அனைத்துலக பங்காளித்துவ உறவுகள் காரணமாக உலக நிலைப்பாடு வலுவாகுமா என்பதற்குக் காலம்தான் பதில் சொல்லும் என்று தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென் தெரிவித்துள்ளார்.
உலக அளவில் அமைதியையும் நிலைப்பாட்டையும் ஏற்படுத்த நாடுகளுக்கு இடைப்பட்ட பல்வேறு பங்காளித்துவ உறவு களும் போதுமானவையா என்பதை ஒட்டுமொத்த அரசியல் உறுதியும் காலமும்தான் தீர்மானிக்குமென ஜெர்மனியின் மியூனிக் நகரில் டாக்டர் இங் குறிப்பிட்டார்.
அந்த நகரில் நடந்த மூன்று நாள் மியூனிக் பாதுகாப்பு மாநாடு நேற்றுடன் முடிந்தது. அதில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர், ஆசியாவும் உலகின் எஞ்சிய பகுதிகளும் சந்திக்கின்ற ஆக சுறுசுறுப்பான உலகக் கடல் வழியில் சிங்கப்பூர் அமைந்து உள்ளதைச் சுட்டினார்.
ஆகையால் நிலைப்பாடு நிலைநாட்டப்படுவதும் ஐநா கடல் சட்ட உடன்பாடு போன்ற அனைத்துலக சட்டங்கள் கடைப்பிடிக்கப்படுவதும் சிங்கப்பூரைப் பொறுத்த வரை உயிர்நாடியானவை என்று அமைச்சர் கூறினார்.
இந்த வட்டாரத்தில் நிலைப்பாடு நிலவ உதவக்கூடிய பெரிய, நடுத்தர நாடுகளைச் சிங்கப்பூர் வரவேற்பதாகவும் டாக்டர் இங் தெரிவித்தார்.
ஆசியான் தற்காப்பு அமைச்சர்கள் கூட்டத்தில் இதர நாடுகளும் கலந்துகொள்ள வகை செய்யும் ADMM-Plus ஏற்பாடு போன்ற அனைத்தையும் உள்ளடக்கிய ராணுவ பங்காளித்துவ உறவுகளை அவர் குறிப்பிட்டார்.
ADMM-Plus ஏற்பாட்டின்படி ஆசியானின் பத்து நாடுகளின் தற்காப்பு அமைச்சர்களும் ஆஸ்திரேலியா, சீனா, இந்தியா நாடுகள் உள்ளிட்ட எட்டு நாடுகளின் தற்காப்பு அமைச்சர்களும் ஆண்டுதோறும் சந்தித்து பேசுகிறார்கள்.
உலகம் முழுவதுமே இப்போதுள்ள ஏற்பாடுகள் அல்லது புதிய பங்காளித்துவ உறவுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்த டாக்டர் இங், ஆஸ்திரேலியா, பிரிட்டன், அமெரிக்கா ஆகியவை சேர்ந்து சென்ற ஆண்டு செப்டம்பரில் முத்தரப்பு பாதுகாப்பு உடன்பாடு செய்துகொண்டதைச் சுட்டிக்காட்டினார்.
அதேவேளையில், வடக்கு இந்தியப் பெருங்கடலில் ரஷ்யா, ஈரானுடன் சேர்ந்து சீனா தனது மூன்றாவது கூட்டு கடற்படை பயிற்சியை நடத்தியது. ஆசியானுடன் கூடிய தனது உறவை சீனா வலுப்படுத்தி உள்ளது என்றும் அமைச்சர் கூறினார்.
சாங்கி வட்டார மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரண ஒருமுகப்பாட்டு மையம் போன்ற அமைப்புகளைத் தோற்று வித்து அவற்றின் வழியாக பல நாடுகளுடன் உறவை சிங்கப்பூர் பலப்படுத்தி இருப்பதாகவும் டாக்டர் இங் குறிப்பிட்டார்.
பருவநிலை மாற்றம் என்பது உலகம் சமாளிக்கவேண்டிய மற்றொரு சவால் என்றும் அவர் தெரிவித்தார்.
இத்தகைய பல தரப்பு முயற்சிகள் எல்லாம் நம் வட்டாரத்தில் அமைதியையும் நிலைப்பாட்டையும் எற்படுத்த போதுமானவையா என்பதற்கு ஒட்டுமொத்த அரசியல் உறுதியும் காலமும்தான் பதில் சொல்லும் என்றும் டாக்டர் இங் கூறினார்.

