குறுக்குத் தீவு வழித்தடத்தின் மூன்றாவது மற்றும் கடைசி கட்டத்திற்கான கட்டுமான, வடிவமைப்புப் பணிகள் 2033ஆம் ஆண்டு இறுதியில் முடிவடையும் எனத் தெரிவதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் குறிப்பிட்டு உள்ளது.
சிங்கப்பூரின் எட்டாவது எம்ஆர்டி வழித்தடமான, அந்தத்தட பணிகள் முடிவடைவதற்கான காலம் வெளிப்படையாகத் தெரியவந்திருப்பது இதுவே முதல்முறை.
மூன்றாவது கட்டத்திற்கான முக்கிய கட்டுமான ஒப்பந்த ஏலக்குத்தகைகளைத் தாக்கல் செய்வதற்கான அழைப்பு 2024ஆம் ஆண்டின் 3வது காலாண்டில் இருந்து விடுக்கப்படக்கூடும் என்பது ஆவணங்களில் இருந்து தெரியவருகிறது.
வடிவமைப்புப் பணிகளுக்கான ஏலக்குத்தகை நடைமுறை 2031இன் இரண்டாவது காலாண்டில் தொடங்க வாய்ப்பு இருக்கிறது.
விவரங்கள் இன்னமும் இறுதி செய்யப்படவில்லை என்பதால் இந்தக் கால அளவு மாற்றத்திற்கு உட்பட்டது என்று ஏலக்குத்தகை ஆவணங்கள் தெரிவிக்கின்றன.
இருந்தாலும் முக்கியமான கட்டுமானப் பணிகள் 2033ஆம் ஆண்டின் 4வது காலாண்டு இறுதியில் முடிக்க திட்டமுள்ளது. பல முறைகளையும் ரயில் வண்டிகளையும் பரிசோதிக்க காலஅவகாசம் தேவைப்படும்.
இவற்றைக் கருத்தில்கொண்டு பார்க்கையில் குறுக்குத் தீவு எம்ஆர்டி வழித்தடத்தின் கடைசிக் கட்டம் 2034ல் அல்லது அதற்குப் பிறகுதான் செயல்பாட்டுக்கு வரும் வாய்ப்பு உள்ளது. இந்த வழித்தடம் மூன்று கட்டங்களாக உருவாக்கப்படுகிறது.
இது சாங்கியில் இருந்து துவாஸ் வரை அமைகிறது. முக்கியமான மையங்களை இணைக்கிறது. முதல் கட்டம் 29 கி.மீ. நீளம் இருக்கும். அதில் 12 ரயில் நிலையங்கள் அமைந்து இருக்கும்.
இரண்டாம் கட்டத்திற்கான பொறியியல் ஆய்வுகள் இந்த ஆண்டின் பிற்பகுதியில் முடிவடையும். 3வது கட்டம் சுமார் 13 கி.மீ. நீளம் இருக்கும்.
அதில் குறைந்தபட்சம் நான்கு எம்ஆர்டி நிலையங்கள் அமைந்து இருக்கும்.
குறுக்குத் தீவு வழித்தடம் மொத்தம் 56 கி.மீ. நீளத்திற்கு இருக்கும்.

