'சில்வியா லிம்மின் கைபேசியை அரசாங்கம் ஊடுருவவில்லை'

'சில்வியா லிம்மின் கைபேசியை அரசாங்கம் ஊடுருவவில்லை'

3 mins read
a645e275-304a-43a7-b66d-1d0b54d3d155
-

பாட்­டா­ளிக் கட்­சி­யின் தலை­வ­ரும் அல்­ஜு­னிட் குழுத் தொகு­தி­யின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான சில்­வியா லிம்­மின் கைபே­சியை அர­சாங்க அமைப்­பு­கள் ஊடு­ரு­வ­வில்லை என்று சட்ட, உள்­துறை அமைச்­சர் கா. சண்­மு­கம் நேற்று நாடா­ளு­மன்­றத்­தில் கூறி­னார்.

இது­கு­றித்து தற்­காப்பு

அமைச்­சின் பாது­காப்பு, உள­வி­யல் பிரி­வி­டம் கேட்டு உறுதி செய்­து­கொண்­ட­தாக அவர் தெரி­வித்­தார்.

அர­சாங்க அமைப்­பு­கள் தமது ஐஃ­போன் கைபே­சியை ஊடு­ரு­வி­யி­ருக்­கக்­கூ­டும் என்று ஆப்­பிள் நிறு­வ­னம் எச்­ச­ரிக்கை விடுத்­த­தாக திரு­வாட்டி சில்­வியா லிம் தெரி­வித்­தி­ருந்­தார்.

திரு­வாட்டி லிம்­மின் கைபே­சியை ஊடு­ரு­விப் பெறப்­பட்ட தக­வல்­கள் விற்­கப்­பட்­டி­ருக்­க­லாம் என்று ஆப்­பிள் நிறு­வ­னம் அவ­ரி­டம் கூறி­ய­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது.

திருவாட்டி லிம்முக்கு ஆப்­பிள் அனுப்­பி­ய­தா­கக் கூறப்­படும்

எச்­ச­ரிக்­கைத் தக­வ­லைப் பார்க்க விரும்­பு­வ­தாக அமைச்­சர் சண்­மு­கம் கூறி­னார்.

அது திரு­வாட்டி லிம்­முக்கு மட்­டும் அனுப்­பப்­பட்­ட­தா அல்­லது பல­ருக்கு அனுப்­பப்­பட்­ட­தா என்று அவர் கேள்வி கேட்­டார்.

திரு­வாட்டி லிம்­மின் கைபேசி உண்­மை­யி­லேயே ஊடு­ரு­வப்பட்டிருப்பது தெரி­ய­வந்­தால் உள்­துறை அமைச்­சுக்கு அது கவ­லை­யைத் தரு­ம் விவகாரமாக இருக்­கும் என்­றார் திரு சண்­மு­கம்.

ஒரு­வேளை திரு­வாட்டி லிம் கூறு­வது போல இருந்­தால் அவ­ரைப் போலவே மற்ற நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் பாதிப்­ப­டை­யக்­கூ­டும் என்­றார் அவர்.

அவ்­வாறு ஒரு நிலை ஏற்­பட்­டால் அந்த விவ­கா­ரம் குறித்து உள்­துறை அமைச்சு தீவிர விசா­ரணை நடத்­தும் என்று அமைச்­சர் சண்­மு­கம் கூறி­னார்.

‌இதற்கிடையே, இஸ்ரேலிய நிறு­வ­னம் குவா­டி­ரீ­ம் உருவாக்கிய வேவுபார்க்­கும் மென்­பொ­ருளை சிங்­கப்­பூர் அர­சாங்­கம் பயன்­ப­டுத்­து­கி­றதா என்­பது குறித்து நாடா­ளு­மன்­றத்­தில் நேற்று கேள்வி எழுப்­பப்­பட்­டது.

குவா­டி­ரீம் அல்­லது மற்ற வேவு பார்க்­கும் மென்­பொ­ருளை சிங்­கப்­பூர் அர­சாங்­கம் பயன்­ப­டுத்­து­கி­றதா என அல்­ஜு­னிட் குழுத் தொகுதி நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் லியோன் பெரேரா கேள்வி எழுப்­பி­னார்.

