தகவல் கசிவு தொடர்பில் தானா மேரா மனமகிழ் மன்றத்திற்கு $4,000 அபராதம் விதிக்கப்பட்டு இருக்கிறது. அந்த மனமகிழ் மன்றத்தைச் சேர்ந்த ஊழியர் ஒருவர் TMCC@1234 என்ற தனது மின்னஞ்சல் ரகசிய எண்ணைக் கிட்டத்தட்ட ஐந்தாண்டுகளாக மாற்றாமலேயே இருந்துவிட்டார்.
கணினி ஊடுருவல் பேர்வழிகள் அந்தக் கணக்கின் மூலம் 467 பேரின் சொந்த தகவல்களை எப்படியோ பெற்றுவிட்டார்கள். இதற்காக அந்த மனமகிழ் மன்றத்துக்கு அபராதம் விதிக்கப்பட்டு இருக்கிறது.
சிங்கப்பூரில் தனிப்பட்டோர் தகவல் பாதுகாப்பு ஆணையம் என்ற ஓர் அமைப்பு தனிப்பட்டவர்களின் ரகசிய தகவல்களைக் கண்காணித்து வருகிறது.
அந்த அமைப்பு வெள்ளிக்கிழமை எழுத்து மூலமான தனது முடிவை அறிவித்தது. சென்ற ஆண்டு பிப்ரவரி 22ல் நிகழ்ந்த அந்தச் சம்பவம் தொடர்பில், தானா மேரா மனமகிழ் மன்றம் தன்னுடைய பொறுப்பில் இருந்த தனிப்பட்டவர்களின் தகவல்களைப் பாதுகாக்க போதிய நடவடிக்கை எடுக்க தவறிவிட்டதாக அந்த அறிவிப்பு தெரிவித்தது.
மனமகிழ் மன்ற உறுப்பினர்கள் 155 பேரின் மின்னஞ்சல் முகவரிகள், பொதுமக்களில் 284 பேரின் மின்னஞ்சல் முகவரிகள் கசிந்துவிட்டன. இதன் விளைவாக அவர்களுக்குப் போலியான மோசடி மின்னஞ்சல்கள் அனுப்பப்பட்டன.
அதோடு, மேலும் 28 பேரின் பெயர்கள், அடையாள எண்கள், மின்னஞ்சல் முகவரிகளும் கசிந்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
அந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து தானா மேரா மனமகிழ் மன்றம் தகவல் தொழில்நுட்ப நிறுவனம் ஒன்று பரிந்துரைத்த நடவடிக்கைகளை அமல்படுத்தி இருக்கிறது. அதன்மூலம் இணையப் பாதுகாப்பை அது மேம்படுத்தி இருக்கிறது. தனது ரகசிய குறிஎண் கொள்கையையும் ஆவணப்படுத்தி இருக்கிறது.

