நிதி அமைச்சர் லாரன்ஸ் வோங் நாடாளு மன்றத்தில் முதன்முதலாக தாக்கல் செய்த வரவுசெலவுத் திட்டத்தின் பல அம்சங் களிலும் ஒவ்வொருவரின் ஆற்றல் முதல், தேவைவரை அனைத்தும் எதிரொலிக்கின்றன.
அதோடு, நிறுவனங்களின், ஊழியர்களின் ஆற்றல்களை மேம்படுத்தி, கரிம பாதிப்புகளை வேகமாகக் குறைத்து, பொது நிதிவளத்தைப் பலப்படுத்தி அவற்றின் மூலம் எதிர்காலத்திற்கு ஏற்ப பொருளியலை ஆயத்தப்படுத்த தேவையான அம்சங்களும் அந்தத் திட்டத்தில் உள்ளன.
கடந்த 2020 மற்றும் 2021ல் தாக்கலான பல வரவுசெலவுத் திட்டங்களும் கொவிட்-19 தொற்று பாதிப்புகளைச் சமாளித்து அவற்றில் இருந்து தப்பிப்பதில், வேலைகளைப் பாதுகாப்பதில், நிறுவனங்கள் தொடர்ந்து செயல்பட உதவுவதில் பெரிதும் ஒருமித்த கவனத்தைச் செலுத்தின.
2022 வரவுசெலவுத்திட்டம் வருவாய் அம்சங்களைக் கொண்டுள்ள ஒரு திட்டம் என்று நினைவில் கொள்ளப்படும்.
இந்தத் திட்டத்தில் துணிச்சலான புதிய அம்சங்கள் உள்ளன. பொருள் சேவை வரி (ஜிஎஸ்டி) உயரும் என்று ஏற்கெனவே எதிர்பார்க்கப்பட்டது.
அந்த வரியை 2025 வரை உயர்த்த வேண்டாம் என்று சில தொழிற்சபைகளும் விமர்சகர்களும் முன்னதாக கோரிக்கை விடுத்திருந்தனர்.
பணவீக்கம் அதிகரிக்கிறது என்பதே இதற்கான காரணம் என்று அவர்கள் தெரி வித்தனர். கொவிட்-19 தொற்று காரணமாக சில நிறுவனங்கள் இன்னமும் போராடி வருவதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.
ஒரே நேரத்தில் 2% உயர்த்திவிடலாம் என்று மற்றவர்கள் குரல் கொடுத்தனர்.
இந்த இரண்டுக்கும் இடைப்பட்ட ஒரு நிலையை எடுத்த அரசாங்கம், 2023ஆம் ஆண்டிலும் 2024 ஆம் ஆண்டிலும் ஆண்டுக்கு 1% என்ற வகையில் இந்த வரியை உயர்த்த முடிவு செய்துள்ளது.
இந்த ஏற்பாடு மக்களுக்கும் நிறுவனங்களுக்கும் கால அவகாசத்தைக் கொடுக்கும். அவர்கள் புதிய நிலைக்குச் சரிசெய்துகொள்ள உதவும்.
என்றாலும், நிர்வாகத்தைப் பொறுத்தவரை இந்த ஏற்பாடு கொஞ்சம் வசதி குறைவானதாகவே இருக்கும். வருவாய் கிடைக்க அதிக காலம் ஆகும் என்பதே இதற்குக் காரணம்.
தனிநபர் வருமான வரி உயரும் என்று அவ்வளவாக எதிர்பார்க்கப்படவில்லை.
வரி விதிக்கத்தக்க $500,000 முதல் $1 மில்லியன் வரையிலான வருவாய்க்கு 23% அளவிலும் $1 மில்லியனுக்கு அதிக வருவாய்க்கு 24% வரியும் விதிக்கப்படும் என்று வரவுசெலவுத் திட்டம் தெரிவிக்கிறது. இப்போது இந்த வரி 22% ஆக இருக்கிறது. 2024ல் சொத்து வரியும் அதிகரிக்கும்.
இவை ஆக அதிக வரி செலுத்தும் 1.2 விழுக்காட்டினரை மட்டும்தான் பாதிக்கும். அதேபோல் ஆக அதிக சொத்து வரி செலுத்தும் 7 விழுக்காட்டினரை மட்டும்தான் சொத்து வரி உயர்வு பாதிக்கும் என்பது இதில் குறிப்பிடத்தக்கது.
அவர்களுக்கு இது கட்டுப்படியாகும்.
ஆடம்பர கார்களுக்கு அதிக வரியை செலுத்த வேண்டி இருக்கும். ஆடம்பர கார் வரி உயர்வு காரணமாக பாதிக்கப்படக்கூடியவர்கள் இன்னும் குறைவு.
இந்த வரி உயர்வுகள் காரணமாக ஆண்டுக்கு ஏறத்தாழ $600 மில்லியன் வருவாய் அரசுக்குக் கிடைக்கும்.
இந்த நிதி வருவாய் ஏற்பாடுகள் ஒருபுறம் இருக்க, வருவாய் குறைந்த மற்றவர்களுக்காக குறிப்பிடத்தக்க பல ஏற்பாடுகளை 2020 வரவுசெலவுத் திட்டம் கொண்டிருக்கிறது.
ஜிஎஸ்டி உயர்வால் பாதிக்கப்படக்கூடிய நடுத்தர, குறைந்த வருமான குடும்பங்களைப் பாதுகாக்க ஜிஎஸ்டி உத்தரவாத தொகுப்புத் திட்டம் 10% ஆக உயர்த்தப்பட்டு $6.6 பில்லியனாக்கப்பட்டு இருக்கிறது.
இதில் வியப்பளிக்கும் ஒன்றாக நிரந்தரமான ஜிஎஸ்டி பற்றுச்சீட்டுத் திட்டமும் சேர்க்கப்பட்டு இருக்கிறது.
