்தை விரும்பும் ஊழியர்களுக்குப் புதிய திட்டம்
பணியிடை மாற்றத்தை விரும்பும் ஊழியர் களுக்கு உதவும் புதிய திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்கில்ஸ்ஃபியூச்சர் பணி நிலைமாற்றத் திட்டம் என்று அழைக்கப்படும் இந்தத் திட்டம் ஏப்ரல் முதல் தேதி நடப்புக்கு வரும். துறைசார்ந்த பயிற்சி வகுப்புகளில் சேர்ந்து, வேலை வாய்ப்பை உயர்த்திக் கொள்ள அது உதவும். ஸ்கில்ஸ்ஃபியூச்சர் திட்டத்தால் நியமிக்கப்பட்ட தொடர் கல்வி, பயிற்சி நிலையங்கள் அத்தகைய பயிற்சி வகுப்புகளை நடத்துகின்றன.
3 முதல் 12 மாதங்கள் வரை நீடிக்கும் அந்தப் பயிற்சி வகுப்புகள் தொழில்சார்ந்த அனுபவம் பெற வகைசெய்யும். 2020ஆம் ஆண்டு அறிமுகமான எஸ்ஜி ஒற்றுமை இயக்கத்தின் திறன் திட்டம், எஸ்ஜி ஒற்றுமை இயக்கத்தின் பணியிடைக்கால வாழ்க்கைத்தொழில் பாதைகள் நிறுவனப் பயிற்சித் திட்டம் ஆகியவை மார்ச் 31ஆம் தேதியுடன் நிறைவடையவிருக்கின்றன. புதிய ஸ்கில்ஸ்ஃபியூச்சர் பணி நிலைமாற்றத் திட்டம் அந்த இரண்டு தேசிய அளவிலான திட்டங்களுக்கும் மாற்றாக அமையும் என்று நிதியமைச்சர் லாரன்ஸ் வோங் குறிப்பிட்டார். 40களிலும், 50களிலும் உள்ள ஊழியர்கள் மதிக்கத்தக்க வேலை அனுபவம் கொண்ட வர்கள். அவர்கள் தொடர்ந்து கல்வி கற்று, புதிய திறன் களுடன் புதிய வேலைகளை ஏற்க உதவும் வகையில், பணியிடைக்கால மாற்றத்தை விரும்புவோர் மீது சிறப்புக் கவனம் செலுத்தப்படுவதாக அமைச்சர் கூறினார். புதிய திட்டத்தின்கீழ் பயிற்சி வகுப்புகளில் சேருவோர்க்கு,
பயிற்சி வகுப்புகள் குறித்த ஆலோசனை, வேலைப் பயிற்சி என பலதரப்பட்ட ஆதரவு வழங்கப்படும்.
$3 பி. பற்றாக்குறை எதிர்பார்ப்பு
இந்த ஆண்டு முழுமைக்கும் பொருளியல் ஆதரவில் கவனம் செலுத்த இருக்கும் வரவுசெலவுத் திட்டத்தில் $3 பில்லியன் பற்றாக்குறை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.5 விழுக்காடு. இருப்பினும் கடந்த ஆண்டின் $5 பில்லியன் பற்றாக் குறையைக் காட்டிலும் இது குறைவு. அந்தப் பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 9 விழுக்காட்டை வகித்தது.இந்த வரவுசெலவுத் திட்டத்தில் வேலை, வர்த்தக ஆதரவுத் தொகுப்புத் திட்டத்திற்கு $500 மில்லியன், குடும்ப ஆதரவுத் தொகுப்புத் திட்டத்திற்கு $560 மில்லியன் என இரு பெரிய தொகைகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் லாரன்ஸ் வோங் குறிப்பிட்டார்.