அர­சாங்­கங்­க­ளுக்­காக கைபேசி யை ஊடு­ருவி வேவுபார்க்கும் மென்­பொ­ருளை குவா­டி­ரீம் நிறு­வ­னம் உரு­வாக்­கு­வ­தாக ராய்ட்­டர்ஸ் செய்தி நிறு­வ­னம் இம்­மாத தொடக்­கத்­தில் அறிக்கை ஒன்றை வெளி­யிட்­டது.

இந்­தச் சேவை­யைப் பெற்ற முதல் சில அர­சாங்­கங்­களில் சிங்­கப்­பூர் அர­சாங்­க­மும் ஒன்று என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. அறிக்கை குறித்து சிங்­கப்­பூர் அர­சாங்­கம் அப்­போது எவ்­வித பதி­லும் அளிக்­க­வில்லை.

இந்­நி­லை­யில் வேவுபார்க்­கும் மென்­பொ­ருள் பற்றி திரு லியோன் பெரேரா கேட்ட கேள்­விக்கு உள்­துறை துணை அமைச்­சர் டெஸ்­மண்ட் டான் பதி­ல­ளித்­தார்.

"தேசிய பாது­காப்பை முன்­னிட்டு அர­சாங்­கம் மேற்­கொள்­ளும் நட­வ­டிக்­கை­கள் குறித்த தக­வல்­களை வெளி­யிட முடி­யாது. சிங்­கப்­பூ­ரைப் பாது­காப்­பு­டன் வைத்­தி­ருப்­பது அர­சாங்­கத்­தின் முக்­கிய பொறுப்­பு­களில் ஒன்று," என்­றார் திரு டான்.

பயங்­க­ர­வா­தம், வெளி­நாட்­டுக் குறுக்­கீடு, வேவுபார்த்­தல் போன்ற மிகக் கடு­மை­யான தேசிய பாது­காப்பு மிரட்­டல்­களை அர­சாங்­கம் எதிர்­கொள்ள வேண்டியிருப்பதாக திரு டான் கூறி­னார்.

"இப்­பிரச்­சி­னை­களை முடி­வுக்­குக் கொண்­டு­வர தேசிய பாது­காப்­பு தொடர்பாகப் பொறுப்பு வகிக்­கும் அரசு அமைப்­பு­கள், உள­வி­யல் தொடர்­பான ஆற்­றல்­க­ளைப் பயன்­ப­டுத்­தியே ஆக வேண்­டும். அதில் தொழில்­நுட்­ப­மும் அடங்­கும்," என்­றார் திரு டான்.

இந்த விவகாரம் குறித்து திருவாட்டி லிம்மும் பேசினார்.

"எனது கைபே­சியை ஊடு­ருவ எந்த ஓர் அர­சாங்க அமைப்­பும் முயற்சி செய்­ய­வில்லை என்ற உத்­த­ர­வா­தம் கிடைக்­குமா?" என்று திரு­வாட்டி லிம் கேட்­டார்.

இதற்­குப் பதி­லடி கொடுக்­கும் வகை­யில், திரு­வாட்டி லிம் உள­வி­ய­லில் ஈடு­பட்­டி­ருக்­கி­றாரா என மன்­றத் தலை­வர் இந்­தி­ராணி ராஜா கேள்வி எழுப்­பி­னார்.

திறந்த மன­து­டன் கேள்வி கேட்­ப­தாக நாடாளுமன்றத்தில் கூறிய திரு­வாட்டி லிம், "எனது கைபே­சியை ஊடு­ருவ அர­சாங்க அமைப்­பு­கள் முயற்சி செய்­யுமா, செய்­யாதா என்று எனக்­குத் தெரி­ய­வில்லை. நான் சிங்­கப்­பூர் அர­சாங்­கம் மீது குற்­றம் சுமத்­த­வில்லை.

"இது­கு­றித்து விளக்­கம் அறி­யவே கேள்­வி­யைக் கேட்­டேன். என்­னால் பதி­ல­ளிக்க முடி­யாது என்று துணை அமைச்­சர் கூறி­னால், அப்­ப­டியே ஆகட்­டும்," எனத் தெரிவித்தார்.

திரு­வாட்டி லிம்­மின் ஐஃபோனில் பாது­காப்பு தொடர்­பான பிரச்­சி­னை­கள் ஏற்­பட்­டால் அது­கு­றித்து காவல்­து­றை­யி­டம் புகார் செய்­யும்­படி துணை அமைச்­சர் டான் ஆலோ­சனை வழங்­கி­னார்.