கொவிட்-19 தொற்று கூடுவதைத் தொடர்ந்து சுகாதார அமைச்சு வேண்டுகோள்
சிங்கப்பூரில் செயல்படும் மருத்துவமனைகளுக்கும் சமூகப் பராமரிப்பு நிலையங்களுக்கும் தாதியர்கள், சுகாதாரப் பராமரிப்பு நிபுணர்கள், தொண்டூழியர்கள் ஆகியோரும் இதர ஊழியர்களும் தேவைப்படுகிறார்கள்.
கொவிட்-19 தொற்று கூடுவதே இதற்கான காரணம். இதைக் கருத்தில்கொண்டு சுகாதார அமைச்சு உதவிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. கொவிட்-19 தொற்றுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு ஆதரவு அளிக்கும்படி அது கேட்டுக்கொண்டு உள்ளது.
தாதியர்கள், சிங்கப்பூர் சுகாதாரப் பராமரிப்புக் குழுமங்களைச் (SHC) சேர்ந்த ஊழியர்கள் இந்த மாதம் முதல் வேலையைத் தொடங்கும் வகையில் தங்களைப் பதிந்துகொள்ளும்படி அமைச்சு அவர்களைக் கேட்டுக்கொண்டு உள்ளது.
இந்தக் குழுமம், கொரோனா தொற்று ஒழிப்பு நடவடிக்கைகளில் சுகாதாரப் பராமரிப்புத் துறை ஊழியர்களின் ஆற்றலை பெருக்க ஆதரவாக அமைக்கப்பட்டது.
இதில் சுகாதாரப் பராமரிப்புத் துறை அனுபவம் உள்ள, அனுபவம் இல்லாத உறுப்பினர்கள் பணியாற்றுகிறார்கள். அவர்களில் நிபுணர்களும் தொண்டூழியர்களும் அடங்குவர்.
அந்த உறுப்பினர்களுக்குச் சுற்றறிக்கை ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.
கொவிட்-19 தொற்று கூடுவதால் அதற்கு எதிரான முயற்சிகளில் சுகாதாரப் பராமரிப்பு அமைப்புகளுக்கு ஆதரவு அளிக்க மனிதவளம் தேவைப்படுகிறது என்று அந்தச் சுற்றறிக்கை கூறியதாக அதைப் பார்த்த ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரிவித்து உள்ளது.
மருத்துவமனைகளிலும் சமூகப் பராமரிப்பு நிலையங்களிலும் அனுமதிக்கப்படும் கொவிட்-19 தொற்று நோயாளிகளைக் கையாளுவது பணிகளில் அடங்கும்.
வேலையில் அமர்த்தப்படுவோருக்கு சம்பளத்துடன் கூடிய வேலை ஒப்பந்த ஏற்பாடு அநேகமாக இந்த மாதம் முதல் தொடங்கக்கூடும்.
பொருத்தமானவர்கள் வேலையில் சேர்க்கப்பட்டு அவர்களுக்கு சுகாதாரப் பராமரிப்பு நிலைய மற்றும் இதர அங்கீகரிக்கப்பட்ட நிலையங்களின் ஊழியர்களைப் போல் ஊதியம் வழங்கப்படும் என்று அமைச்சு தெரிவித்தது.
குறிப்பிட்ட வேலைகளுக்குச் சுகாதாரப் பராமரிப்பு பயிற்சி அல்லது செல்லுபடியாகக்கூடிய சான்றிதழ் தேவை என்றும் அமைச்சு குறிப்பிட்டு உள்ளது.
சுகாதாரப் பராமரிப்பு அமைப்புகளுக்குத் தாதியர்களும் தேவைப்படுவதாக தாதியர்களுக்கான தனிப்பட்ட பதிவுப் படிவத்தில் அமைச்சு தெரிவித்துள்ளது.
சம்பளத்துடன் கூடிய ஒப்பந்த வேலைகளை மேற்கொள்ள இயலாத தொண்டூழியர்களுக்குச் சம்பளமற்ற வேலை வாய்ப்புகளையும் அமைச்சு வழங்குகிறது.
சிங்கப்பூரில் சனிக்கிழமையன்று புதிதாக 15,836 பேருக்குக் கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. மருத்துவமனைகளில் 1,491 நோயாளிகள் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

