முன்னாள் பாட்டாளிக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ரயீசா கான் நாடாளுமன்றத்தில் உண்மைக்கு மாறாகப் பேசியதன் மீதான நாடாளுமன்ற சிறப்புரிமைகள் விசாரணைக் குழுவின் அறிக்கை தொடர்பாகப் பிரதமர் லீ சியன் லூங் கடந்த செவ்வாய்க்கிழமையன்று நாடாளுமன்றத்தில் பேசினார். பிரதமர் உரையின் முக்கியப் பகுதிகள் இங்கு தொகுத்தளிக்கப்பட்டுள்ளன.
நிகழ்ச்சிநிரல் அட்டவணைப்படி, நாடாளுமன்றச் சிறப்புரிமைகள் குழுவின் அறிக்கை கிடைக்கப் பெற்றதைத் தொடர்ந்து, நாடாளுமன்றம் என்ன நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என்பது பற்றி நாம் விவாதிக்கிறோம்.
ஆனால் அவைத் தலைவர் சற்றுமுன்னர் நம்மிடம் சொன்னதுபோல், ஜனநாயக ஆட்சிமுறை சிங்கப்பூரில் எவ்வாறு இயங்கவேண்டும் என்ற பரந்த பிரச்சினை நம்முன் இருக்கிறது.
நமது ஜனநாயக ஆட்சிமுறை சரியாக இயங்குவதற்குத் தேவையான இன்றியமையாத அமைப்புகள், வழக்கங்கள், விழுமியங்கள் யாவை? அந்த அமைப்புகள், வழக்கங்கள், விழுமியங்கள் ஆகியவற்றைப் பாதுகாக்க, இந்தப் பொதுப்படையான கோட்பாடுகளை, தற்போது நம்முன் இருப்பதுபோன்ற குறிப்பிட்ட சூழ்நிலைகளில், எவ்வாறு செயல்படுத்தப் போகிறோம்? நம் நாடு நெடுங்காலத்திற்கு மகிழ்ச்சியும், செழிப்பும், வளர்ச்சியும் அடையும்வண்ணம், எதிர்காலத்திற்காக நமது ஜனநாயக ஆட்சிமுறையை நாம் எப்படிக் கட்டிக்காக்கப் போகிறோம்? நான் இன்று பேச விரும்பும் மேலும் மூன்று அடிப்படையான கேள்விகள் இவை.
அரசாங்க அமைப்புகளின் அடிப்படை
ஒரு நாட்டின் ஜனநாயக ஆட்சிமுறையின் தரம், அதன் மக்களின் விழுமியங்களைச் சார்ந்திருக்கிறது: அதாவது, மக்கள் எதைச் சரியென்று அல்லது தவறென்று கருதுகிறார்கள், எதை முக்கியமென நினைக்கிறார்கள், எந்த நோக்கங்களை ஆதரிக்கிறார்கள், எந்தக் கொள்கைகளைக் கொண்டிருக்கிறார்கள் என்பன. நீங்கள் வரலாற்றின் எந்தக் காலகட்டத்தை எடுத்துக்காட்டாகப் பார்த்தாலும், திறம்பட இயங்கும் ஜனநாயக ஆட்சிகளில் தெளிவான, வலுவான வழக்கங்கள் நடப்பிலிருக்கும்.
ஆட்சிக்கு உட்படுவோர், ஆட்சிப் பொறுப்பேற்றிருப்போர் ஆகிய இரு தரப்பும், அல்லது என்றாவது ஒரு நாள் ஆட்சிப் பொறுப்பேற்க முயற்சி செய்வோர் இந்த வழக்கங்களைச் சீர்தூக்கி கட்டிக்காப்பார்கள். ஆரோக்கியமான ஜனநாயக ஆட்சிமுறைகள், ஊழலுக்கு அடிபணியாத நற்பண்பாளர்களை இப்படித்தான் தேர்ந்தெடுக்கின்றன. நல்ல ஜனநாயகம் நல்ல ஆளுமையை உருவாக்கும், நல்ல ஆளுமை நல்ல அரசியலை உருவாக்கும். இந்தக் கண்ணியமான சுழல்வட்டத்திற்கு வலுவான அமைப்புகள் அடிப்படையாகத் திகழ்ந்து, நிலைநாட்டவேண்டும்.
