செய்திக்கொத்து

செய்திக்கொத்து

3 mins read
092c6977-c872-41d0-84b7-78c291a42e30
-

கத்தியால் தாக்க முயன்றவரை சுட்ட காவல்துறை அதிகாரி

கத்தியைக் காட்டி தாக்க முயன்ற ஆடவரை காவல்துறை அதிகாரி துப்பாக்கியால் சுட்டார். 49 வயது சூ சியாவ் வீவுக்கு இடது கையில் காயம் ஏற்பட்டது. இந்தச் சம்பவம் நேற்று முன்தினம் இரவு கிளமெண்டி வட்டாரத்தில் நிகழ்ந்தது. சூ மீது மிரட்டல் குற்றச்சாட்டுகள் நேற்று பதிவாகின. நேற்று முன்தினம் கிளமெண்டி அவென்யூ 1ல் இரவு 8.40 மணி அளவில் 24 வயது ஆடவர் ஒருவரை சிங்கப்பூரரான சூ கத்தியால் காயப்படுத்தியதாக நம்பப்படுகிறது.

அதன் பிறகு ஏறத்தாழ 15 நிமிடங்கள் கழித்து, கிளமெண்டி காவல் பிரிவுத் தலைமையகத்துக்கு வெளியே அவர் இருந்ததாகவும் அங்கு கத்தியை ஏந்திக்கொண்டு 20 வயது ஆடவரை நோக்கி விரைந்ததாகவும் கூறப்படுகிறது.

மனநலப் பரிசோதனைக்காக சாங்கி சிறைச்சாலையில் உள்ள மருத்துவ நிலையத்தில் சூ தடுத்துவைக்கப்படுவார். அவருடைய வழக்கு அடுத்த மாதம் 11ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மின்சிகரெட் விற்பனை:

10 பேருக்குத் தண்டனை

மின்சிகரெட்டுகளை விற்பனை செய்த பத்து பேருக்கு சிறைத் தண்டனையும் $100,000க்கும் அதிகமான அபராதமும் விதிக்கப்பட்டுள்ளன.

19 வயதுக்கும் 36 வயதுக்கும் இடைப்பட்ட அந்த பத்து பேருக்கு எதிராக சுகாதார அறிவியல் ஆணையம் நடவடிக்கை எடுத்தது. கடந்த ஆண்டு நவம்பர் மாதத்திலிருந்து இவ்வாண்டு ஜனவரி மாதம் வரை இந்தத் தண்டனைகள் விதிக்கப்பட்டன. மின்சிகரெட்டுகள் தொடர்பாக டெலிகிராம் தளத்தில் விளம்பரம் செய்து அவற்றை விற்பனை செய்த 22 வயது ஏண்டி யாப் வென் ரொங் பிடிபட்டார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 25ஆம் தேதியன்று அவருக்கு $35,000 அபராதம் விதிக்கப்பட்டது.

தடை செய்யப்பட்ட பொருட்களை உட்லண்ட்ஸ் சோதனைச்சாவடி வழியாக சிங்கப்பூருக்குக் கொண்டு வந்த 26 வயது டேமியன் டங் னியா காங்கிற்கு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 16ஆம் தேதியன்று $13,500 அபராதம் விதிக்கப்பட்டது. தடை செய்யப்பட்ட பொருட்களை அவர் வாட்ஸ்அப் மூலம் விற்றதாகவும் கண்டுபிடிக்கப்பட்டது.

குழந்தையைத் துன்புறுத்திய

குழந்தைப் பராமரிப்பு ஆசிரியர்

ஒரு வயது ஆண் குழந்தையைத் துன்புறுத்தியதாகச் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டைப் பாலர் பள்ளியைச் சேர்ந்த குழந்தைப் பராமரிப்பு ஆசிரியர் ஒப்புக்கொண்டார். அந்த 55 வயது சிங்கப்பூர் மாதுக்கு எதிராக அடுத்த மாதம் 17ஆம் தேதியன்று தீர்ப்பளிக்கப்படும். குழந்தையின் தலையைத் தலையணை கொண்டு அழுத்தியது, கன்னத்தில் எட்டு முறை அறைந்தது, முதுகில் 20 முறைக்கும் அதிகமாக அடித்தது போன்ற குற்றங்களை அந்த ஆசிரியர் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. குழந்தையின் அடையாளத்தைக் காக்க ஆசிரியரின் பெயரை வெளியிடக்கூடாது என்று உத்தரவிட்டப்பட்டுள்ளது.

'வீட்டில் குணமடையலாம், மருத்துவமனை போகத் தேவையில்லை'

கொவிட்-19 கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள சிறுவர்களில் பெரும்பாலானோர் வீட்டிலிருந்தவாறு குணமடைய முடியும் என்பதால் அவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லத் தேவையில்லை என்று சிங்கப்பூர் மருத்துவச் சேவைகளின் இயக்குநர் பேராசிரியர் கென்னத் மாக் கடந்த புதன்கிழமையன்று பெற்றோருக்கு அறிவுறுத்தினார்.

மருத்துவமனைகளில் உள்ள விபத்து, அவசரகால சிகிச்சைப் பிரிவுக்குச் செல்லுமாறு மருத்துவ நிபுணர்களால் தெரிவிக்கப்பட்டால் மட்டுமே அங்கு செல்ல வேண்டும் என்றும் அவ்வாறு இல்லாவிடில் அங்கு செல்ல வேண்டாம் என்றும் அனைத்து வயதினரிடமும் அவர் கேட்டுக்கொண்டார். இவ்வாறு செய்தால் உண்மையிலேயே அவசர சிகிச்சை தேவைப்படுவோர் மீது விபத்து, அவசரகால சிகிச்சைப் பிரிவில் உள்ள மருத்துவ ஊழியர்கள் கவனம் செலுத்த முடியும் என்றார் பேராசிரியர் மாக்.

இரட்டையர் கொலை: தந்தை மீது இரண்டாவது குற்றச்சாட்டு

இரட்டைச் சகோதரர்கள் அப்பர் புக்கிட் தீமா கால்வாயில் இறந்து கிடந்த சம்பவம் தொடர்பில், நேற்று அவர்களின் தந்தை மீது இரண்டாவது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

கடந்த மாதம் கிரீன்ரிட்ஜ் கிரசெண்ட் பகுதியில் அமைந்த விளையாட்டு இடத்தில் மூடப்பட்ட கால்வாய் ஒன்றில், ஏஷ்டன் யாப் கய் ஷெர்ன் எனும் சிறுவனைக் கொலை செய்ததாக சேவியர் யாப் ஜுங் ஹவ்ன், 48, மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. முன்னதாக ஈத்தன் யாப் ஈ ஷெர்ன் என்ற சிறுவனைக் கொன்றதாக அந்தச் சிங்கப்பூரர் மீது சுமத்தப்பட்டிருந்த முதல் குற்றச்சாட்டும் நேற்று திருத்தப்பட்டது. ஆடவர் ஜனவரி 21ஆம் தேதியன்று மாலை 4.23 மணிக்கும் 6.18 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் கொலை செய்ததாக குற்றச்சாட்டு மாற்றப்பட்டது.