இந்தோனீசியா ஓமிக்ரான் ரகக் கிருமிப் பரவலைச் சமாளிக்கத் திணறும் வேளையில், $18.8 மில்லியன் மதிப்புமிக்க மருத்துவக் கருவிகளையும் மருந்துப் பொருள்களையும் சிங்கப்பூர் வழங்கியுள்ளது.
தெமாசெக் அனைத்துலக அறநிறுவனத்தின் தலைமை நிர்வாகி பெனடிக்ட் சியோங், 697 செயற்கை சுவாசக் கருவிகளையும் ஒரு மில்லியன் முகக்கவசங்களையும் சிங்கப்பூருக்கான இந்தோனீசியத் தூதர் சூர்யோ பிரதோமோவிடம் திங்கட்கிழமை (பிப்ரவரி 21) வழங்கினார்.
அவற்றில் 418 செயற்கை சுவாசக் கருவிகளும் 600,000 முகக்கவசங்களும் இந்தோனீசிய ராணுவத்திற்கு வழங்கப்படும். எஞ்சியவற்றை மருத்துவமனைகளுக்கும் முன்களப் பணியாளர்களுக்கும் அந்நாட்டு தேசியக் காவல்துறை விநியோகிக்கும்.
கிருமிப் பரவலைச் சமாளிக்கப் பலதரப்பினரின் கூட்டு முயற்சி தேவை என்றும் சமூகத்தை வலுப்படுத்துவதே முக்கிய அம்சம் என்றும் திரு சியோங் கூறியதாக, இந்தோனீசியத் தூதரக அறிக்கை தெரிவித்தது.
தெமாசெக் அறநிறுவனம் இந்தோனீசியாவிற்கு வழங்கிவரும் தொடர் ஆதரவுக்கு திரு சூர்யோ பிரதோமோ நன்றி தெரிவித்ததாகவும் அது குறிப்பிட்டது.
இந்தோனீசியாவில் ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 20) 48,484 பேருக்குக் கிருமித்தொற்று உறுதியானது; 163 பேர் மாண்டனர். இதுவரை அந்நாட்டில் மொத்தம் 5.2 மில்லியன் பேர் கொவிட்-19ஆல் பாதிக்கப்பட்டனர்; நோய்த்தொற்றால் மாண்டோர் மொத்த எண்ணிக்கை 146,000.
கிருமிப் பரவல் தொடங்கியதில் இருந்தே சிங்கப்பூர் பல விதங்களில் இந்தோனீசியாவிற்கு உதவிக்கரம் நீட்டி வருகிறது.