ஜனநாயக ஆட்சிமுறையின் உச்ச அமைப்பு நாடாளுமன்றம். நாட்டின் ஆக முக்கிய விவகாரங்கள் கலந்தாராயப்படுவதும், சட்டங்கள் இயற்றப்படுவதும், நிதி ஒதுக்கீடுகளுக்கு வாக்களிக்கப்படுவதும் அங்குதான். அரசாங்கம் இவற்றுக்கான செயல்முறைகளை வகுத்து, கொள்கைகளைப் பரிந்துரைக்கும்.
அதே சமயத்தில், நாடாளுமன்றத்தின்வழி பொதுமக்களுக்கும், ஆளும் கட்சி மக்களின் ஆதரவை இழக்க நேரிட்டால் அரசாங்கத்தை அமைப்பதற்காகக் காத்திருக்கும் அதே வேளையில் அரசாங்கத்தின் செயல்பாடுகளைக் கவனிக்கும் எதிர்க்கட்சிக்கும் அரசாங்கம் பதில் அளிக்கவேண்டும்.
இந்த முக்கியப் பணியை நிறைவேற்ற, நாடாளுமன்றம் மதிக்கப்படவேண்டும். அதன் உறுப்பினர்கள், செயல்முறைகள், நடைமுறைகள் நம்பப்படவேண்டும்.
நாடாளுமன்றத்தின் நன்மதிப்பையும் நிலைப்பாட்டையும் பாதுகாக்க, தெளிவான வழக்கங்களும் ஊழலுக்கு உட்படாத பண்புகளும் அவசியம்.
நாடாளுமன்றத்தின் நிலைப்பாடு கேள்விக்குரிய ஒன்றானால், ஆட்சிமுறை இயங்க முடியாது. அதனால்தான், நாடாளுமன்ற உறுப்பினர்களின் நடத்தைக்குச் சரியான வழக்கங்களை நிலைநாட்டுவதும் அவற்றைக் கவனமாகப் பாதுகாப்பதும் அவசியம்.
எப்போதும் உண்மையே பேசவேண்டும். கடினமாக அல்லது சங்கடமாக இருந்தாலும், குறிப்பாக அப்படிப்பட்ட சூழ்நிலைகளில்தான், சிங்கப்பூருக்குச் சரியானதைச் செய்யவேண்டும். ஏதாவது தவறாக நடந்தால், அல்லது தவறு செய்யப்பட்டிருந்தால், அதற்குத் தாமாகப் பொறுப்பேற்க வேண்டும். உண்மையைத் திரித்து மறைப்பதற்காக மூடி மறைக்கவோ, சுற்றிவளைக்கவோ, அல்லது ஒரு பொய்யை மறைக்க மேலும் பொய் சொல்லவோ கூடாது.
சரியான பண்புகளைக் கொண்டவர்களால் மட்டுமே சரியான வழக்கங்களை சீர்தூக்கி கட்டிக்காக்க முடியும். ஏனெனில், வழக்கங்கள் என்பன வெளித்தோற்றத்திற்காக மக்கள் உட்படும் சாதாரண சமூக நடைமுறைகள் மட்டுமல்ல. அவை மக்கள் நம்பிக்கை வைத்து, முக்கியத்துவம் அளித்துக் கடைப்பிடிக்கும் உளப்பூர்வமான பண்புகளின் வெளிப்பாடுகளாக இருக்க வேண்டும்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடிப்படையில் நேர்மையானவர்களாகவும், பேச்சிலும் செயலிலும் நாணயமானவர்களாகவும், எப்போதும் தம்மைவிடக் கடமைக்கும், கட்சியைவிட நாட்டுக்கும் முன்னுரிமை அளிப்பவர்களாகவும் இருக்கவேண்டும். நம்முடைய உயரிய கடமை, உச்ச விசுவாசம் நமது கட்சிமீது இல்லாமல், சிங்கப்பூர்மீது இருக்கவேண்டும். அதனால்தான் பதவி ஏற்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், "சிங்கப்பூர் குடியரசிடம் உண்மையாகவும் விசுவாசமாகவும்" இருக்க உறுதிமொழி எடுக்கின்றனர். சொல்லப்போனால், நாடாளுமன்ற உறுப்பினரோ இல்லையோ, சிங்கப்பூர் அரசியலில் ஈடுபாடுள்ள ஒவ்வொருவருக்கும் இது பொருந்தும்.