குறைந்த வருமான பிரிவினர், ஜிஎஸ்டி வரி உயர்வு மட்டுமின்றி, அனைத்து வரிகள் காரணமாக ஏற்படக்கூடிய எல்லா சுமை களையும் சமாளித்துவிடும் அளவிற்கு இந்த நிரந்தர ஜிஎஸ்டி பற்றுச்சீட்டுத் திட்டம் அவர்களுக்கு கை கொடுக்கும்.
மற்றவர்களுக்கு ஒரு பகுதி பாதுகாப்பை இது தரும்.
படிப்படியான சம்பள உயர்வு முறை மேலும் பல துறைகளுக்கு நீட்டிக்கப்படுகிறது. இது சில்லறை வர்த்தகத் துறையில் இருந்து தொடங்குகிறது.
இத்தகைய ஊழியர்களில் 94 விழுக்காட்டினரை உள்ளடக்குவது இந்தத் திட்டத்தின் இலக்காக இருக்கிறது.
'ஊழியர் உறுதுணை வருவாய் திட்டமும்' மேம்படுத்தப்படுகிறது. இந்தத் திட்டம் குறைந்த வருவாய் நிலையில் இருக்கும் 20% ஊழியர்களில் அரை மில்லியன் பேருக்கு உதவும். இவை எல்லாம் மொத்த மாக வருவாய் ஏற்றத்தாழ்வைக் குறைப்பதில் பெரும் பங்காற்றும்.
வாய்ப்புகள், வளங்களை வழங்கி அதிகமான மக்களை உள்ளடக்கவும் இது உறுதுணையாக இருக்கும்.
இவற்றுக்கு ஐந்தாண்டு காலத்தில் $9 பில்லியன் செலவு பிடிக்கும். இருந்தாலும் இது நல்ல பலன்களை ஏற்படுத்தக்கூடிய செலவினமாகவே இருக்கும்.
பொருளியலை எதிர்காலத்திற்கு ஆயத்தப்படுத்த உதவும் பல அம்சங்கள் 2022 வரவுசெலவுத் திட்டத்தில் இருக்கின்றன.
மின்னிலக்க ஆற்றலை மேலும் மேம்படுத்துவது, சிறிய, நடுத்தர நிறுவனங்கள் மேற்கொள்ளும் ஆய்வு, உருவாக்கத் திட்டங்களுக்கு ஆதரவு அளிப்பது, புத்தாக்கத்துடன் உலகமயமாகி மேம்பட அவற்றுக்கு உதவுவது பலவும் இவற்றில் அடங்கும்.
கரிம வரியை 2030ஆம் ஆண்டு வாக்கில் 80 விழுக்காடாக உயர்த்துவது என்பது துணிச்சலான ஒரு முடிவாகத் தெரிகிறது.
நிறுவனங்கள் வெளியிடும் ஒரு டன் கரிமத்திற்கு இப்போது $5 வரி செலுத்த வேண்டும். இது 2024ல் $25 ஆகவும் 2030 ஆம் ஆண்டு வாக்கில் $80 ஆகவும் உயரும்.
கடந்த 2018ஆம் ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில் இந்த வரியை $10 லிருந்து $15 ஆக உயர்த்துவது என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
ஆனால் இப்போது கரிம வரியை அதற்கு மேலும் உயர்த்துவது என்று துணிச்சலாக முடிவு எடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த வரி உயர்வு சுற்றுச்சூழல் வல்லுநர்கள் கூட எதிர்பார்க்காத ஒன்றாக இருக்கிறது.
இருந்தாலும்கூட கரிம வரியைப் பொறுத்தவரை இன்னமும் முன்னேறிய இதர நாடுகள் அளவுக்கு சிங்கப்பூர் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
எடுத்துக்காட்டாக ஐரோப்பிய ஒன்றியத்தில் சராசரி கரிம வரி US$42 (S$56) ஆக உள்ளது.
ஆனாலும் கரிம வரியைப் பொறுத்தவரை ஆசிய நாடுகளுக்கு சிங்கப்பூர் முன்னுதாரணமாகத் திகழும்.
கரிம வரி மூலம் கிடைக்கும் தொகை நிறுவனங்கள் கரிமக் கழிவைக் குறைத்துக்கொள்ள ஆதரவு அளிக்க செலவிடப்படும்.
அதோடு மட்டுமின்றி எரிசக்தியை மிச்சப்படுத்தக்கூடிய தீர்வுகளைக் காண்பதற்கான முதலீடாகவும் இந்தத்தொகை பயன்படுத்தப்படும்.
இதன் தொடர்பில் 2030ல் $35 பில்லியன் பசுமைப் பத்திரங்களை வெளியிட திட்டம் உள்ளது.
இவற்றின் விளைவாக கரிம வர்த்தகம் மற்றும் பசுமை நிதி வளத்திற்கான வட்டார மையமாகத் திகழ்வதற்குத் தோதான நிலையில் சிங்கப்பூர் மேம்படும்.
மொத்தமாகப் பார்க்கையில், 2022 வரவுசெலவுத் திட்டம் சரிசமம், நவீன எதிர்காலம் என்ற இரண்டு அம்சங்களையும் மிக திறமையுடன் மிக விவேகமாக, நேர்த்தி யாக கலந்து உருவாக்கப்பட்ட ஒன்றாக இருக்கிறது.
இந்த வரவுசெலவுத் திட்டம் சிங்கப்பூரின் பொருளியலையும் சமூகத்தையும் கொவிட்-19 தொற்றுக்குப் பிந்தைய உலகில் முன்னேற்றி கொண்டு செல்ல நீண்ட நெடுங்காலத்திற்கு உதவும்.

