உறவினரான இளம் பெண்ணை பாலியல் வன்செயலுக்கு ஆளாக்கியதாக 20 வயது ஆடவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு நேற்று மாவட்ட நீதிமன்றத்தில் மீட்டுக்கொள்ளப்பட்டது. அவர் சுமார் 11 மாத காலம் விசாரணைக் காவலில் இருந்து பிறகு விடுவிக்கப்பட்டார். குற்றமற்றவர் என்று நீதிமன்றம் அவரை விடுவித்தது.
கடந்த 2014ல் அந்த ஆடவருக்கு 12 அல்லது 13 வயதான போது அந்த பாலியல் வன்செயல் சம்பவம் நிகழ்ந்ததாகக் கூறப்பட்டது. அதன் தொடர்பில் அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டு இருந்ததாகத் தெரியவந்தது.
அந்த ஆடவர் தனக்கு விதிக்கப்பட்டு இருக்கும் 36 மாத நிபந்தனை எச்சரிக்கை காலத்தில் நிபந்தனைகளை மீறினால் அல்லது மீண்டும் குற்றச்செயலில் ஈடுபட்டால் அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் புதுப்பிக்கப்படும் என்று தலைமைச் சட்ட அதிகாரி அலுவலக பேச்சாளர் கூறினார்.