திரு பிரித்தம் சிங்கின் முன்னாள் உதவியாளரான பாட்டாளிக் கட்சி உறுப்பினர் லோ பெய் யிங் குழுவிடம் சொன்னதுபோல், "இது எனக்கு மிகுந்த மனவேதனை அளிக்கிறது. ஆனால், வேறு எதையும்விட, என் நாட்டுக்கு உண்மையாக இருப்பதே எனக்கு முக்கியமானது." இந்த அவையில் இருக்கும் ஒவ்வொருவரும் அவர் சொன்னதை ஏற்பார்கள் என நான் நம்புகிறேன்.
இதே வழக்கங்களையும் பண்புகளையும் சிங்கப்பூர் மக்கள், வாக்காளர்கள் - ஆதரித்து, வலியுறுத்தி, நிலைநாட்டுவது நமது ஜனநாயக ஆட்சிமுறைக்கு அவசியம். அப்போதுதான், திருவாட்டி லோ செய்ததுபோல, அவர்களாலும் தவறு நடக்கும்போது அதை உணரவும், அதிகாரத்தில் இருப்பவர்களின், அல்லது அதிகாரத்தை ஏற்க விரும்புபவர்களின் செய்கைகள் இந்த உயர்தரத்தை எட்டாதபோது அவர்களைப் பொறுப்பேற்கச் செய்யவும் முடியும். ஜனநாயக ஆட்சிமுறை இப்படித்தான் சரியாக இயங்கமுடியும்.
பொதுமக்களின் நம்பிக்கை
வாக்காளர்களிடத்திலும் அவர்களது தலைவர்களிடத்திலும் சரியான பண்புகளை வளர்ப்பது பல ஆண்டுகாலப் பணியாகும். அதற்கு இடைவிடாத முயற்சியும் உளப்பூர்வமான ஆர்வமும் தேவை. ஆனால், அது எப்போதும் வெற்றி அடைவது இல்லை.
பெரும்பாலான நாடுகள் உயரிய கொள்கைகளையும் மேன்மையான பண்புகளையும் அடிப்படையாகக் கொண்டு செயல்படத் தொடங்குகின்றன. ஆனால், நாட்டைத் தோற்றுவித்த தலைவர்கள், முன்னோடித் தலைமுறையினர் ஆகியோருக்குப் பிறகு, அடுத்தடுத்த தலைமுறைகளில் நிலைமை படிப்படியாக மாறத் தொடங்குகிறது.
தொடக்கத்தில் உணர்ச்சிவசத்துடன் செயல்பாடுகள் தொடங்குகின்றன. சுதந்திரத்திற்காகப் போராடி வெற்றி பெற்ற தலைவர்கள் பெரும் துணிச்சலும், மிகுந்த கலாசார உணர்வும், தலைசிறந்த ஆற்றலும் கொண்ட தனித்துவமானவர்களாகப் பெரும்பாலும் இருப்பார்கள். அவர்கள் தீத்தணலைக் கடந்துசென்று மக்களுக்கும் நாடுகளுக்கும் தலைவர்களாகத் தலையெடுத்தனர்.
நம் நாட்டை நிறுவியவர்களும் வலுவான அடிப்படைகளையும் அமைப்புகளையும் நிர்மாணிக்க தங்களால் இயன்ற அனைத்தையும் செய்தனர். அப்போது பிரதான எதிர்க்கட்சியாக இருந்த பாரிசான் சோஷியலிஸ் கட்சி 1966ல் நாடாளுமன்றத்திலிருந்து வெளியேற முடிவெடுத்து ஒட்டுமொத்த ஆட்சிப் பொறுப்பையும் மக்கள் செயல் கட்சியிடம் விட்டுச்சென்றபோது, நம் நாட்டை நிறுவியவர்கள் நாடாளுமன்ற ஜனநாயகத்தையும் பல கட்சி ஆட்சிமுறையையும் நிலைநாட்டினார்கள்.
