மனநல முறையை இளையர்கள் எப்படி அணுகுகிறார்கள் என்பதை அணுக்கமாக ஆராய்வதற்காக ஆய்வு ஒன்றை நடத்தும்படி அதிகாரிகள் உத்தரவிட்டு இருக்கிறார்கள்.
அந்த ஆய்வின் மூலம் தெரியவருபவை, இளையர்களின் மனநலனுக்குக் கிடைக்கக்கூடிய ஆதரவை மேம்படுத்துவதற்கான கொள்கைகளையும் செயல்திட்டங்களையும் வகுக்கப் பயன்படுத்தப்படும்.
ஆய்வுக்கான ஏலக்குத்தகை ஆவணங்கள் மூலம் இது தெரியவந்துள்ளதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் குறிப்பிட்டு உள்ளது.
அரசாங்க அமைப்புகளிலும் சமூக சேவை நிறுவனங்களிலும் மனநல தகவல்களையும் மனநலனுக்கான ஆதரவையும் எப்படி பெறலாம் என்பது பற்றி ஆராய்கின்ற 15 முதல் 34 வரை வயதுள்ள ஏறத்தாழ 30 இளையர்கள் எந்தெந்த வழிகளைப் பின்பற்றுகிறார்கள் என்பதை அந்த ஆய்வு ஆராயும்.
ஆய்வு முடிவை அடிப்படையாகக் ெகாண்டு, மனநல வளங்களையும் சேவைகளையும் வழங்குவதை வலுப்படுத்தும் வகையில் குறைபாடுகளும் துறைகளும் கண்டறியப்பட்டு அவை சீர் செய்யப்படும்.
உயர்கல்வி நிலையங்களில் படிக்கும் இளையர்கள், வேலைகளை பார்க்கத் தொடங்குபவர்கள், வேலை பார்க்கும் இளையர்கள் உள்ளிட்டோர் இந்த ஆய்வில் உட்படுத்தப்படுவார்கள் என்று தெரி விக்கப்பட்டு உள்ளது.
ஆய்வு முடிவுகள் இந்த ஆண்டு ஏப்ரல் முடிவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இளையர்களிடம் காணப்படும் மனநலம், நல்வாழ்வு உள்ளிட்ட முக்கியமான போக்குகளைப் புரிந்துகொள்வதற்காக கலாசார, சமூக இளையர் துறை அமைச்சும் தேசிய இளையர் மன்றமும் பல முயற்சிகளை எடுத்து வருகின்றன.
அவற்றின் ஒரு பகுதியாக இந்த ஆய்வு இடம்பெறுகிறது என்று அமைச்சின் பேச்சாளர் கூறியதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரிவித்து உள்ளது.
மனநல முறையை எப்படி இளையர்கள் அணுகுகிறார்கள் என்ற வழிமுறை மூலம் அரசாங்கம் அவர்களின் வாழ்க்கை அனுபவங்களைச் சிறந்த முறையில் புரிந்துகொள்ள முடியும் என்று அந்தப் பேச்சாளர் தெரிவித்தார்.

