சிங்கப்பூரில் நிறுவனங்கள் வெளியிடும் கரிமத்துக்கான வரி கூடுகிறது. இப்போது ஒரு டன் கரிமத்தை வெளியிட்டால் $5 வரி செலுத்த வேண்டும். இந்த வரி, 2030ஆம் ஆண்டுவாக்கில் $50 முதல் $80 வரை உயரும் என்று நேற்று நாடாளுமன்றத்தல் நிதி அமைச்சர் லாரன்ஸ் வோங் அறிவித்தார்.
சிங்கப்பூரில் ஆண்டுக்கு 25,000 டன் அல்லது அதற்கும் மேற்பட்ட அளவுக்குக் கரிமத்தை வெளியிடும் நிறுவனங்கள் கரிம வரியைச் செலுத்த வேண்டும்.
நிறுவனங்கள் வெளியிடும் கரிம அளவைக் குறைத்து சுற்றுப்புறத்தை பாதுகாக்கும் நோக்கத்தில் 2050ல் அறவே கரிமக் கழிவு இல்லாத நிலையை உருவாக்குவது சிங்கப்பூரின் இலக்கு என்றும் அமைச்சர் சொன்னார்.
இதனிடையே, சிங்கப்பூரில் அதிக கரிமத்தை வெளி யிடும் நிறுவனங்கள், அனைத்துலக கரிமத் தவிர்ப்பு ஆதரவு அனுமதி சான்றிதழை வாங்கி, தாங்கள் செலுத்த வேண்டிய கரிம வரியை அதன் மூலம் குறைத்துக்கொள்ளலாம்.
இதன் மூலம் ஐந்து விழுக்காடு வரை வரிக் கழிவு பெற முடியும் என்று நிதி அமைச்சர் தெரிவித் தார்.