திரு லீ குவான் இயூ அந்தக் கட்டத்தில் ஒருமுறை விளக்கியதுபோல், மக்கள் செயல் கட்சி முழு ஆதிக்கம் பெற்றிருந்த நிலையில், அவர் அரசமைப்புச் சட்டத்தை மாற்றி, ஒரு கட்சி நாட்டை அமைத்திருக்கலாம். ஆனால், அவர் வேண்டுமென்றே அவ்வாறு செய்யவில்லை. ஏனெனில், தேர்தலில் போட்டியிட்டு வெல்ல வேண்டிய அவசியம் இல்லாமல் போனால், ஆளும் கட்சி காலப்போக்கில் மெத்தனமாகி, சிங்கப்பூர் பெரும் பாதிப்பிற்கு உள்ளாகக்கூடும் என்பதை அவர் அறிந்திருந்தார்.
அதனால்தான் அவர்கள் அதிக திடமான வழிமுறையை மேற்கொண்டனர். அரசியலில் போட்டியைத் தக்கவைத்தனர். நாடாளுமன்றம், நீதித்துறை, அரசாங்கச் சேவை, காவல்துறை, ஆயுதப்படை, பிற்பாடு தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபர், அதிபர் ஆலோசனை மன்றம் ஆகிய அமைப்புகளை அவர்கள் ஏற்படுத்தினர். முக்கியமான ஒரு சிலர் அனைத்து விசைகளையும் அழுத்தி, அனைத்தையும் செயல்படச் செய்வதை மட்டுமே சார்ந்து இருக்காமல், அதிக மீள்திறன்மிக்க அடிப்படையில் சிங்கப்பூர் செயல்படத் துணைபுரிவது இதன் நோக்கம்.
இருந்தாலும், இந்த அமைப்புகளை இயக்குவதற்கு நல்லவர்கள் தேவை. அதனால் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், நீதிபதிகள், அரசாங்க அதிகாரிகள், பற்பல துறைகளின் வல்லுநர்கள் ஆகியோரைச் சேர்த்து, பயிற்சி அளித்து, பணியில் அமர்த்த வேண்டிய அவசியம் அவர்களுக்கு இருந்தது. ஆற்றல், கடப்பாடு, பொதுச் சேவை உணர்வு, அனைத்திலும் மேலாக நேர்மை, கண்ணியம் ஆகிய பண்புகளுடன், கடமைக்கும் சிங்கப்பூருக்கும் முன்னுரிமை அளித்து இந்நாட்டை வெற்றி அடையச் செய்வார்கள் என சிங்கப்பூரர்களால் நம்பக்கூடியவர்களாக அவர்கள் இருக்கவேண்டும். அப்படித்தான் நமது இன்றைய ஆட்சிமுறை அமைக்கப்பட்டது.
நமக்கு வழிவழியாகக் கிடைத்த இந்த ஆட்சிமுறையைப் பாதுகாப்பதும் தொடர்ந்து நிர்மாணிப்பதும் நம் அனைவரது அடுத்தடுத்த தலைமுறைகளின் கடமை. நாம் இதைச் செய்வதற்கு நேர்மையைக் கட்டிக்காத்து, விதிமுறைகளையும் தரங்களையும் நிலைநாட்டி, அனைவருக்கும் அதே விதிமுறைகளைச் சமமாக விதித்து, யாருமே சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்களாக இல்லாததை உறுதி செய்யவேண்டும்.
நம்மால் இதை நிலையாகவும், இடைவிடாமலும், தயக்கமில்லாமலும் செய்ய முடிந்தால், சீரான செயல்பாட்டை நாம் அடைய முடியும். நமது தலைவர்கள், செயல்முறைகள், அமைப்புகள் மீது மக்களுக்கு நம்பிக்கை இருக்கும். ஆட்சிக்கு உட்படுவோரும் ஆட்சி புரிவோரும் சரியான வழக்கங்களையும் பண்புகளையும் கடைப்பிடித்து செய்கைகளில் வெளிப்படுத்தும்போது ஜனநாயகம் முதிர்ச்சி அடைந்து, ஆழமாக வேரூன்றி, மீள்திறனை வளர்த்துக்கொள்ளும். சிங்கப்பூர் தொடர்ந்து செழிப்படையும்.
ஆனால் நாம் நம்மை மெத்தனமடைய அனுமதித்தால் இங்கும் அங்கும், இந்த ஒருமுறை மட்டும் என நினைத்துக்கொண்டு தரங்களைக் கொஞ்சம் தளர்த்தினால், பொய்யைக் கண்டுகொள்ளாமல் விட்டால் குறைபாடற்ற சுழல்வட்டம் தட்டுத்தடுமாறி தோல்வி அடையத் தொடங்கும்.
சிங்கப்பூர் சரிந்துவிடாமல் எப்போதும் உச்சத்தில் இருப்பதை உறுதிசெய்யும் இந்தக் குறைபாடற்ற சுழல்வட்டம் நீடித்து நிலைப்பதற்கான முக்கிய காரணம் என்ன?
அதுதான் நம்பிக்கை.
சிங்கப்பூர் இன்று நம்பிக்கை மிகுந்த சமுதாயமாகத் திகழலாம். ஆனால், அந்நிலைமை என்றென்றும் நீடிக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. சரியான பண்புகளுடன் தவறுகளைச் சுட்டிக்காட்டி, தேவையானபோது தண்டனை அளித்து, நமது அமைப்புகளின் புனிதத்தைக் கட்டிக்காத்து, பொதுமக்களின் நம்பிக்கையை மெத்தனமாகக் கருதாமல், பொய்களும், உண்மைக்குப் புறம்பானவையும், போலி பாசாங்குகளும் அரசியலில் ஏற்கப்படும் வழக்கங்களாகிவிட அனுமதிக்காத தலைவர்கள் நமக்கு இருப்பதை உறுதிசெய்து, நமது உயர் தரங்களை உறுதியுடன் நிலைநாட்டுவது அவசியம்.
சிறப்புரிமைகள் குழு விசாரணைக்கு இட்டுச் சென்ற சம்பவங்கள்
சிறப்புரிமைகள் விசாரணைக் குழுவின் அறிக்கைக்கு நாடாளுமன்றம் என்ன நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதை நாம் விவாதிக்கையில், இவைதான் அபாயத்தில் உள்ளன.
திருவாட்டி ரயீசா கான் நாடாளுமன்றத்தில் பொய் சொன்னார். சென்ற ஆண்டு ஆகஸ்ட் மூன்றாம் தேதி இருமுறையும், இரண்டு மாதங்களுக்குப் பின்னர் கேள்வி கேட்கப்பட்டபோது மூன்றாவது முறையும் பொய் சொன்னார். பிற்பாடு, நாடாளுமன்றத்தில் பொய் சொன்னதை அவர் ஒப்புக்கொண்டார்.
நாடாளுமன்ற சிறப்புரிமைகளின் இந்த மீறலைக் கையாளுவதற்காக, விசாரணைக் குழுவை அமைத்தோம். திருவாட்டி கானும் மற்ற சாட்சிகளும் விசாரணைக்கு அழைக்கப்பட்டனர். விசாரணைக் குழு தீர விசாரித்த பிறகு, நியாயமான காரணங்களுடன் ஒரு முடிவை எட்டியது: திருவாட்டி கான் குற்றவாளி, அவர் பொய் சொன்ன ஒவ்வொரு சம்பவத்திற்கும் அபராதம் விதிக்கப்படவேண்டும்.
ஆனால் விசாரணைக் குழுவின் விசாரணையின்போது, வேறு இரு முக்கிய விவகாரங்கள் எழுந்தன. விசாரணைக் குழு அவற்றை நாடாளுமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டு வந்து, அவற்றைக் கையாளுவதற்கான யோசனையை முன்வைத்திருக்கிறது.
முதலாவதாக, பாட்டாளிக் கட்சியின் மூன்று தலைவர்கள் திரு பிரித்தம் சிங், திரு ஃபைசல் மனாப், திருவாட்டி சில்வியா லிம் ஆகியோர் திருவாட்டி கானை நாடாளுமன்றத்தில் தொடர்ந்து பொய் சொல்லச் சொன்னார்களா என்பது. அவர்கள் அப்படிச் செய்திருந்தால், திருவாட்டி கான் நாடாளுமன்றத்தில் உண்மைக்குப் புறம்பாகப் பேசியதுபோல் அதுவும் கடுமையான அல்லது அதைவிடக் கடுமையான ஒழுங்கீனமாகும். நாடாளுமன்றம் இதனைக் கையாளவேண்டும், ஆனால் இதைவிட மோசமான இரண்டாவது விவகாரத்திற்குத் தெளிவுகண்ட பிறகுதான்.
தலைவர் விளக்கியதுபோல், பாட்டாளிக் கட்சியின் மூன்று தலைவர்களும் உண்மையைச் சொல்வதாக சத்தியப் பிரமாணம் எடுத்த பிறகு, திருவாட்டி கானிடம் தொடர்ந்து பொய் சொல்லச் சொன்னதை மூடி மறைப்பதற்காக, விசாரணைக் குழுவிடம் உண்மைக்குப் புறம்பானவற்றைச் சொன்னார்களா என்பதே அந்த இரண்டாவது விவகாரம்.
மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களும் விசாரணைக் குழுவிடம் விவரித்த அவர்களது மேன்மையான நோக்கங்களுக்கும், அவர்கள் உண்மையில் செய்தவற்றுக்கும், அல்லது பல சமயங்களில், செய்யத் தவறியவற்றுக்கும் இடையில் தெளிவான முரண்பாடுகள் இருந்தது விசாரணைக் குழுவுக்குப் புலப்பட்டது. பாட்டாளிக் கட்சித் தலைவர்கள் சொன்னவற்றுக்கு இடையிலும்கூட கடுமையான முரண்பாடுகள் இருந்தன.
சத்தியப் பிரமாணத்தின்கீழ் உண்மைக்குப் புறம்பாகப் பேசுவது சாதாரண விவகாரமல்ல. உண்மையைச் சொல்வதாகச் சத்தியம் செய்த பிறகு பொய் சொல்லும் செயல் இது. இந்த வழக்கில் ஒருமுறை, இருமுறை அல்ல, சில நாள்களுக்கு நீடித்த பல மணிநேர விசாரணையின்போது மீண்டும் மீண்டும் பொய் நிலைநாட்டப்பட்டது.
இந்தப் பொய்கள் தற்செயலானவையோ அல்லது சூழ்நிலை காரணமானவையோ அல்ல, தவறாக வழிநடத்தி ஏமாற்றவேண்டும் என்ற உறுதியான நோக்கத்துடன் வேண்டுமென்றே முன்கூட்டியே திட்டமிட்டுச் சொல்லப்பட்டவை என்பது விசாரணைக் குழுவின் மதிப்பீடு. இவை நாடாளுமன்றச் சிறப்புரிமைகளின் மீறல் மட்டுமல்ல, நீதிமன்றத்தில் மெய்ப்பிக்கப்பட்டால் சத்தியப் பிரமாணத்தின்கீழ் அளிக்கப்பட்ட பொய் சாட்சியமாகும். பொய் சாட்சியம் அளிப்பது கடுமையான குற்றச் செயலாகும்.
எனவே, இரண்டு தனித்தனி பிரச்சினைகள் உள்ளன. ஒன்று, திருவாட்டி கானிடம் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களும் பொய் சொல்லச் சொன்னார்களா என்பது; இரண்டு, சத்தியப் பிரமாணத்தின்கீழ் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களும் பொய் சொன்னார்களா என்பது.
இரண்டும் உறுதிசெய்யப்பட்டால், பாட்டாளிக் கட்சித் தலைவர்கள்மீது, குறிப்பாக எதிர்க்கட்சித் தலைவர்மீது மிகவும் மோசமாகப் பிரதிபலிக்கும். இரு விவகாரங்களும் சரியான முறையில் கையாளப்படாவிட்டால், நாடாளுமன்றத்தை அவமதித்து, பெருமைக்குரிய இந்த அமைப்பின் நன்மதிப்பைக் குலைத்துவிடும்.
சிலர் கேட்கிறார்கள்: "பொய் சொன்னது திருவாட்டி ரயீசா கான் தானே? பாட்டாளிக் கட்சித் தலைவர்கள் ஏன் அதிக கடுமையாக நடத்தப்படுகிறார்கள்?"
அவைத் தலைவர் சற்றுமுன்னர் குறிப்பிட்டதுபோல், குழுவின் முடிவு சரியாக இருந்தால், திரு சிங்கும் சக பாட்டாளிக் கட்சித் தலைவர்களும் விசாரணைக் குழுவிடம் பொய் சொல்லியிருக்கிறார்கள். தங்களைப் பாதுகாத்துக் கொள்ளவும், தங்களது பங்கை மூடி மறைக்கவும், முழுப் பழியையும் திருவாட்டி கான்மீது சுமத்தவும், அவரும் திருவாட்டி லோ போன்ற மற்ற சாட்சிகளும் விசாரணைக் குழுவிடம் பொய் சொன்னதாகச் சொல்லி, சத்தியப் பிரமாணத்தின்கீழ் பொய் சொல்லியிருக்கிறார்கள். திருவாட்டி கான் செய்ததைவிட இது உண்மையில் மிகக் கடுமையான செயல்.
சத்தியப் பிரமாணத்தின்கீழ் பொய் சொன்னதன்வழி, விசாரணைக் குழுவின் பணிக்கு இடையூறு உண்டாக்கி இருக்கிறார்கள். எந்த ஒழுங்கீனத்தை விசாரிப்பதற்காகக் குழு அமைக்கப்பட்டதோ, அதே ஒழுங்கீனத்தை அவர்கள் வெளிக்காட்டினார்கள். நாடாளுமன்ற உறுப்பினர்கள்மீது எதிர்க்கட்சித் தலைவரான திரு சிங்மீது வைக்கப்பட்டுள்ள நம்பிக்கைக்கு அவர்கள் துரோகம் இழைத்துவிட்டார்கள். இது உண்மையாக இருந்தால், மிகவும் கடுமையான விவகாரமாகும்.
எனவே, நாடாளுமன்றம் இதுபற்றி என்ன செய்யப் போகிறது என்பதை நாடாளுமன்ற உறுப்பினர்கள் இப்போது தீர்மானிக்க வேண்டும். எதுவுமே நடக்காததுபோல் நாம் இருந்துவிடலாமா? அல்லது விசாரணைக் குழு முன்வைத்த வலுவான ஆதாரங்களின்படி அது சாத்தியமில்லாவிட்டால், நமது தரங்களைச் சற்றே குறைத்துக்கொண்டு, உண்மைக்குப் புறம்பானவை சொல்லப்பட்டிருந்தாலும் அவ்வளவு கடுமையான பொய் அல்ல என்றும் எந்தத் தீங்கும் நேரவில்லை என்றும் வாதாடலாமா?
இந்த இரண்டில் ஒன்றை நாம் செய்தால், நாடாளுமன்றத்தை அவமதித்து இழிவுபடுத்தும் செயலுக்கு நாமும் உடந்தையாகிவிடுவோம். இந்த மீறலைக் கடுமையான செயலாகக் கருதி, நாம் தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். விசாரணைக் குழு எடுத்திருக்கும் முடிவும் நாடாளுமன்றத்திடம் செய்து இருக்கும் பரிந்துரையும் இதுதான் என்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.
விசாரணைக் குழுவுக்கு இருந்த மாற்றுத் தெரிவுகள் என்ன? ஒப்புக்கு எச்சரிக்கை விடுக்கும்படி நாடாளுமன்றத்திடம் குழு பரிந்துரைத்திருக்கலாம். ஆனால், அப்படிச் செய்தால் கடுமையான ஒரு விவகாரத்தை நாங்கள் இலேசாக எடுத்துக்கொள்வதாகக் காட்டும். அதைவிட மோசமாக, நமது வழக்கங்களின் தரத்தைக் குறைத்தால், தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் பொய் சொல்வது அப்படியொன்றும்
தொடர்ச்சி 7ஆம் பக்கம்...

